Monday, 4 January 2021

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-1

மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-1

….

 அத்தியாயம் -1

..............

 1.ஏகாக்ர  சித்தத்தோடு  அமர்ந்திருந்த மனுவை அணுகிய மஹரிஷிகள் அவரை முறைப்படி வணங்கி இவ்வாறாகச் சொன்னார்கள்.

…..

 மகரிஷிகள் சிலருக்கு, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. தர்மம், அர்த்தம், காமம், மோட்சங்களைப் பற்றிய ஞானம் முழுமையாக கைவரப் பெற்றவரான மனுபகவானை அணுகினால், தங்கள் சந்தேகங்கள் தீரும் என்ற தீர்மானத்தோடு அவர்கள் மனுவின்  இருப்பிடம் வந்தார்கள். அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.

 ஒரு சமயம் மனு நிச்சலனமாக, சாந்தமாக  ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்கள். இதுவே தக்க தருணம் என்று அவரை அணுகினார்கள்.

 கோபதாபங்கள் முதலான உணர்ச்சிகளில் ஆழாமலும், பரபரப்பான காரியங்களில், ஈடுபட்டிராமலும், ஏதோ ஒரு காரியத்தில் முனைப்பாக ஈடுபட்டிராமலும், இருக்கும் போது தான் ஒருவர்  தெளிவாக ஞானத்தோடு, சிந்தையோடு இருப்பார். மஹான்களுக்கு கோப தாபங்கள் முதலானவை இரா. ஆனால் தீர்க்கமான சிந்தனையில் தீவிரமாக ஆழ்ந்திருக்க இடமுண்டு. அவ்வாறெல்லாம் இல்லாமல், சாந்தமான  மனதோடு, வேறு வேலைகளில் ஈடுபடாமல் விச்ராந்தியாக இருக்கும் போது  மஹான்களை அணுகி தங்கள் சந்தேகங்களைக்கேட்டால் நிச்சயமாக நல்ல முறையில் சந்தேகங்கள் தீரும். எதற்காக  அணுகுகிறார்களோ, அந்தக் காரியம் ஈடேறும்.

 ஆகவே தான், மஹரிஷிகள் நேராகப்போனோம். கேட்டோம் என்றிராமல், மனுவானவர் நிச்சலனமாக அமர்ந்திருக்கும் தருணத்துக்காகக் காத்திருந்து, தக்க தருணம் வாய்த்ததும் அவரை அணுகி வணங்கி, தங்கள் சந்தேகங்களை க்கேட்கத் தொடங்கினார்கள்.


 அன்று அவர்களுக்கு மனு விரிவான விளக்கங்களை அளித்தார், அவை இன்றுவரை மக்களுக்கு தர்மாதர்மங்களையும், நியாய அநியாயங்களையும், செயல்முறைகளையும், ராஜ நீதிகளை மட்டுமின்றி குடும்ம நீதிகளையும், சட்ட நுணுக்கங்களையும், வாழ வேண்டிய முறைகளையும் இன்னும் இன்னும் பற்பல வற்றையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 

 மனுவின் வாக்காக, அன்று வெளிப்பட்ட ஒலி அலைகள் வானத்தோடு கலந்து விட்டாலும், அந்த ஒலியோடு வெளிப்பட்ட ஞான ஒளி இன்றுவரை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அழியாத அந்த  ஒளி  இப்போது உங்கள் கரத்திலுள்ள இந்த நூலின் மூலமாக உங்கள் அறிவையும் பிரகாசிக்கச்  செய்யும். இந்த நூலின் மூலமாக உங்கள்அறிவையும் பிரகாசிக்கச் செய்யும். இப்படி என்றென்றும் எவர்க்கும் ஞான ஒளி கிட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அன்று அந்த மஹரிஷிகள் மனுவை கேள்விகளால் துளைந்து, நல்ல பதில்களைப் பெற்று, நமக்கு அளித்தார்கள். இனி அடுத்தடுத்த  ஸ்லோகங்களில் அவர்கள் தங்கள் கேள்விகளைக்கேட்கப் போகிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.


2.

