Monday, 4 January 2021

📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11

 📚மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-11

அத்தியாயம் -2

...........

41.

 பிராம்மண பிரம்மசாரி மான் தோலால் ஆன மேலாடையையும், க்ஷத்ரிய பிரம்மசாரி குரு மிருகத்தின்ஆன தோலால் ஆன மேலாடையையும்,

வைசிய பிரம்மசாரி ஆட்டுத்தோலால் ஆன மேலாடையையும்  அணிய வேண்டும்.

 பிராம்மணன்  நார்மடித் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.

 க்ஷத்ரியன் பட்டுத் துணியை அரையாடையாக அணிய வேண்டும்.

 வைசியன் சணல் ஆடையை அரையாடையாக அணிய வேண்டும்.

(மிகப்பழைய காலத்திலேயே பட்டுத்துணி வழக்கத்தில் இருந்துள்ளது.குளிரிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காகவே மிருகத்தின் தோலாடையை பயன்படுத்துகிறார்கள்)

.................

42.

 பிராம்மண பிரம்மசாரி, முஞ்சி புல்லால் திரிக்கப் பட்டு, வழுவழுவென்று சமானமான மூன்று இழைகள் கொண்ட அரைஞாணை அணிய வேண்டும்.

 அவ்வாறே க்ஷத்ரிய பிரம்மசாரி மூர்வா புல்லினால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.

வைசிய பிரம்மசாரி சணலால் திரிக்கப் பட்ட மூன்று இழைகளோடு கூடிய அரை ஞானை அணிய வேண்டும்.

(இந்த அரைஞாணில்தான் கோவணம் கட்டிக்கொள்வார்கள்)

...................

43.

 முஞ்சிப் புல் முதலானவை கிடைக்காத போது, தர்ப்பை , நாணல், கோரை முதலானவற்றை முப்புரிகளாகத் திரித்து அதை ஒரு முடிச்சோடு  பிராம்மண பிரம்மசாரியும், மூன்று முடிச்சுகள் போட்டு  க்ஷத்ரிய பிரம்ம சாரியும், ஐந்து முடிச்சுகள் போட்டு வைசியப் பிரம்ம சாரியும் அணிய வேண்டும்.

.................

44.

 வலது புறமாக சுற்றிய ஒன்பது  இழைகள் கொண்டதாக பூணூல் இருக்க வேண்டும். பிராம்மண பிரம்மசாரிகளின் பூணூல்  பஞ்சினால் ஆனதாகவும், க்ஷத்ரிய பிரம்ம சாரிகளின் பூணூல் சணலாலான தாகவும், வைசிய பிரம்ம சாரிகளின் பூணூல் வெள்ளாட்டு முடியினாலானதாகவும் இருக்க வேண்டும்.

.........................

45.

 பிராம்மண பிரம்மசாரி வில்வம், புரசு இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.

 க்ஷத்ரிய பிரம்மசாரி ஆல், கருங்காலி இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.

 வைசிய பிரம்மசாரி அத்தி, பைலம் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை தண்டமாக ஏந்த வேண்டும்.

...................

 46.

 பிராம்மணன் ஏந்தும் தண்டம் தலை வரை உயரமுடையதாக இருக்க வேண்டும். க்ஷத்ரியன்  ஏந்தும் தண்டம் நெற்றிவரை இருக்க வேண்டும். வைசியன் ஏந்தும் தண்டம் மூக்கு வரை இருக்க வேண்டும்.

..................

47.

 அந்த தண்டங்கள் கோணலாக இருக்கக் கூடாது. வெட்டுப் பட்ட வடுக்கள் அற்றவையாக இருக்க வேண்டும். பார்க்க அழகாக இருக்க  வேண்டும். பார்ப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும் வண்ணம் இருக்கக் கூடாது. மேல் பட்டையோடு இருக்க வேண்டும். நெருப்புப் பட்டதாக இருக்கக் கூடாது.

.......................

48.

 ஒவ்வொரு நாளும் தண்டத்தைக் கையில் ஏந்தி, சூரிய நமஸ்காரம் செய்து, தீயை வலம் புரிந்து, பிறகு முறைப்படி பிஷை ஏற்கச் செல்ல வேண்டும்.

..............

49.

 பிராம்மண பிரம்மச் சாரி ”பவதி பிக்ஷாம் தேஹி” என்று கூறி  பிஷை கேட்க வேண்டும்.

 க்ஷத்ரிய பிரம்மச் சாரி ” பிக்ஷாம் பவதி தேஹி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.

