அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-11
-
பகவானிடம் விசேஷ சக்தி உள்ளது.அவர் “உம்” எனும்போது எல்லாம் படைக்கப்படுகின்றன.“உஹும்” எனும்போது அவை மறைந்துவிடுகின்றன.இருப்பதெல்லாம் ஒரேவேளையில் தோன்றின.ஒன்றன்பின் ஒன்றாக படைக்கப்படவில்லை
-
ஒரு கல்பத்தின் முடிவிற்குப்பிறகு தூக்கத்திலிருந்து விழித்தெழுவதைப்போல் அனைவரும் தோன்றுகிறார்கள்
-
ஜபம் தவம் போன்ற சாதனைகளின் மூலம் கர்மத்தளைகள் அறுபடுகின்றன.ஆனால் பிரேமபக்தி இல்லாமல் கடவளைப் பெற முடியாது.ஜப தவங்கள் என்ன தெரியுமா? இவற்றின் மூலம் புலன்களின் வேகம் தடுக்கப்படுகிறது
-
பணம் இருப்பவன் அதனால் பக்தர்களுக்கும் பகவானுக்கும் சேவைசெய்து அவரை வழிபட வேண்டும்.அது இல்லாதவன் நாம ஜபத்தால் வழிபட வேண்டும்
-
எல்லோரும் கடவுளை நாடுவதில்லை.திருமணம் செய்துகொண்டால் சுதந்திரம்போய்விடுகிறது.
-
ஆசைகள் இருக்கும்வரை பிறவிகளுக்கு முடிவே இல்லை.ஆசைகள்தான் மீண்டும்மீண்டும் உடல்களை எடுக்குமாறு செய்கின்றன.சிறிது கற்கண்டு சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்கூட மீண்டும் பிறக்க வேண்டியதுதான்
-
ஆசை என்பது ஒரு நுண்விதை போன்றது.சிறுவிதையிலிருந்து ஆலமரம் வருகிறதே அதேபோல்.ஆசைகள் இருந்தால் மறுபிறவி ஏற்பட்டே தீரும்.ஓர் உறையிலிருந்து(உடலிலிருந்து) ஜீவனை இன்னோர் உறைக்குள் துளைப்பதுபோல்
-
முற்றிலும் ஆசைகளிலிருந்து விடுபடுவது யாரோ ஓரிருவர் மட்டுமே.ஆசைகள் காரணமாக அடுத்த பிறவி வாய்த்தாலும் முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயன் காரணமாக ஒருவன் ஆன்மீக உணர்வை முற்றிலும் இழக்காமல் இருப்பான்
-
கர்வம் எளிதில் போகாது.என்னை வணங்கவில்லை,என்னை மதிக்கவில்லை என்பதும் கர்வம்தான்.அழகில் கர்வம்,நற்குணத்தில் கர்வம்,கல்வியில் கர்வம்,சன்னியாசியின் கர்வம் இவையெல்லாம் எளிதில் போகாது
-
எல்லாம் ஒரே பிறவியில் வாய்க்காது.இந்த பிறவியில் சிறிது ஜப தவம் செய்யலாம்.அடுத்தபிறவியில் சிறிது விழிப்புணர்வு ஏற்படலாம்.அதற்கடுத்த பிறவியில் மேலும் முன்னேறலாம் இதுபோல்தான்.பக்குவப்படாத மாம்பழங்களை பழுக்க வைத்தால் சுவைக்காது.உரிய காலம் வரவேண்டும்.
-
இறைவன் குழந்தையின் இயல்பு படைத்தவர்.ஒருவன் விரும்பமாட்டான்,அவனுக்கு இறைக்காட்சியை கொடுப்பார்.ஒருவன் விரும்புவார் அவனுக்கு கொடுக்க மாட்டார்.எல்லாம் அவரது திருவுளம்
-
குருதேவருக்கு நோய் வந்தபோது, அவதாரபுருஷருக்கு நோய் வருமா?எல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு மக்கள் வருவதை நிறுத்திவிட்டார்கள்.உண்மையான பக்தர்கள் மட்டுமே கடைசிவரை அவரை காண வந்தார்கள்
-
கடவுள் நமக்கு விரல்களைக் கொடுத்திருப்பதற்குக் காரணம்.மந்திர ஜபம் செய்யும் பேற்றை அவையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான்
-
No comments:
Post a Comment