Thursday, 17 April 2025

ஆவி உலகம்-தொடர்-பாகம்-9

 

ஆவி உலகம்-தொடர்-பாகம்-9

..

இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா?

அல்லது சிலர் பிறக்காமல் போவார்களா?

மிருகங்கள் எல்லாம் இறந்தபிறகு ஆவியாக சுற்றுமா?

..

இந்த கேள்விக்கு விடைகூறும்முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.

குண்டலினி சக்திக்கு ஏழு மையங்கள் உள்ளன. அதில் கீழ் உள்ளது மூலாதாரம், மேல் உள்ளது சகஸ்ராரம்.

சகஸ்ராரத்திற்கு உயிர் சென்றால் பிரம்மத்தில்(கடவுளில்) கலந்துவிடும்.

அப்போது உடல் இயங்காமல் நின்றுவிடும், முச்சு நின்றுவிடும். மனம் நின்றுவிடும்.

..

இதற்கு நேர் மாறான ஒரு நிலை உள்ளது.

அதுதான் மூலாதாரம் இந்த இடத்திற்கு உயிர் சென்றால்கூட மூச்சுநின்றுவிடும், மனம்நின்றுவிடும்.

ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரம் என்ற ஒரு மையம் இருக்கிறது.

திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக உயிர் மூலாதாரத்தில் நிலைகொள்ளும்.

அப்போது உடல் உணர்வற்றநிலைக்கு சென்றுவிடும்.

மனிதன் இறந்தவனாகிவிடுகிறான்.

இதயம் நின்றுவிடுகிறது. மூச்சும் நின்றுவிடுகிறது.

..

மூலாதாரத்தில் உயிர் நிலைகொண்டால் மனிதன் உயிர் அதற்குள்ளே அடங்கிவிடுகிறது.

சகஸ்ராரத்திற்கும்,மூலாதாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.

சகஸ்ராரத்தில் மனிதன் கடவுளாகிறான்.

மூலாதாரத்தில் மனிதன் எதுவுமற்ற சூன்யமாகிறான்.

அந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் உடலைவிட்டு சூட்சும உடல் பிரியாது.

மனம் இயங்கிக்கொண்டிருந்தால்தான் சூட்சும உடல் தனியாக பிரியும்.

மூலாதாரத்தில் உயிர் ஒடுங்கிவிட்டால் சூட்சுமஉடலும் அதற்குள் ஒடுங்கிவிடும்.

இந்த நிலையில் மனிதன் தூக்கத்தில் இருக்கும்போது எந்த நிலையில் இருப்பானோ

அதேநிலைக்கு சென்றுவிடுவான்.

எதுவும் தெரியாது.

..

ஒவ்வொரு நாளும் நாம் தூங்குகிறோமே அப்போது மூலாதாரத்திற்கு செல்கிறோமா என்று கேட்டால், முற்றிலுமாக அங்கு செல்வதில்லை. உடல் உறுப்புகளை இயக்குவதற்காக மூளை இயங்கிக்கொண்டே இருக்கிறது.

எனவே முழுவதும் மூலாதாரத்திற்குள் உயிர் அடங்காது.ஆனால் அதன் அருகில் உள்ள மையத்தில் அது இருக்கும்.

..

திடீரென்று ஏற்படும் அதிர்ச்சி,அல்லது வேறுபல காரணங்களால் உயிர் மூலாதாரத்தில் சென்று ஒடுங்கிவிட்டால் பின்னர் எல்லாம் முடிந்துவிடும். மறுபிறப்பு ஏற்படாது.

..

இந்த விஷயத்தை மிருகங்களுக்கு பொருத்திப் பார்ப்போம்.

ஒரு மானை புலி ஓடஓட விரட்டிக் கொல்கிறது.

இப்போது அந்த மானின் உயிர் படிப்படியாக மூலாதாரத்திற்குள் சென்றுவிடுகிறது. எனவே அதன் சூட்சுமஉடல் அதற்குள்ளே அடங்கிவிடுகிறது. உடலைவிட்டு சூட்சும உடல் வெளியே வராது. அதற்கு மறுபிறப்பு ஏற்படாது.

ஆனால் இந்த விதி எல்லா மிருகங்களுக்கும் எல்லா காலங்களிலும் பொருந்தாது.

.

உதாரணமாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பசுவை எடுத்துக்கொள்வோம்.

அந்த வீட்டில் இறந்த முன்னோர்தான் அந்த வீட்டில் பசுவாக பிறக்கிறார் என்ற கருத்து உண்டு.