 பகவானே, நான்கு வர்ணத்தவரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களைப் பற்றியும் இவர்களுக்குள் கலப்பு சம்பந்தங்களால் ஏற்பட்ட வர்ணத்தாருடைய தர்மங்களைப் பற்றியும் எமக்கு எடுத்துரைப் பீராக.

 ................

விளக்கம்

(வர்ணம் என்றால் நிறம். இது சூட்சுமஉடலை அடிப்படையாகக்கொண்டது. நான்கு வர்ணத்தவருக்கு நான்கு நிறம்.

பிராமணன் தெய்வீக எண்ணங்களில் மூழ்கியிருப்பதால் அவனது சூட்சும உடல் சத்துவ குணத்தால் நிறைகிறது. சத்துவத்தின் நிறம் வெண்மை.

க்ஷத்திரியன் போர்புரிதல் போன்ற கடுமையான சூழலில் வாழ்வதால் ராஜச குணம் மேலோங்கியிருக்கும்.அவனது சூட்சம சரீரம் சிவப்பு நிறத்தைப்பெறுகிறது.

சூத்திரன் சோம்பல்,தூக்கம்,அறிவின்மை போன்ற தாமச குணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான்.அவனது சூட்சும சரீரம் கருமை நிறத்தைப்பெறுகிறது.

வைசியன் ராஜஸ மற்றும் தாமஸம் இரண்டும் கலந்த குணத்தைப்பெறுகிறான் எனவே அவனது சூட்சும சரீரம் கருப்பு,சிவப்பு கலந்த நிறத்தைப்பெறுகிறது.

ஒரு மனிதனுக்கு புறத்தில் தெரியும் சரீரம் தூலசரீரம்,மனத்தால் ஆக்கப்பட்டிருக்கும் சரீரம் சூட்சுமசரீரம்.

மனிதன் இறந்தபிறகு

சூட்சும சரீரம் அவனது உடலைவிட்டு வெளியேறுகிறது.)


3.

 பிரபுவே, வேதங்களில் கூறப்பட்ட அனைத்தையும், பிரம்ம சொரூபத்தையும், தத்துவங்ளையும் அறிந்தவர் தாங்கள் ஒருவரே.  தாங்களே நாங்கள் கேட்ட விஷயத்தை தெளிவுபடுத்தக் கூடியவர்.


4.

 மஹான்களான மஹரிஷிகள் இவ்வாறு வினவ, அளப்பரிய ஞானம் கொண்டவரான மனுபகவான் அந்த மகரிஷிகளைத் தக்கபடி உபசரித்து, அவ்வாறே ஆகட்டும்” கூறுகிறேன், கேளுங்கள் என்றருளினார்.

..........................

5.

  இவ்வுலகம் இருட்டாகவும், பார்வைக்குப் புலப் படாததாகவும் ஊகிக்க முடியாததாகவும் , உருவமற்றதாகவும், ஒலியற்றதாகவும் தூங்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது.

.............................

6.

 ஐஸ்வர்யங்களோடு கூடியவரும், யோகாப்யாசத்தால் அறியக் கூடியவரும், இடையூறு ஏதுமின்றி சிருஷ்டிக்கக் கூடியவருமான பரமாத்மா பஞ்ச பூதங்களைப் பிரகாசிக்கச் செய்த படி தாமாக வெளிப் பட்டார்.

...................

7.

 வெளிப் புலன்களால் அறிய முடியாதவரும்,பரிசுத்தமான மனத்தினால் அறியத் தக்கவரும், அருவமானவரும், நித்யமானவரும், ஊகிக்க முடியாதவருமான பரமாத்மா தாமாகவே சிருஷ்டி புரிவதற்காக வெளிப் பட்டார்.

.......................


8.

 அப்படி வெளிப்பட்ட அவர்,  சிருஷ்டி செய்ய மனங் கொண்டவராக, முதலில் அப்புவை(ஆதிநீர்) சிருஷ்டி செய்தார். அந்த நீரில் தம் சக்தியின் ரூபமான ஒரு விதையை வைத்தார்.

...................

9.

 அந்த விதை சூரிய ஒளிக்கு நிகரான ஒளியோடும், தங்கமென தகதகத்த நிறத்தோடும்  ஒரு அண்டமாக அதாவது  ஒரு முட்டை வடிவமாக ஆனது. அந்த அண்டத்தில் பரமாத்மாவானவர் தாமே பிரம்மாவாக ஜன்மமெடுத்தார்.

