Thursday, 11 October 2018

அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-13


அன்னை சாரதாதேவியின் உபதேசங்கள்-பாகம்-13
-
தட்சிணேஷ்வரத்தில் வாழ்ந்தபோது குருதேவரின் படத்தை மற்ற தெய்வப்படங்களுடன் வைத்து வழிபட்டு வந்தேன்.ஒரு நாள் குருதேவர் அங்கு வந்தார். இதெல்லாம் என்ன என்று கேட்டார்.பிறகு அவரே அந்த படத்திற்கு வில்வ இலைகளையும் மலர்களையும் வைத்து பூஜை செய்தார்.
-
குருதேவரின் திருமேனி பொன்னிறமாக இருந்தது.மஞ்சள் வண்ணப்பொடிபோல் பளிச்சென்று இருந்தது. அவர் அணிந்திருந்த தாயத்தின் நிறமும் அவரது நிறமும் ஒன்றாகவே இருந்தன்.குருதேவரின் உடம்புக்கு எண்ணெய் தேய்க்கும்போதெல்லாம் அவரது உடம்பு முழுவதிலிருந்தும் ஓர் ஒளி வெளிப்படுவதுபோல் தோன்றும்
-
குருதேவர் கோவிலிருந்து வெளியே சென்றால் மக்கள் அப்படியே நின்று பார்த்தபடி அதோ அவர் போகிறார் என்று பேசிக்கொள்வார்கள்.அப்போது அவர் நல்ல பருமனாக இருந்தார். மதுர்பாபு ஒரு பெரிய ஆசனம் செய்துகொடுத்தார்.அந்த ஆசனத்தில் உட்கார்ந்து சாப்பிடுவார்.அந்த ஆசனம் அதுகூட போதாமல் இருந்தது.
-
தட்சிணேஸ்வரத்தில் வாழ்ந்த காலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைகூட குருதேவரைக் காண முடியாத வேளைகளும் உண்டு.அப்போதெல்லாம் நான் என் மனத்திடம்,மனமே அவரை தினமும் தரிசிக்கும் அளவுக்கு நீ புண்ணியசாலியா என்ன?என்று கூறி என்னை நானே தேற்றிக்கொள்வேன்
-
நிழலும் நிஜமும் சமம்.குருதேவரின் படத்தை பிரார்த்திக்க பிரார்த்திக்க அவர் அந்தப்படத்தில் எழுந்தருள்வார்.அந்த இடம் ஒரு கோவிலாகிவிடும்.பின்பு அங்கே அவர் வாழ்வார்
-
குருதேவருக்கு படைத்த உணவை உண்டால் அது பிரசாதமாகிவிடுகிறது.அதனால் உள்ளம் தூய்மைபெறுகிறது. நிவேதனம் செய்யாத உணவை உண்டால் மனம் அசுத்தமடைகிறது
-
இறைவன் நமக்கு சொந்தமானவர்தான் .அது நிரந்தர உறவு.அவர் எல்லோருக்கும் சொந்தமானவர்.பாவனையின் ஆழத்திற்கு ஏற்ப அதை உணர முடியும்
-
இறைவனே தந்தையாகவும் தாயாகவும் ஆகியுள்ளார்.அவரே பெற்றோர் வடிவில் நம்மை வளர்க்கிறார்.அவரே நம்மை கவனித்துக்கொள்கிறார்.
-
என்னிடம் பிரார்த்திப்பவர்களின் அருகில் அவர்களின் கடைசி காலத்தில் நிச்சயம் இருப்பேன் என்று குருதேவர் என்னிடம் சொல்வதுண்டு.இது அவரது வாய்மொழி. பயம் எதற்கு ? நீ என் மகன்.பயம் எதற்கு?
-
இந்த ஊனக் கண்களால் கடவுளை யாராவது கண்டிருக்கிறார்களா?குருதேவரை நேரடியாக பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. நரேன் அமெரிக்காவில் இருக்கும்போது தீவிர மன ஏக்கத்துடன் தவித்தபோது,குருதேவர் நரேனின் கையை பிடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான்.அதுவும் சில நாட்களுக்கு மட்டுமே அப்படி நடந்தது.
-
சன்னியாசி எல்லா மாயைகளையும் வெட்டி எறிய வேண்டும்.பொன் சங்கிலியும் இரும்பு சங்கிலிபோல் ஒரு தளைதான்.உண்மையான துறவிகள் மாயையை வெட்டி எறிந்து நிர்வாணநிலையை அடைவார்கள்.பகவானுடன் கலந்துவிடுவார்கள்.
-
ஆசைகளின் காரணமாகவே உடம்பு தோன்றியிருக்கிறது.சிறிதளவேனும் ஆசை இருந்தால்தான் உடல் நிலைக்கும். ஆசைகள் முற்றிலுமாக ஒழியும்போது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது
-
தேவர்களானாலும் சரி,யாராக இருந்தாலும் சரி.எல்லோரும் இந்த பூமியில் பிறக்கவே செய்கிறார்கள்.சூட்சும உடலில் உண்ணவும் உடுக்கவும் பேசவும் முடியாதல்லவா! அதனால்தான் அவர்கள் அந்த நிலையில் நீண்ட காலம் வாழ முடிவதில்லை
-
சூட்சும உடலில் வாழ்பவர்கள் இருக்கும் இடத்திலேயே மரப்பொம்மைகள் போல யுகயுகங்களாக அப்படியே இருப்பார்கள்.பகவான் விரும்பினால் அவர்களை அங்கிருந்து கீழே கொண்டு வருகிறார்.ஜனலோகம்,சத்தியலோகம்.துருவலோகம் என்று தேவலோகங்கள் பல உண்டு.சுவாமிஜியை சப்தரிஷி மண்டலத்திலிருந்து கூட்டி வந்ததாக குருதேவர் சொல்வதுண்டு.
-
சூட்சம உடலில் வாழ்பவர்களில் இரு பிரிவினர் உண்டு.  சிலர்  இந்த உலகத்தைப்போலவே மேல் உலகத்தில் பகவானுக்கு சேவை செய்பவர்களாக இருப்பார்கள்.மற்றொரு பிரிவினர் மரப்பொம்மைகள் போல தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள்
-
நிர்விகல்ப நிலையை அடைந்த பிறகும் ஈசுவரகோடிகளால் தங்கள் மனத்தைத் திரட்டி சாதாரண நிலைக்கு கொண்டுவர முடியும்
-
ஆசையின் சாயலே இல்லாமல்போனால்தான் பிறவியிலிருந்து விடுதலை கிடைக்கும்.கங்கையில் உடலை விட்டால்கூட அசையில் சாயல் இல்லாமல் இருந்தால்தான் முக்தி கிடைக்கும்.வேறு எதனாலும் எந்தப்பயனும் இல்லை.
-
இந்த மாயா உலகில் பகவான் ஒருவர்தான் எல்லாம் அறிந்தவராக இருக்க முடியும்.
-
ஸ்ரீராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவி ஆன்மீக வாட்ஸ் அப் குழு 9003767303 .உங்கள் வாட்ஸ் அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-

No comments:

Post a Comment