Monday, 4 January 2021

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-5

 மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-5

...

81.

 கிருத யுகத்தில் தர்மம் நான்கு பாதங்கள் கொண்டதாக இருக்கும்.  எங்கும் சத்யமே நிறைந்திருக்கும்.

( தர்ம தேவதையை ஒரு பசுவாக உருவகப் படுத்தினால்,அதற்கு நான்கு பாதங்கள் இருக்குமல்லவா? இவ்வாறு இந்த ஸ்லோகத்தின்  பொருளைப் பார்க்க வேண்டும். ஒரு பசு நான்கு  கால்களுடன்  இருக்கும் போது அது நலமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஒவ்வொரு காலாக ஒடிந்தால் நடக்க முடியாமல் நிலை தடுமாறி வீழ்ந்து விடுமல்லவா?


 நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும் தத்தமக்குரிய தர்மங்களை பூரணமாகக் கடைப் பிடிப்பவர்களாக இருப்பார்கள். தர்ம தேவதை திருப்தியோடு  இருக்கும்.

 அடுத்த யுகமான திரோத யுகத்தில் மனிதர்களுக்கு கொஞ்சம் தர்மத்திலுள்ள பற்று குறையும். அந்த யுகத்தில் பசு ரூபமான தர்ம தேவதை தன் ஒரு காலை இழந்து மூன்று  கால்களுடன்  சிரமப்படும்.  அதாவது தர்மம் உலகில்  முழுமையாக இல்லாது அங்கங்கே குறைந்து காணப்படும்.

 அடுத்தது துவாபர யுகம். இந்த யுகத்தில் தர்மம் மேலும் குறையும். மனிதர்களில் துர்குணங்கள் கொண்டவர்கள் மிகுதியாக இருப்பார்கள். தர்மத்தின் கால்களில் இன்னொன்று குறையும். இரண்டு கால்களோடு  ஒரு பசு எவ்வளவு சிரமப் படும் என்று யோசித்துப் பாருங்கள். அவ்வளவு சிரமம் துவாபர யுகத்தில் தர்மத்துக்கு ஏற்படும்.

 இப்போது நடப்பது நான்காவதான கலியுகம். இதில் தர்மம் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் திண்டாடும்.  அதாவது உலகில் அதர்மம் முக்கால் பங்கு  ஓங்கி இருக்கும். அங்கங்கே தர்மம் திண்டாடித் திணறிக் கொண்டிருக்கும்.


 இப்போது கலியுகம் தொடங்கி ஐயாயிரத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இப்போதே தர்மத்தின் திண்டாட்டத்தை நன்கு உணர முடிகிறது. . இன்னும் கலியுகத்தில் ஆண்டுகள் மிச்சமிருக்கின்றன.

 இனி போகப்போக தர்மத்தின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைக் காண முடியும். ஆனால் இந்தக் கலியுகத்தில் தர்மத்தின் மீது பற்றுதல் கொண்டு, மற்றப் பற்றுக்களை விட்டவன் மிக எளிதில் மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியும்.)

...........

82.

 மற்ற யுகங்களில் தர்மம் ஒவ்வொரு பாதமாக குறைந்து கொண்டே வரும். திருட்டு, பொய், வஞ்சனை, இவற்றால் தர்மம் குறைந்து கொண்டே போகும்.

.........

83.

 கிருதயுகத்தில் மனிதர்கள் நோயற்றவர்களாகவும், எல்லா வித விருப்பங்களும் நிறைவேறியவர்களாயும், நானூறு வருடங்கள் ஆயுள் கொண்டவர்களாகவும் இருந்தனர். திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் மனிதர்களின் ஆயுள் ஒவ்வொரு பாதமாக குறைபடும்.

( முதல் யுகம் கிருத யுகம். அதில் மனிதர்கள் நானூறு வயது வரை ஆயுள் கொண்டவர்கள். 

இரண்டாவது யுகமான திரேதா யுகத்தில் மனிதர்கள் முந்நூறு வயது வரை ஆயுள் கொண்டவர்கள். 

மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில் மனிதர்களின் ஆயுள் இருநூறு . 

கலியுகத்தில் நூறு.

