📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-10
அத்தியாயம் -2
...........
31.
பிராம்மண குழந்தைக்கு வைக்கும் பெயர் சுபம் தரும் வண்ணம் இருக்க வேண்டும். க்ஷத்திரியக் குழந்தைக்குப் பலம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். வைசியக் குழந்தைக்கு செல்வம் தரும் வாசகமாக இருக்க வேண்டும். சூத்திரர்களுக்கு ஏவலன் என்பதை அறியும் வகையில் பெயர் வைக்க வேண்டும்.
....................
32.
பிராம்மணனுடைய பெயர் சர்மாஎன்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு ரக்ஷணம் சேர்ந்ததாக இருக்க வேண்டும். வைசியனுக்கு செல்வத்தோடு கூடியதாக இருக்க வேண்டும். சூத்திரனுக்கு தாசன் என்ற பதம் கூடியதாக இருக்க வேண்டும்.
( பிராம்மணனுக்கு நாராயணசர்மா, சிவ சர்மா என்று தெய்வப் பெயர்களாக அமைய வேண்டும். பிராம்மணன் வீட்டில் எப்போதும் வேத சப்தமும், ஹோமப்புகையும் இருக்கும். அங்கே குழந்தைகளையோ பெரியவர்களையோ கூப்பிடும் குரல் கூட புண்ணியத்தைத் தருவதாக அமைய வேண்டும்.
(க்ஷத்திரியனுக்கு வர்மா என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும் பெயரிலேயே கம்பீரமும் இவன் காக்கப் பிறந்தவன் ” என்ற தொனியும் தெரிய வேண்டும்.
( வைசியன் செல்வத்தைப் பெருக்குபவன். அதை உணர்த்தும் வண்ணம் தன குப்தன் என்பது போன்று பெயர் அமைய வேண்டும்.. வைசியனுக்கு குப்தா என்றபதம் அல்லது பாலன் என்ற பதம் பெயரோடு சேர்க்கப் படவேண்டும்.
( சூத்திரன் பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்குப் பணிபுரிபவன் என்பதால் இவன் பெயரோடு தாசன் என்ற பதம் சேர்க்கப் பட வேண்டும்)
.............
33.
பெண்களுக்கு இடும் பெயர்கள் சுகமாக உச்சரிக்கக் கூடியதாகவும், குரூரமான அர்த்தம் கொடுக்கும் சொல்லாக இல்லாமலும், பொருளற்றதாக இல்லாமலும், மனத்துக்கு ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியதாகவும், மங்களமான சொல்லாகவும் நெடில் எழுத்து ஈற்றாக இருப்பதாகவும், அதாவது நீட்டி தீர்க்கமாகச் சொல்லும் அட்சரத்தோடு முடிவதாகவும்
( உதாரணமாக ரமா, உமா, என்ற பெயர்களைக் கூறலாம் )
ஆசிகளைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ( காயத்ரீ தேவி, லக்ஷ்மீ தேவி முதலான பெயர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.)
....................
34.
நான்காம் மாதத்தில், குழந்தையை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று சூரியனை தரிசிக்கச் செய்ய வேண்டும். ஆறாவது மாதம் அன்னம் ஊட்டும் சடங்கைச் செய்ய வேண்டும். அல்லது அவரவர் குல வழக்கப் படி அந்தந்த சடங்குகளைச் சுபதினங்களில் செய்ய வேண்டும்.
( இந்தச் சடங்குக்கு அன்னபிராசனம் என்று பெயர். விக்னேஸ்வர பூஜை செய்து, புண்யாஹவாசன தீர்த்தத்தால் குழந்தையையும், அன்னத்தையும் ப்ரோக்ஷிக்க வேண்டும். அதாவது தீர்த்தத்தை குழந்தையின் மீதும், அன்னத்தின் மீதும், தெளித்து மந்திர பூர்வமாக சுத்தமாக்குறோம்.
பிரதிசரம் என்ற கங்கணம் கட்ட வேண்டும். பிரதிசரம் என்பது கயிறு. ஒன்பது இழைகளால் ஆனது.
இதை மந்திரபூர்வமாக குழந்தையிடம் கட்ட வேண்டும். இதை கங்கண தாரணம் என்றும் சொல்வார்கள். ஆண் குழந்தைக்கு வலது கையிலும், பெண் குழந்தைக்கு இடது கையிலும் கட்ட வேண்டும்.
பிறகு தங்கப் பாத்திரத்தில் அன்னம் வைத்து, அதனோடு சிறிது தயிர், தேன், நெய் மூன்றையும்சேர்த்துக்கலந்து, குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
இதனால் குழந்தைக்கு ஓளஷதி தேவதைகளின் அனுக்ரஹமும், ஜல தேவதைகளின் அனுக்ரஹமும் ஏற்படும்.
.....................
35.
” சூடாகர்மா” என்னும் குடுமி வைக்கும் சடங்கானது பிராம்மண க்ஷத்ரிய வைசியர்களுக்கு முதலாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டில் செய்யப் பட வேண்டியது. அல்லது அவரவர் வழக்கப் படி செய்ய வேண்டியது.
