Thursday, 11 October 2018

அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-12


அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-12
-
இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது தெரியுமா? துன்பம் இல்லாவிட்டால் இன்பத்தை உணர முடியாது.இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே படைப்பு.எல்லோரும் இன்பமாக இருப்பது சாத்தியமில்லை
-
சீதையின் விருப்பப்படி மக்களுக்கு தேவைக்கு அதிகமாக செல்வத்தை ராமர் கொடுத்தார்.அதன்பின் மக்கள் வேலை செய்வதையே நிறுத்திவிட்டார்கள்.அரண்மனைக்குகூட யாரும் வேலை செய்ய வரவில்லை.தன்தவறை சீதை உணர்ந்துகொண்டாள்.வறுமைகூட இந்த உலகத்திற்கு தேவையான ஒன்றுதான் என்பது அதன்பிறகே அவளுக்கு புரிந்தது.
-
காலம் முழுவதும் இன்பமாக இருப்பவர் யாரும் இல்லை.அதுபோல் எல்லா பிறவிகளிலும் துன்பத்திலேயே அழுந்தியிருப்பவர்களும் யாரும் இல்லை.செயலைப்போல் பலன்,எல்லாம் அதற்கேற்பவே அமைகிறது
-
கடவுளின் விருப்பமில்லாமல் எதுவும் நடைபெற முடியாது.ஒரு புல்கூட அசைய முடியாது. நல்ல காலம் வரும்போது தியான சிந்தனை எழுகிறது. கெட்ட காலம் வரும்போது தீய சூழ்நிலைகள் வாய்க்கிறது அதனால் தீய செயல்களை செய்கிறான்.
-
மனிதன் மூலமாக இறைவனே செயல்படுகிறார்.நரேனால்(விவேகானந்தர்) என்ன செய்ய முடியும்? கடவுள் நரேனின்மூலம் வேலை செய்தார்.அதனால்தான் அவன் இதையெல்லாம் சாதித்தான்
-
தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை குருதேவர் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்.ஆனால் யாராவது அவரிடம் உண்மையாகத் தமது பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் அவரே சரியாக அமைத்துத்தருவார்
-
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில் எல்லாம் வினைப்பயனால் வந்து சேர்கின்றன.இப்போதைய செயல்களால் பழைய வினைப்பயன்களைத் துடைத்துவிடலாம்
-
நீ ஒரு நற்பணி செய்தால் அதனால் உன் பாவம் குறையும்.தியானம்,ஜபம்.தெய்வசிந்தனை ஆகியவற்றால் பாவங்களைக் குறைக்கலாம்
-
உயர்நிலையை அடையாதவர்களைத்தவிர மற்ற அனைவரும் ஒரு வருடகாலம் ஆவியுடலில் வாழவேண்டும்.அதன்பிறகு வாசனைகளுக்கு ஏற்ப வேறு பிறவி அமைகிறது.புண்ணிய பலன் இருக்குமானால் ஆவியுடலில் வாழ்ந்தாலும் ஆன்மீக உணர்வை முற்றிலும் இழக்காமல் இருக்கலாம்.
-
படைப்பு ஒரு சுழற்சிபோல் சென்றுகொண்டிருக்கிறது.எந்தப் பிறவியில் மனம் ஆசைகள் அற்றதாகுமோ அதுதான் கடைசிப்பிறவி
-
மிகவும் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும்.ஒவ்வொரு செயலுக்கும் பலன் உண்டு. பிறருக்கு துன்பம் தருவதோ பிறரிடம் கடுமையாக பேசுவதோ நல்லதல்ல
-
பேலூர் மடத்தில் குருதேவர் வாழ்வதை நான் கண்டேன்.மடத்திற்கு புதிய நிலம் வாங்கியபிறகு நரேன் என்னை அங்கு அழைத்துச் சென்றான்.எல்லா இடங்களையும் காண்பித்துவிட்டு,அம்மா இது உங்கள் இடம் எந்த தயக்கமும் இன்றி நீங்கள் இங்கே உலவலாம் என்றான்
-
ஞானம் வந்துவிட்டால் எல்லாம் பறந்துவிடுகின்றன.அம்மாதான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளாள் என்று புரியும்.எல்லாம் ஒன்றாகிவிடுகின்றன.
-
ஸ்ரீராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவி ஆன்மீக வாட்ஸ் அப் குழு 9003767303 .உங்கள் வாட்ஸ் அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-

No comments:

Post a Comment