 வைசிய பிரம்மச்சாரி ” பிக்ஷாம் தேஹி பவதி” என்று கூறி பிஷை கேட்க வேண்டும்.

.................

50.

 முதலில் தாயிடம் அல்லது சகோதரியிடம் அல்லது தாயின் சகோதரியிடம்,  அல்லது யார் இவனை அவமானப் படுத்த மாட்டார்களோ, அந்தப் பெண்ணிடம் பிட்ஷை  ஏற்க வேண்டும்.

.....................................

51.

 இவ்வாறாக பிக்ஷான்னத்தைக் கொண்டு, குருவுக்குக் கொடுத்து, அவரது அனுமதியின் பேரில் அவர் கொடுத்த மிகுதி அன்னத்தை, ஆசமனம் செய்து,  கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

(ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை நீரால் வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மார்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைக்கவேண்டும்)

....................

 52.

 தீர்க்காயுளை வேண்டுபவன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

 கீர்த்தியை  விரும்புபவன் தெற்கு திசை  நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

 செல்வத்தை விரும்புபவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

 மோட்சத்தை விரும்புபவன் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும்.

............................

53.

 பிரம்மச்சாரி தினமும் ஆசமனம் செய்து, கிழக்கு நோக்கி அமர்ந்து வேறு நினைப்பின்றி உண்ண வேண்டும். உண்ட பிறகு கை கால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, நீரினால் இந்திரியங்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

54.

 எப்போதும் அன்னத்தை பூஜிக்க வேண்டும். அன்னத்தை நிந்திக்காமல்  சாப்பிட வேண்டும். மனத்திலுள்ள  கலக்கங்களை யெல்லாம் விட்டு விட்டு  சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது நிர்மலமான மனத்தோடு சாப்பிட வேண்டும். இந்த அன்னம் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

......................

55

 இவ்வாறாக  தினமும் துதிக்கப்பட்டு உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அளிக்கும். மாறாக, துதிக்கப் படாமல் உட்கொண்ட உணவு பலத்தையும் வீர்யத்தையும் அழிக்கும்.

.............................

56.

 எச்சிலான உணவை யாருக்கும் கொடுக்கக் கூடாது. மத்தியானமும் இரவும் உணவு உண்ண வேண்டும். அது தவிர நடுநடுவே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாகாது. மத்தியானமும் இரவும் சாப்பிடும் போது கூட அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. எச்சில் கையோடு எங்கும் போகக் கூடாது.

.....................

57.

 மிகுந்த படியாக, அளவுக்கதிகமாக சாப்பிடுவதால், ஆரோக்கியம் கெடும். ஆயுள் குறையும். சுவர்க்கம் முதலான புண்ணிய உலகங்களை அடைவதற்கு இது எதிரி. அதாவது அதிக அளவில் சாப்பிடுவது புண்ணியலோக பிராப்திக்கு தடையாகி விடும். அவ்வாறே நற்காரியங்களைச் செய்வதற்கும் இது தடையாகும். மேலும் உலகத்தாரின் தூற்றுதலுக்கும் ஆளாக  நேரிடும். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

.................

58.

 பிராம்மணர் முதலானோர் பிரம்ம தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யவேண்டும். அன்றேல், காய தீர்த்தத் தாலோ  தேவ தீர்த்தத்தாலோ ஆசமனம் செய்யலாம். அதன்றி பித்ரு தீர்த்தத்தால் எப்போதும் ஆசமனம் செய்யலாகாது.

....................

59.

 பெருவிரலில்  முதல் பாகத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளதாகவும், சுண்டு   விரலில் முதல் பாகத்தில்  காய தீர்த்தம் உள்ளதாகவும், விரல் நுனிகளில் தேவ தீர்த்தம் உள்ளதாகவும், பெருவிரல்சுட்டு விரல்களுக்கிடையே பித்ரு தீர்த்தம் உள்ளதாகவும் கூறப் டுகிறது.

.......................

60.

பிரம்ம தீர்த்தம் முதலானவைகளால் மூன்று முறைகள் ஆசமனம் செய்ய வேண்டும். உதடுகளை மூடிக் கொண்டு நீரினால் வாயைத் துடைக்க வேண்டும். பிறகு இடது கரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு தலையில் இருக்கின்ற இந்திரியங்களான கண்கள், காதுகள், மூக்கு முதலியவைகளையும், மார்பையும் தலையையும் துடைக்க வேண்டும்.

..........


......................

தொடரும்…

மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109

..


No comments:

Post a Comment