.................
36.
பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்ரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் உபநயனம் செய்ய வேண்டும்.
இது பொது விதி. அனைத்து பிராம்மணர்களுக்கும், அனைத்து க்ஷத்ரியர்களுக்கும், அனைத்து வைசியர்களுகப்குமான பொது விதி. விசேஷமான விதி அடுத்துச் சொல்லப் படுகிறது.
( உபநயனம் என்பது முக்கியமான சடங்கு. ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கியமானஅங்கம் வகிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கில் பூணூல் அணிவிக்கப் படுகிறது. இந்தச் சிறுவன் இது முதல் சிஷ்யனாகிறான். பிரம்மசாரியாகிறான். உபநயனம் என்றால் சிஷ்யனை குருவிடம் அழைத்துச் செல்வது என்று பொருள்.
பாலனாக, சிறுவனாக இருக்கும் வரை அவனுக்கு எந்த நியமமும் கிடையாது. ஆனால் உபநயனம் ஆனதும் அவனுக்குக் கட்டுப் பாடுகள் ஏற்படும்.
( உபநயனம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது ஆகும். முதலில் பிறந்தது ஒரு பிறவி. இப்போது மீண்டும்இன்னொரு பிறவி எடுக்கிறான். அதனால் தான் உபநயனம் என்றசடங்கு முடித்தவர்களுக்கு த்விஜன் என்ற பெயர் ஏற்பட்டது. இதற்கு இரண்டு பிறவிகள் கொண்டவன் என்று பொருள்.
( தற்காலத்தில் த்விஜன் என்ற சொல் பிராம்மணனை மட்டும் குறிப்பதாக நினைக்கிறார்கள். அது தவறு. த்விஜன் என்ற சொல் பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன், மூவரையுமே குறிக்கும். ஏனெனில் மூவருக்குமே உபநயனச் சடங்கு உண்டு. த்விஜன் என்பதையே தமிழில் இரு பிறப்பாளன் என்று சொல்கிறார்கள்.
( இந்த உபநயனச் சடங்கை பிராம்மணனுக்கு ஏழு வயதிலும், க்ஷத்திரியனுக்கு பத்து வயதிலும், வைசியனுக்கு பதினோராவது வயதிலும் செய்ய வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார். இது பொது விதி. விசேஷ விதியும் உண்டு.
(க்ஷத்திரியர்களிலேயே அரசன், சேனாதிபதி, போன்றோரும் பிராம்மணர்களில் பிரதான புரோகிதர் போன்றோரும்,வைசியர்களிலும் மிக்க பெரும் செல்வந்தவர்களும் தங்களைப் போன்றே தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பும் போது எந்த வயதில் உபநயனம் செய்ய வேண்டும் என்பதை அடுத்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.
..................
37.
பிரம்ம தேஜஸை விரும்பும் பிராம்மணனுக்கு ஐந்தாவது வயதிலும், பலத்தை க்கோரும் க்ஷத்ரியனுக்கு ஆறாவது வயதிலும், வாணிபம் கோரும் வைசியனுக்கு எட்டாவது வயதிலும் உபநயனம் செய்து வைக்க வேண்டும்.
.......................
38.
பிராம்மணனுக்கு பதினாறாவது வயது வரையும், க்ஷத்ரியனுக்கு இருபத்திரண்டாவது வயது வரையும், வைசியனுக்கு இருபத்து நான்காவது வயது வரையும் காயத்ரி அழியாமலிருக்கும். அதாவது அந்த வயதுக்குள்ளாவது காயத்ரி உபதேசம் நடை பெற வேண்டும்.
( இப்படி க் கூறியிருப்பது தவிர்க்க முடியாத காரணத்தால் குறிப்பிட்ட வயதில் செய்ய முடியாமல் போய், அதற்குப் பிறகும் காலம் கடந்து கொண்டே போனவர்களுக்காக சொல்லப் பட்டது. இந்த வயதுகள் உபநயனத்துக்கான வயதுகள் அல்ல.ஆனால் தவிர்க்க முடியாமல் தள்ளிப்போனாலும் இந்த வயதுக்குள் செய்ய வேண்டும், செய்யலாம் என்பதற்காகக் கூறப்பட்டது.)
...........................
39.
அது வரையிலும் உபநயனம் செய்யாதவர்கள் காயத்ரீ உபதேசம் பெறும் அருகதையை இழந்தவர்களாவர். இவர்கள் சான்றோர்களால் நிந்திக்கப் படுவார்கள். வைதீகச் சடங்குகளுக்கு இவர்களைச்சேர்க்க மாட்டார்கள்.
......................
40.
இவ்வாறு தூய்மை இழந்து விதிப்படி பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவனோடு பிராம்மணன், யாகம், கன்யாதானம், முதலான எந்தச் சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது.
......................
தொடரும்…
…
மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109
..
No comments:
Post a Comment