 முதல் யுகத்தில் ஆயுள் நானூறு ஆண்டுகள் என்றாலும், அப்போது வாழ்ந்த மனிதர்களுடைய தவத்தாலும் தர்மானுஷ்டானங்களாலும் அளவற்ற ஆயுள் பெற்றிருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான

 வருடங்கள் உயிர் வாழ்ந்தார்கள். இப்படியே இரண்டாவதான யுகத்திலும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்  வாழ்ந்தார்கள்.

 மூன்றாவதான துவாபரயுகத்தில் தவமில்லாது போய் விட்டது. தர்மமும் பாதிக்கும் மேல் க்ஷீணித்து விட்டது. எனவே, குறிப்பிட்டபடி இருநூறு வயது அல்லது அதற்கும் குறைவாகவே வாழ்ந்தார்கள். இது கலியுகம்,. இந்த யுகத்தில் மனிதனின் ஆயுள் நூறு. அதர்மத்தின் காரணமாக இந்த நூறு வயது வரை வாழ்வது கூட குறைந்து விட்டது. தவமும் சீலமும் ஒருவரது ஆயுளை வளர்த்துக் கொண்ஆட போகும். அவை இல்லாதபோது குறிப்பிட்ட அளவு ஆயுளும் குறைந்து போகும்.

...........

84.

 வேதங்களில் கூறப்பட்ட ஆயுளும், காம்ய  கர்மாக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்களும், சாபங்களும், வரங்களும், பிரபாவங்களும், மனிதர்களுக்கு அந்தந்த யுகத்துக்கு தக்கபடி பலன்  கொடுக்கும்.

............

85.

 கிருத யுக தர்மங்கள் வேறு. திரேதா யுக தர்மங்கள் கிருத  யுக தர்மங்களை விடக் குறைவானவை. அவற்றைவிட குறைவானவை துவாபர யுக தர்மங்கள். கலி யுக தர்மங்களோ இவற்றிலிருந்தும் குறைந்து இருக்கும். இவ்வாறாக யுகங்களைப் பொறுத்து தர்மங்கள் வேறு பட்டவையாக இருக்கும்.

...........

86.

 கிருதயுகத்தில் தவம் செய்வதே மேலான தர்மம். திரோதா யுகத்தில் தவம் குறைந்து, ஆத்ம ஞானம் மேலான தர்மமாக  இருக்கும். துவாபர யுகத்தில் அதுவும் குறைந்து  யக்ஞம் செய்தல் மேலான தர்மம் என்றாகும். கலி யுகத்தில் தானம் செய்தலே சிறந்த தர்மமாக கூறப் படும்.

........

 87.

 மிக்க தேஜஸ் பொருந்தியவரான பிரம்மா அனைத்து உயிர்களையும் காப்பதற்காக தன்னிலிருந்து  நான்கு வருணத்தாரைத் தோற்றுவித்தார். அவரவர்க்குரிய தர்மங்களையும் ஏற்படுத்தினார்.

...................

88.

 வேதங்களை ஓதுவதும் , வேதத்தை கற்பித்தலும், தனக்காக யக்ஞங்கள் செய்தலும், பிறருக்குகாக யக்ஞங்கள் செய்வித்தலும், பிறருக்கு தானம் கொடுத்தலும், பிறரிடமிருந்து தானம் வாங்குதலும் என்னும்  ஆறையும் பிராம்மணனுக்குரிய தர்மங்களாக ஏற்படுத்தினார்.

(யாகம் என்றால் பிரதிபலனை கருதி செய்யப்படும் செயல். யக்ஞம் என்றால் பிரதிபலன் கருதாமல் செய்யப்படும் செயல்)

.................

89.

 மக்களைக் காத்தல், தானமளித்தல், யாகம் செய்தல், வேத மோதுதல், விஷயசுகங்களில் மூழ்காமலிருத்தல் முதலானவைகளை க்ஷத்ரியர்களுடைய தர்மங்களாக ஏற்படுத்தினார்.

............................

90.

 பசுக்களைக் காத்தல், யாகங்கள் செய்தல், வேத பாராயணம் செய்தல், வாணிபம் செய்தல், வட்டிக்குப் பணம் கொடுத்து  ஜீவித்தல், விவசாயம் செய்தல் இவைகள் வைசியர்களின் தர்மங்கள்.

..........

91.

