Thursday, 11 October 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-3



ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-3
-
செயல்கள் என்பது எவ்வளவுநாள் வரை? கடவுளை அடையாததுவரை.அப்போது மனிதன் பாவபுண்ணியங்களைக் கடந்து செல்கிறான்.பழம் தோன்றியதும் பூ உதிர்ந்துவிடுகிறது.பழத்திற்காகத்தான் பூ பூக்கிறது.அதேபோல் கடவுளைஅடைவதுதான் செயல்களின் நோக்கம்.
-
இறைவனை எந்த அளவுக்கு நெருக்கிறாயோ அந்த அளவுக்குக் கடமைகளை அவரே குறைத்துவிடுகிறார்.மருமகள் கருவுற்றால் மாமியார் படிப்படியாக வேலைகளை குறைத்துவிடுவாள்.
-
பெண்கள் அவல் குத்துவதை பார்த்திருக்கிறாயா? ஒரு கையில் உலக்கை இருக்கும் இன்னொரு கையால் உரலில் உள்ள நெல்லை விலக்கிவிடுவார்கள்.அதே நேரத்தில் பேசிக்கொண்டும் இருப்பார்கள்.மனம் முழுவதும் உலக்கை கையில் விழுந்துவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும்.இதற்கு நிறைய பயிற்சி தேவை.அதேபோல இல்லறத்தில் இருப்பவர்கள் மனத்தின் ஒரு பகுதியை எப்போதும் இறைவனில் வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் சர்வ நாசம்தான்
-
ஞானம் பெற்றபிறகு இல்லறத்தில் வாழலாம்.ஆனால் முதலில் ஞானம்பெற வேண்டும்.இல்லறமாகிய தண்ணீரில் மனமாகிய பாலை வைத்தால் கலந்துவிடும்.ஆகவே மனமாகிய பாலைத் தயிராக்கி தனிமையில்வைத்து,கடைந்து வெண்ணை எடுத்து,அதை இல்லறமாகிய தண்ணீரில் வைக்க வேண்டும்.அப்போது வெண்ணை தண்ணீரில் கலக்காது
-
ஆரம்பத்தில் சாதனைகள் செய்வது அவசியம்.அரசமரம் சிறு செடியாக இருக்கும்போது அதைச்சுற்றி வேலை அமைக்க வேண்டும்.இல்லவிட்டால் ஆடுமாடுகள் மேய்ந்துவிடும்.அதுவே பெரிதாக வளர்ந்துவிட்டால் ஒரு யானையைக்கூட அதில் கட்டி வைக்கலாம்.முதலில் ஞானம்.அதன்பின் இல்லறம்
-
ஆரம்ப காலத்தில் அவ்வப்போது தனிமையைநாட வேண்டும்.சாதனை தேவை.சோறு சாப்பிடவேண்டுமானால் சும்மா இருந்தால் நடக்குமா?விறகு சேகரிக்க வேண்டும்.தீ மூட்ட வேண்டும்.அரிசியை சமைக்க வேண்டும்.சோறு சாப்பிட  அதற்கு முன்பு எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது
-
ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிக்கலாம்.இறைவனிடம் பக்தி ஏற்படாவிட்டால் அவரை அடையவேண்டும் என்ற ஏக்கம் ஏற்படாவிட்டால் எல்லாம் வீண்.சாஸ்திரம் படித்த விவேக வைராக்கியம் இல்லாத பண்டிரின் நோட்டம் எல்லாம் காமத்திலும் பணத்தின்மீதும்தான் இருக்கும்.
-
எந்த அறிவைப் பெற்றால் இறைவனை அறிய முடியுமோ,அதுதான் அறிவு.பிற எல்லாம் வீண்.
-
இறைவனைப்பற்றி கேள்விப்படுவது என்பது ஒன்று,அவரைப் பார்ப்பது என்பது மற்றொன்று,அவருடன் பேசுவது என்பது வேறொன்று.பாலைப்பற்றி கேள்விப்பட்டால் போதுமா? அதை பார்த்தால் மகிழ்ச்சி வரும் குடித்தால்தானே வலிமை வரும்.இறைவனது காட்சிபெற்றால் அமைதி கிடைக்கும்.அவருடன் பேசினால் ஆனந்தம் உண்டாகும்.ஆற்றல் அதிகரிக்கும்
-
இறைவனை அடையவதற்கு உரிய வேளை வராமல் எதுவும் நடக்காது. ஒரு குழந்தை தூங்கப்போகும் முன், அம்மா தூங்கும்போது வெளிக்கு வந்தால் எழுப்பிவிடு என்றது.அதற்கு அவள் கவலைப்படாதே அந்த உணர்ச்சியே உன்னை எழுப்பிவிடும் நான் எழுப்பத் தேவையில்லை என்றாள்.
-
யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் அறிந்தே வைத்திருக்கிறார். நீ இறைவனுடைய திருவடிகளில் எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்.அவரிடம் வக்காலத்துகொடு.அவர் எது நல்லது என்று நினைக்கிறாரோ அதை செய்யட்டும்.ஒரு நல்ல மனிதனிடம் பொறுப்பைஒப்படைத்துவிட்டால் அவர் ஒருபோதும் வஞ்சிக்க மாட்டார்.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் வாட்ஸ் அப் குழு 9003767303
--

No comments:

Post a Comment