அடுத்து மனித பிறவி எடுப்பதற்கு முன்பு சில காலம் பசுவாக வாழ்ந்து தனது பாவகர்மங்களை கழிப்பதற்காக முன்னோர் பசுவாக பிறந்து மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக ஒரு கருத்து உண்டு.

எனவேதான் வீட்டில் வளர்க்கும் பசுவையும், உழவுக்கு பயன்படுத்தப்படும் காளைகளையும் கொல்லக்கூடாது. கடைசி காலம் வரை அவைகளை அன்போடு வளர்த்து இயற்கையாகவே மரணமடையும்படி விட்டுவிட வேண்டும்.

இஇ

அவ்வாறு இயற்கையாகவே மரணமடையும் பசுக்களின் உயிர் மூலாதாரத்திற்குள் சென்று தங்காமல் சூட்சுமஉடலை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறது.

அடுத்து சில நாட்களில் அது மனிதனாக பிறக்க வாய்ப்பு உள்ளது.

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் அனைத்தும் இதேபோல மறுபிறப்பு அடைய வாய்ப்பு உள்ளது.

..

எனவே மிருகங்கள் விஷயத்தில் இரண்டு கருத்து உள்ளது.

சில மிருகங்கள் மறுபடி பிறப்பு எடுக்காது. சில மிருகங்கள் மறுபடி பிறப்பு எடுக்கிறது.

இதே விஷயம் மிருகங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்றால், இல்லை.  சில மனிதர்களுக்கும் இதுபொருந்தும்.

எல்லா மனிதர்களும் இற்நத பிறகு ஆவி உடலோடு அலைவார்கள் என்று கூறமுடியாது.

மேலே கூறியதுபோல இறக்கும்போது மூலாதாரத்திற்குள் யாருடைய உயிர் சென்று ஒடுங்குகிறதோ அந்த மனிதன் மீண்டும் பிறப்பதில்லை.

அப்படியானால் அவர்கள் செய்த பாவம் என்ன ஆவது?

அவர்கள் செய்த புண்ணியம் என்ன ஆவது?

புண்ணியவான்களுக்கு இப்படிப்பட்ட நிலை வாய்க்காது. அவர்களது புண்ணிய பலன் காரணமாக சூட்சும உடல் இயங்க ஆரம்பிக்கும். மனிதர்களில் மந்தமானவர்கள், சோம்பேரிகள், மனிதனா மிருகமா என்று கண்டறிய முடியாத ஜடநிலையில் வாழ்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் ஏதோஓர் அதிர்ச்சியில் இறந்துபோனால் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் தெரிந்து யாருக்கும் பாவம் புரிவதில்லை, புண்ணியமும் செய்வதில்லை. கிட்டத்தட்ட மிருகமனநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

எப்படி இருந்தாலும் சிறிதாவது பாவம் இருக்குமே எது என்னவாகும்?

அந்த பாவம் அவர்களது குடும்த்திற்கு அல்லது அன்பிற்குரியவர்களுக்கு சென்று சேரும்.

..

இதனால்தான் சிறுவயதில் எதுவும் அறியாத வயதில் யாராவது அகால மரணம் அடைந்தால் அவர்களை எரிக்காமல், ஆறுகளில் விட்டுவிடுகிறார்கள். அல்லது மிருகங்களுக்கு உணவாக விட்டுவிடுகிறார்கள். அந்த குழந்தை அல்லது சிறுவர் முற்பிறவிகளில் செய்துள்ள பாவம் அந்த உடலை தின்னும் பிராணிகளுக்கு செல்லும் என்று நம்பிக்கை உள்ளது.

அப்படி இறப்பவர்கள். மீண்டும் பிறக்கவாய்ப்பு குறைவு.

..

இதைத்தவிர இன்னும் சில வழிமுறைகள் மூலம் மனிதன் மீண்டும் பிறக்காமல் இருக்க செய்வார்கள்.

உதாரணமாக சில மத பிரிவுகளில் மனிதனுக்கு மறுபிறப்பு இல்லை என்று நம்புகிறார்கள்.

அந்த மதப்பிரிவில் பிறந்து வளரும் ஒருவன் அவ்வாறே நம்புகிறான்.

இந்த ஒரு வாழ்க்கைதான் உள்ளது.இனிமேல் இந்த உலகிற்கு வரப்போவதில்லை என்றே நம்புகிறான்.