 பிரம்ம தேவர், சூத்ரர்களுக்கு விதித்த தர்மமோ ஒன்றே ஒன்று தான் .அது. அசூயையின்றி(சோம்பலின்றி) முதலில் கூறப்பட்ட மூன்று  வர்ணத்தாருக்கும்  பணிவிடை புரிதல்.

...

பிராமணர்,சத்திரியர்,வைசியர் என்ற மூன்று வர்ணத்தாருக்கும் உரிய பணிகளை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.

இதை படித்தவுடன் பலர் தங்களை சூத்திரர்களாகக் கருதிக்கொண்டு கோபப்படுவார்கள்.

மிகமிக பழைய காலத்தில் கூறப்பட்ட நான்கு வர்ணங்களும் இன்று வழக்கத்தில் இல்லை.

இன்று யார் சூத்திரர்? அப்படி யாராவது இருக்கிறார்களா?

மனுஸ்மிருதி கூறியவடி வாழும் பிராமணர்கள் இருக்கிறார்களா?

க்ஷத்திரியர்கள் இருக்கிறார்களா? வைசியர்கள் இருக்கிறார்களா?

சூத்திரர்கள் இருக்கிறார்களா? இல்லை..

காலம் மாறிவிட்டது..இன்று யாரும் யாருக்கு கீழும் வேலைசெய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

இந்த நாட்டில் யார்வேண்டுமானாலும் உயர்ந்தபதவியை அடையலாம்.

எனவே இதைப்படிக்கும்போது உணர்ச்சி வசப்படவேண்டியதில்லை.

இவைகள் மிகப்பழைய காலத்தில் வழக்கத்தில் இருந்தவை என்பதை மறக்கவேண்டாம்.

.............

92.

 நாபிக்கு கீழுள்ள  பாகங்களை விட மேலுள்ள பாகங்கள் பரிசுத்தமானவை என்று கூறப் பட்டுள்ளது. 

அதிலும் முகம் மிகவும் பரிசுத்தமானதுஎன்பது பிரம்மாவின் கூற்று.

(உடலை நான்கு பாகங்களாக பிரித்தால் மேலே உள்ள தோள்களும், முகமும் பரிசுத்தமானவை,கீழே உள்ள வயிறும் கால்களும் அசுத்தமானவை.பிராமணனின் தவ ஆற்றலால் எழும் தேஜஸ் முகத்தில் பிரதிபலிக்கிறது. க்ஷத்திரியர்களின் வீரமும்,ஆளுமையும் அவர்களது தோள்களில் பிரதிபலிக்கிறது.வைசியர்களின் உழவும்,கால்நடை,வியாபாரம் போன்றவை வயிற்றில் தெரிகிறது. வைசியர்கள் செழிப்பாக இருந்தால் வயிறு சுருங்கியிருக்காது. சூத்திரர்களின் வேலைத்திறன் அவர்களது கால்களில் தெரிகிறது) 

................

93.

 வேதங்களை உணர்ந்துள்ளதால் படைக்கப் பட்டவர்களுள் பிரம்மணன் மேலானவன்.

..............

94.

ஹவ்ய, கவ்யங்களை அளிப்பதற்காகவும், உலகம்  காக்கப்படுவதற்காகவும் , பிரம்மா பிராம்மணனைப் படைத்தார்.


( ஹோமம் செய்து மந்திரங்களால் தெய்வங்களை அழைத்து அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு ஹவிஸ் எனப்படும். இதையே ஹவ்யம் என்பர். இது ஹோமத்தில் இடப்படும். ஹோமத் தீயில் வார்க்கப்படும் நெய் பிரதானமான ஹவிஸ். பால், நெய், சேர்த்த சாதமும் ஹவிஸாகும். தேவர்களுக்கான உணவு  ஹவ்யம். இதே போன்று பித்ருக்களுக்கு அளிக்கும் உணவு கவ்யம் எனப்படும்.

(உலகம் காக்கப்படுவதற்காக பிராமணர்களைப் படைத்தார்.பிராமணன் தன் தவவலிமையால் உலகத்தைக் காக்கிறான்)

................

95.

யாருடைய வாயினின்றும் வெளிப்படும் மந்திரங்களால் தேவர்கள் தங்களுக்கு அளிக்கப் படும் ஹவ்யத்தை உண்பார்களோ, பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப் படும் கவ்யத்தை உண்பார்களோ, அதை விட உயர்ந்தது யாதுளது?

............

