மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-4
….
61.
மஹாத்மாக்களும், தேஜஸ்மிக்கவர்களுமான, ஸ்வாயம்புவ மனுவின் வம்சத்தவர்களான ஆறுபேர். சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டு தத்தம் பிரஜைகளை உருவாக்கினார்கள்.
.................
62.
ஸ்வரோசிஷன், உத்தமன், தாமசன், ரைவதன், சாட்சுசன், மஹா தேஜஸ் கொண்ட வைவஸ்வதன் இவர்களே அந்த ஆறு பேர்கள்.
...............
63.
மிக்க சக்தி படைத்தவர்களான, ஸ்வாயம்புவ மனு முதலான இந்த ஏழு பேரும் தங்கள் தங்கள் அந்தரங்களில்( காலங்களில்) உயிர்களைப் படைத்து, காத்து ஆட்சி நடத்தினர்.
...............
64.
இமை கொட்டும் நேரம் பதினெட்டு கொண்டது ஒரு காஷ்டை எனப்படும். முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு கலை எனப்படும்.
முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்.
முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு இரவும் பகலும் ஆகும்.
................
65.
சூரியன் இரவு பகல்களை தேவர்களுக்கென்றும் மானிடர்களுக்கென்றும் ஏற்படுத்தினார். இரவு என்பது உறக்கத்துக்காகவும், பகல் காரியமாற்றுவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டன.
...................
66.
மானிடர்களுடைய ஒரு மாதம் என்பது பித்ருக்களுடைய இரவும் பகலுமான ஒரு நாள் எனப்படும். அதில் தேய்பிறை கர்மானுஷ்டானங்களுக்கும், வளர்பிறை உறக்கத்துக்கும் ஏற்பட்டவை.
( அதாவது தேய்பிறை பித்ருக்களுடைய ஒரு பகல் பொழுது. வளர்பிறை பித்ருக்களுடைய ஒரு இரவுப்பொழுது)
................
67.
மனிதர்களுடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு இரவும் பகலுமான ஒரு நாள். இதில் உத்தராயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு பகல் பொழுது. தட்சிணாயனம் என்னும் ஆறு மாதங்கள் தேவர்களின் ஒரு இரவுப் பொழுது.
....................
68.
பிரம்ம தேவருடைய இரவு பகலுக்கான காலக் கணக்கையும் யுகங்களின் காலக் கணக்கையும் கூறுகிறேன் , கேளுங்கள்.
.......................
69.
நாலாயிரம் தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.
மேலும் காலையில் சந்த்யாகாலம் என்று நானூறு வருடங்களும், மாலையில் சந்த்யா காலம் என்று நானூறு வருடங்களும் சேரும். மொத்தத்தில் நாலாயிரத்து எண்ணூறு தேவ வருடங்கள் கொண்டது கிருதயுகம்.
........................
70.
மற்ற யுகங்களில் சந்தியைகளுக்கும் யுகத்துக்கும் நூறும் ஆயிரமுமாக குறைத்துக் கொண்டே வர வேண்டும். அப்படி யென்றால், திரேதா யுகத்துக்கு மூவாயிரம் தேவ வருடங்கள், அதில் இரண்டு சந்தியைகளுக்குமாக முந்நூறு, முந்நூறு தேவ வருடங்கள் . ஆக மூவாயிரத்து அறு நூறு தேவ வருடங்கள் கொண்டது திரேதாயுகம்.
இவ்வாறாகப் பார்க்கும் போது, துவாபர யுகம் இரண்டாயிரத்து நானூறு தேவ வருடங்கள் கொண்டது.
கலியுகம் ஆயிரத்து இரு நூறு தேவ வருடங்கள் கொண்டது.
...........................
71.
மானிட யுகங்கள் நான்கும் சேர்ந்தால் மொத்தம் பன்னிரண்டாயிரம் தேவ வருடங்கள். இது தேவர்களின் ஒரு யுகம்.
........................
73.
இப்படிப்பட்ட தேவ யுகங்கள்ஆயிரம் கொண்டது பிரம்மாவின் ஒ ரு பகல். அவ்வாறே ஆயிரம் தேவ யுகங்கள் கொண்டது ஒரு இரவு. எனவே இரண்டாயிரம் தேவ யுகங்கள் கொண்டது பிரம்மாவின் ஒரு நாள்.
................
73.
இவ்வாறான தேவ யுகங்கள் ஆயிரம் கொண்ட பிரம்மாவின் பகல் பொழுதை ” புண்ணிய தினம்” என்பார்கள். அவ்வாறே அதே அளவுள்ள பிரம்மாவின் இரவுப் பொழுதை” புண்ணிய இரவு” என்பார்கள். இவ்வாறான பிரம்மாவின் இரவு பகல் கணக்கை அறிந்தவர்களை, ” அஹோராத்ரி யறிந்தவர்கள்” என்பார்கள்.
.............................
74.
பிரம்மா தன்னுடைய இரவு நேரத்தில் உறங்குவார். இரவு நேரம் முடியும் தருவாயில் எழுந்திருப்பார். அப்படி எழுந்திருப்பவர் சத் அசத் ரூபமான சிருஷ்டியைச் செய்யத் தொடங்குவார்.
.........................
75.
பிரம்மாவால் மனம் மஹத் சிருஷ்டியில் ஏவப்பட்டு மஹத் சிருஷ்டியிலிருந்து ஆகாயம் தோன்றியது. ஆகாயத்துக்கு ” சப்தம்” குணமாய் அமைந்தது.
....................
76.
ஆகாயத்திலிருந்து இனிய வாசனைகளையும், துர்வாசனைகளையும் கொண்டு செல்வதும், பவித்ரமானதும் , மிகுந்த பலம் கொண்டதுமானவாயு தோன்றியது. வாயு ” ஸ்பரிசம்” என்னும் குணம் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
........................
77.
வாயுவிலிருந்து மிக்க பிரகாசம் கொண்டதும், இருட்டைப்போக்கடிப்பதுமான ஜோதி ( நெருப்பு) தோன்றியது. அந்த ஜோதி ” உருவம்” என்னும் குணம் கொண்டது என்று கூறுகிறார்கள்.
......................
78.
நெருப்பிலிருந்து தண்ணீர் தோன்றியது. தண்ணீர்”ரஸம்” என்னும் குணம் கொண்டது. தண்ணீரிலிருந்து பூமி தோன்றியது. பூமி ”வாசனை” என்னும் குணம் கொண்டது.
இப்படித்தோன்றியதே ஆதி சிருஷ்டி.
.....................
79.
பன்னிரண்டாயிம் வருடங்கள் எண்ணிக்கையில் மனிதர்களின் நான்கு யுகங்கள் கொண்டது ஒரு ” தேவ யுகம்” என்று முன்னர் கூறப் பட்டது. அப்படிப்பட்ட தேவ யுகங்கள் எழுபத்தொன்று நிறைந்தால், அது ஒரு மன்வந்தரம் எனப்படும்.
......................
80.
சிருஷ்டியும், சம்ஹாரமும் எண்ணற்றவையாதலின், மன் வந்தரங்களும் எண்ணற்றவையே.
சிருஷ்டியை, பிரம்மா விளையாட்டாகவே மீண்டும் மீண்டும் செய்கிறார்.
........................
..
தொடரும்…
…
மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109
No comments:
Post a Comment