ஆனால் அவன் பாவம்,புண்ணியம் இரண்டையும் செய்கிறான்

கர்மநியதி கோட்பாட்டின் படி ஒருவன் செய்த பாவத்திற்கு தக்க பலன் உண்டு

..

இப்போது அந்த மனிதன் இறந்துவிட்டான். அவனது உடலை நன்றான துணியால் சுற்றி இறுக்கி மண்ணில் புதைத்துவிட்டார்கள். அவனது ஆவி என்ன செய்யும்?

பல்வேறு கனவுகளை கண்டுகொண்டிருக்கும்.

எத்தனை பாவம் செய்தானோ அதற்கு ஏற்றபடி கொடும் கனவும். பலர் தன்னை துரத்துவதுபோலவும், கொல்ல வருவது போலவும், துன்புறுத்துவதுபோலவும் பல கனவுகளை கண்டுகொண்டிருப்பான்.

கனவிலிருந்து விழிப்பு என்பது ஏற்படவே செய்யாது.

சிலநேரங்களில் நாம் இதை அனுபவித்திருக்கலாம்,நாம் நீண்ட கனவு கண்டுகொண்டிருப்போம்,அது முடியவே முடியாது.அப்போது யாராவது வந்து நம்மை தட்டி எழுப்புவார்கள். அப்போது நாம் விழப்போம்.அதுவேளைகனவும் நின்றுவிடும்.

இதேதான் ஆவிக்கும் நிகழ்கிறது. அந்த ஆவியை தட்டி எழுப்புவதற்கு யாரும் இல்லை. எனவே அது கனவு கண்டுகொண்டே இருக்கிறது. பாவம் நிறைந்த மனிதன் துன்பங்கள் நிறைந்த கனவை கண்டுகொண்டெ இருக்கிறான். காலம் என்பதே அங்கு இல்லை. எப்போது அந்த கனவு முடியும் என்பது தெரியாது, தொடர்ந்த வேதனைகள் படிப்படியாக குறையத்தொடங்குகின்றன.இப்போது அவன் செய்த பாவங்களின் பலனை அவன் கனவில் அனுபவித்து முடித்துவிட்டான். இனி புண்ணியத்தின் பலன் பாக்கி இருக்கிறது. இப்போது நல்ல கனவுகள் வரத்தொடங்குகின்றன. எந்த அளவு அவன் புண்ணியம் செய்திருக்கிறானோ அதுவரை நல்ல கனவுகள் வந்துகொண்டே இருக்கும். முடிவில் உயிர் மொத்தமாக மூலாதாரத்தில் ஒடுங்கிவிடும்.

ஆழ்ந்த தூக்கத்தில் எதுவும் தெரியாததுபோல உயிர் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடும்.

இது மீண்டும் எழுந்துவரும் தூக்கம் அல்ல. இது நிரந்த தூக்கம்.

..

ஆவிக்கு மூலாதாரம் உண்டா? உண்டு. தூலஉடலுக்கு இருப்பதுபோலவே சூட்சுமடஉடலுக்கும் உண்டு.

..

விஞ்ஞானத்தில் கருந்துளை பற்றிய ஒன்றை படித்திருப்பீர்கள்.

முன்பு ஒரு கருந்துளை இருப்பதாக கூறினார்கள். தற்போது பல கருந்துளை இருப்பதாக கூறுகிறார்கள்.

இதுபற்றி நமது முன்னோர்கள் ஏற்கனவே கூறிவிட்டார்கள்.

அவர்கள் கூறிய வார்த்தைதான் வேறு.

இதை அவர்கள் அவ்யக்கதம் என்றார்கள். அவ்யக்தம் என்றால் இயங்காத நிலை.

ஒவ்வொருவரின் உடலிலும் அவ்யக்தம் உள்ளது.

சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று சக்திகளும் இயங்க துவங்குவதற்கு முன்பு உள்ளநிலை. ஒடுக்கநிலை. பிரபஞ்சம் முற்றிலும் ஒடுங்கியிருக்கும் நிலை.

எப்படி ஆன்மா எல்லா உயிருக்குள்ளும் இருக்கிறதோ அப்படி அவ்யக்தமும் எல்லா உயிருக்குள்ளும் உள்ளது.

தற்கால விஞ்ஞான மொழியில் சொன்னால் கருந்துளை.

இந்த கருந்துளை ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கிறது.

இந்த கருந்துளைதான் மூலாதாரம்

..

தொடரும்...

..

இன்னும் நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

அடுத்துவரும் பதிவுகளில் பதில் சொல்கிறேன்.

உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,

டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.

 

..

சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (17-4-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...