.......................

10.

 தண்ணீருக்கு நாரம்  என்றும் பெயருண்டு. ஒரு செயலில் ஈடுபட்டு, தண்ணீரில் இயங்கத் தொடங்கியதால் பரமாத்மாவான அவர் நாராயணன் என்ற நாமம் பெற்றார்.

...................


11.

 சிருஷ்டிக்கப் பட்டவற்றுக் கெல்லாம் காரணமாய், வெளிப் புலன்களுக்கு எட்டாத படியாக, தோற்றமும் அழிவும் அற்று, நித்தியமான, அநித்தியமான பொருட்களின் உருவமாய் எந்த பரமாத்மா உள்ளாரோ, அந்த பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப் பட்ட அந்த புருஷன் உலகத்தில் ” பிரம்மா” என்றழைக்கப் பட்டார்.

..............

12.

 அந்த அண்டத்தில் பிரம்மா ஒரு வருடம் முழுமையும் தவமியற்றிய பிறகு, ” இந்த அண்டம் இரண்டாகப் பிளக்கட்டும்” என்று நினைத்த அளவில்அண்டம் இரண்டானது.

( பிரம்மா தவமியற்றிய ஒரு வருட காலம் என்பது நாம்  இப்போது கூறும் வருடம் மாதம் நாள் கணக்கைச்சேர்ந்ததல்ல. நாம் கணக்கிடும் வருடம் என்பது மானிடர்களான நமக்கானது. தேவர்களுக்கு வேறு காலக்கணக்கு. இது பின்னால் வரும் ஸ்லோகங்களில் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது)

 ......................

13.

பிரம்மா, பிளவுண்ட அண்டத்தின் மேல் பாதியில் ஆகாயத்தையும், கீழுள்ள பாதியில் பூமியையும்,நடுவில் வெளியையும் ( அண்ட வெளியையும்) எட்டு திசைகளையும், கடலையும் படைத்தார்.

விளக்கம்…

(தற்காலத்தில் வானஇயல் முன்னேறியிருக்கும் அளவுக்கு பழைய காலத்தில் முன்னேறவில்லை. முற்காலத்தில் பூமி நிலையாக இருப்பதாகவும் சூரியன் பூமியை சுற்றி வருவதாகவும் நம்பினார்கள்.)

....................

14.

 பிரம்மா பரமாத்மாவிடமிருந்து  சத், அசத் ரூபமான மனத்தைப் பெற்றார். அந்த மனத்திலிருந்து தன் செயலை நிறைவேற்றிக் கொள்ளத் தக்கதான அஹங்காரத்தைப் பெற்றார்.

.....................

15.

 மஹத்” என்னும் தத்வத்தையும், ஆத்மாவுக்கு உதவியாக இருப்பதான சத்வ குணத்தையும், ரஜஸ், தமஸ் என்னும் குணங்களையும், விஷயங்களைக்கிரகிக்கும் சக்தி கொண்ட பஞ்சேந்திரியங்களையும் முறையாகப் படைத்தார்.

...............


16.


 அகங்காரத்தையும்,  அதன் தன் மாத்திரைகளையும், சூட்சும அவயவங்களையும் ஆறு  விகாரங்களையும் சேர்த்து சகல பூதங்களையும் படைத்தார்.

( நீங்கள் இப்போது படித்துக் கொண்டு வந்த ஸ்லோகங்களின் பொருளைப் புரிந்து கொள்வது கடினமானது தான். ஆனால் இவற்றைப் பற்றி இப்போது  விளக்கப் புகுவது உசிதமானதன்று.   இந் நூலின் உட்புகுந்து அநேக விஷயங்களைப் புரிந்து கொண்ட பின்னால் இவற்றை விளக்கிக்  கொள்வது மிகவும்  எளிதாக இருக்கும்.

 எனவே, மேற்கொண்டு ஸ்லோகங்களைப் பார்ப்போம்)

.............................


17.