96.

 பஞ்ச பூதங்களால் உருவாக்கப் பட்ட வற்றுள் பிராணிகள் உயர்ந்தவை. பிராணிகளில்  புத்தியால் ஜீவனம் செய்பவை உயர்ந்தவை. புத்தியுடையவற்றில் மனிதர்கள் உயர்ந்தவர்கள்.

............

97.

பிராம்மணர்களிலேயும் வித்வான்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் தங்கள்  அனுஷ்டானங்களில் புத்திரியைச் செலுத்துபவர்கள்  உயர்ந்தவர்கள். அவர்களிலும் அத்தகு கர்மானுஷ்டானங்களை நன்கு  இயற்றுபவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட பிரம்மஞானிகள்  உயர்ந்தவர்கள்.

.....................

98.

 பிரார்த்தணனுடைய உற்பத்தியே தர்மத்துக்கு சாஸ்வதமான சரீரம் . பிராம்மணன் தர்மத்தை கடைப் பிடிப்பதற்காகவே  படைக்கப் பட்டவன். அத்தகு தர்மத்தை கடைப் பிடிப்பதனால்  பிரம்மபதத்தை அடைவான்.

...........

99.

 எல்லா  உயிர்களுக்கும் உரிய தர்மமனைத்தையும் காக்கும் தலைவன் பிராம்மணன்.

....................

100.

 பூமியிலுள்ள அனைத்தும் பிராம்மணனுடையது.  எனவே பிராம்மணன் எல்லா செல்வங்களுக்கும் உடைமையாளன்.

............

இதில் கூறப்பட்டுள்ள பிராம்மணன் என்பவன் தற்காலத்தில் வாழும் பிராமணன் அல்ல.

பிராமணனின் லட்சணம் குறித்து வேதம் கூறுவதை படிக்க வேண்டும்

..

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?

-

சாமவேதம்-  வஜ்ரஸுசிகோபநிடதம்

-

1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது

-

2. பிராமணர் சத்திரியர்  வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும். 

பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?

-

3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)

-

4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

5.ஆனால் பிறப்பால் வந்த  ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற  ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது

-

7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை

-

8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.

-

9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்? 

இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல்  ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எவனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.

-

இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள  - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.

..

ஸ்ரீகிருஷ்ணருடைய கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.

-

பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.

-

பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. 

..

இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

சிலர் பகவத்கீதையினால்தான் ஜாதி வளர்ந்தது என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் அவ்வாறு கூறவில்லை. பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் பிரிக்கப்பட்டதாக கூறவில்லை. ஸ்வபாவத்தில் பிறந்த குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாக கூறுகிறார்.

முதலில் ஜாதிகள் பிறப்பை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன.பிறகு அது பரிணமித்து குணத்தை அடிப்படையாகக்கொண்டவையாக மாறியது.

-

18.42 அந்தக்கரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல்,தவம்,தூய்மை,பொறுமை,நேர்மை,சாஸ்திரஞானம்,விக்ஞானம்,கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணனுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்

-

பிறக்கும்போதே ஒருவன் மேலே கூறப்பட்டுள்ள குணங்களுடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே சாஸ்திர ஞானத்துடனா பிறக்கிறான்? பிறக்கும்போதே ஐம்புலன்களையுடம் அடக்கியவனாகவா பிறக்கிறான்?

ஏதோ ஒருசிலர் அப்படி பிறக்கிறார்கள்.

மற்றவர்கள் அனைவரும் கடுமையான தவத்திற்கு பிறகே பிராமணநிலையை அடைகிறார்கள்.

எனவே ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பின் அடிப்படையில் ஜாதி வருவதில்லை என்பதை தெளிவாக கூறுகிறார்.

..

இந்த உலகமே பிராமணனுக்கு சொந்தமானது என்றால் என்ன அர்த்தம்?

பிராமணன் இந்த உலகத்தையே தனது உடலாகக் காண்கிறான். உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தனதாகக் காண்கிறான்.அவன் தன்னை ஓர் உடலாகக் காண்பதில்லை. உலகத்தையே தனது உடலாகக் காண்பதால் உலகமே அவனுக்குரியதாகிறது..

..

இதைப்பற்றிய மேலும் பல விளக்கங்கள் இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்

..

..

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


No comments:

Post a Comment