 அஹங்கார தன்  மாத்திரை வடிவங்களான சூட்சும அவயவங்கள் ஆறும், பூதேந்திரியங்களும் காரிய ரூபமாக பிரம்மாவிடம் சேருவதால் பிரம்மாவை அவற்றின் சேர்க்கை கொண்டவர் என்று பொருள் படும் விதமாக, சரீரம்” என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

.......................


18.

 பஞ்ச மகா  பூதங்களும் தங்கள் காரியங்களுடன் கூடியும், மனம் வெளியில் புலப் படாத சூட்சுமமான அவயவங்களோடு கூடியும் சரீரத்தில் பிரவேசிக்கின்றன.

.......................

19.

 பஞ்ச பூதங்கள், ”மஹத்” தத்துவம்”, ” அஹங்காரம்” என்னும் இரண்டு, ஆக ஏழின் காரணமாக உலகம் தோன்றுகிறது.

............................

20.

ஆகாயம், வாயு, அக்னி, ஜலம், மண் என்னும் பஞ்ச பூதங்களில் முதலில் உள்ளதன் குணம் அடுத்ததன் குணத்தோடு சேர்ந்திருக்கும். இவற்றின் குணங்கள் இவற்றுக்கு அடுத்ததாக உள்ளதோடு சேர்ந்திருக்கும்.

( தற்காலத்தில் பூதங்கள் என்ற சொல்லைப் பிசாசுகளைக் குறிக்கப் பயன் படுத்துகிறார்கள். பூதம் என்ற சொல்லுக்கு பிசாசு என்ற பொருள் இருப்பது உண்மை தான். ஆனால் அது ஒன்று மட்டுமே பொருளல்ல. மனிதன் முதல் விலங்கு  தாவரம் வரை  உயிர் வாழும் அனைத்துப் பிராணிகளுக்கும் பூதங்கள் என்று பெயர் உண்டு. மேலும் பூமி, ஜலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையும் பூதங்கள் எனப்படும். ஐந்து  பூத தத்துவங்கள், ஐம் பெரும் பூதங்கள், என்று சொல்லும் போது இந்த ஐந்தையே குறிக்கும். இனி இந்த ஸ்லோகம் கூறுவதைப் பார்ப்போம்.

 முதலில் ஆகாயம். இதற்கு ஓசை என்ற தன்மை இருக்கிறது. அடுத்தது வாயு. இதற்கு ஆகாயத்தின் தன்மையான ஓசையோடு ஸ்பரிசம் என்ற தன்மையும்( தொடு உணர்ச்சி) உண்டு.  காற்று மேலே பட்டால் தொடு உணர்ச்சியால்உணர முடியும்.

அடுத்து தேஜஸ்.  அதாவது நெருப்பு.  நெருப்புக்கு ஒளி என்னும் தன்மையோடு ஆகாயத்துக்கும் வாயுவுக்கும் இருக்கும் தன்மைகளும் சேர்ந்து ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் தன்மைகளுமாக மொத்தம் நான்கு தன்மைகள் உள்ளன.

 இவ்வாறே பிருத்விக்கு அதாவது மண்ணுக்கு வாசனை என்ற தன்மையோடு ஒளி, ஓசை,  ஸ்பரிசம், சுவை என்ற நான்கு தன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஐந்து தன்மைகள் உள்ளன.

 பஞ்ச மகா பூதங்களின் தன்மைகள் இவை. இந்தத் தன்மைகளையே தன் மாத்திரைகள் என்பார்கள்.

 இவ்வாறே  அகங்காரத்துக்குத் தன்மைகள் அதாவது  தன் மாத்திரைகள் ஆறு. காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸரியம், மோகம் என்பவை.

 மஹத் என்னும் பெரும் தத்துவத்தோடு பஞ்ச பூதங்களும் தங்கள்  தன்மைகளோடும், அகங்காரம் தன் தன்மைகளோடும் சேர்ந்து இவ்வுலகம் உண்டாகிறது.

சாங்கிய தத்துவம்

வேதாந்த தத்துவம்

சைவசித்தாந்தம்

போன்ற தத்துவங்களை

படித்தவர்கள் இதனை எளிதாக புரிந்துகொள்வார்கள்)

..

தொடரும்…


No comments:

Post a Comment