Thursday, 11 October 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-2



ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-2
-
பிரம்மம் என்பது என்ன என்பதைப் பண்டைய முனிவர்கள் கடுந்தவத்தின் விளைவாக உணர்வில் உணர்ந்தார்கள்.அனுபவத்தில் உணர்ந்தார்கள்.அவர்கள் நாள் முழுவதும் தவம் செய்வார்கள்.சிறிது பழம்,கிழங்கு இவற்றை உண்பார்கள்.உலகப்பற்று ஒரு துளி இருந்தாலும் பலன் கிடைக்காது.தொடு உணர்ச்சி,ஓசை,மணம் இவற்றின் நிழல்கூட மனத்தில் இருக்கக்கூடாது.அப்போது மனம் தூய்மையாகும்.அந்த தூயமனம் எதுவோ அதுவே தூய ஆன்மா
-
காமம்,உலகியல் பற்று மறைந்த பின்,மனம் தூய்மையான பின் அனைத்தையும் செய்பவன் நான் அல்ல என்ற அனுபவம் உண்டாகிறது.இன்பத்திலாகட்டும்,துன்பத்திலாகட்டும் நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்ற எண்ணம் மறைந்துவிடுகிறது.
-
உலகியல் எண்ணங்கள் மனத்தை சமாதிநிலை அடையவிடுவதில்லை.உலகியல் எண்ணங்கள் அடியோடு விலகுமானால் ஸ்தித சமாதி உண்டாகிறது.ஸ்தித சமாதியில் என்னால் உடம்பை விட்டுவிட முடியும்.ஆனால் பக்தியை பற்றிக்கொண்டு பக்தர்களுடன் வாழவேண்டும் என்னும் ஆசை சிறிது இருக்கிறது.அதனால்தான் சிறிதுமனம் உடலின்மீது ஒட்டிக்கொண்டிருக்கிறது
-
சிதறிக்கிடக்கின்ற மனத்தைத் திடீரென்று ஒன்றுபடுத்துவது உன்மனா சமாதி.இந்த நிலை அதிகநேரம் நிலைக்காது.உலகியல் எண்ணங்கள் வந்து கலைத்துவிடுகிறது.யோகிகள் யோகத்திலிருந்து நழுவி விடுகிறார்கள்
-
உலகியல் மனிதர்களுக்குக்கூட எப்போதாவது சமாதிநிலை வாய்க்கலாம்.சூரியன் உதித்ததும் தாமரை மலர்கிறது.மேகம் சூழ்ந்து சூரியனை மறைந்தததும் தாமரை கூம்பிவிடுகிறது.உலகியல்தான் மேகம்.உலகியல் எண்ணங்கள் சூழ்ந்து சமாதிநிலையை அடையவிடுவதில்லை.
-
பிரம்மஞானத்திற்குப் பிறகு உடல் நிலைப்பதில்லை.இருபத்தியொரு நாட்களில் மரணம் உண்டாகிவிடும்.
பிரம்ம ஞானத்திற்குப்பிறகும்.உலக மக்களுக்கு போதிப்பதற்காக அவதாரபுருஷரின் உடல் நிலைத்திருக்கிறது
-
பிரம்மம் உண்மை,உலகம் உண்மையில்லை.எல்லாம் கனவுக்கு ஒப்பானது.இதுதான் ஆராய்ச்சி.இது மிகக் கடினமான வழி.இந்த வழியில் இறைவனது லீலை கனவு போன்றது.உண்மையற்றதாகிவிடுகிறது.நான் என்ற எண்ணம்கூட பறந்துவிடுகிறது.இது கடினமான வழி
-
சில வேளைகளில் கடவுள் காந்தக்கல்லாக இருக்கிறார்.பக்தன் ஊசியாக இருக்கிறான்.வேறு சில வேளைகளில் பக்தன் காந்தக்கல்லாகிறான்,இறைவன் ஊசியாகிவிடுகிறார்.பக்தன் இறைவனை இழுக்கிறான்.இறைவன் பக்தவச்சலர் பக்தர்களுக்கு கட்டுப்பட்டவர்
-
அவதாரபுருஷரை எல்லோராலும் அறிந்துகொள்ள முடியாது. உடல் தரித்தால் நோய்.துக்கம்.பசி,தாகம் எல்லாம் உண்டு.இவற்றை அவதாரபுருஷர்களிடமும் காணும்போது,அவர்களும் நம்மைப்போல்தானே என்று எண்ணத்தோன்றிவிடுகிறது.சீதையைப் பிரிந்த சோகம் தாளாமல் ராமர் அழுதார்.பஞ்பூதங்களாகிய பொறியில் சிக்கி பிரம்மம் அழுதது
-
ஒரு இடத்தில் யாருமே இறைநாமத்தைப் பாடுவதைில்லை என்று என்னிடம் ஒருவன் கூறினான்.இதை அவன் கூறிய அளவிலேயே.இறைவன் ஒருவனே எல்லா உயிர்களாகவும் ஆகியிருப்பதை நான் கண்டேன்.
-
அருவமும் உண்மை.உருவமும் உண்மை.சச்சிதானந்த பிரம்மம் எப்படிப்பட்டது என்று நங்கடா(ஸ்ரீராமகிருஷ்ரின் குரு) உபதேசிப்பார். எல்லையற்ற கடல்போல்-மேல்.கீழ்,இடம்,வலம் என்றில்லாமல் எங்கும் தண்ணீர்மயம்.அனைத்திற்கும் ஆதிகாரணமான தண்ணீர் அது.அங்கே அசைவில்லை.அது செயல்படும்போது தண்ணீர் அலைகளாக எழுகிறது.இந்த செயல்தான் படைத்தல்.காத்தல்.ஒடுக்கல்
-
கற்பூரத்தை கொழுத்தினால் எல்லாம் எரிந்துவிடுகிறது.சாம்பல்கூட எஞ்சுவதில்லை.அதுபோல ஆராய்ச்சி சென்று சேருமிடம்தான் பிரம்மம்.மனம் வாக்கிற்கு எட்டாதது பிரம்மம்.உப்பு பொம்மை கடலை அளக்கச்சென்றது.அங்கேயே கரைந்துவிட்டது.
-
ஒரே சச்சிதானந்தம்.அதன் சக்தி ஒரு கருவி வழியாக, அதாவது மனித உடல் வழியாக வெளிப்படுகிறது.இந்த உடல்தான் அவதாரம்.பன்னிரண்டு முனிவர்கள் மட்டுமே ராமரை அவதாரம் என்று அறிந்துகொண்டார்கள்.மனிதராக வரும்போது அவதாரபுருஷரை அறிந்துகொள்வது கடினம்.
-
இங்கே வருவதற்கு முன்பு நீ யார் என்பதை மறந்திருந்தாய்.இனி உன்னை நீ அறிந்துகொள்ள முடியும். இறைவனே குருவாக வந்து அறியுமாறு செய்வார்
-
சாதுக்களுக்கும் பக்தர்களுக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும். பணம் படைத்தவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்.
-
அகங்காரமும் தளைகளும் மறைந்த பிறகுதான் கடவுளைக்காண முடியும்.நான் அறிவாளி,நான் இன்னாரின் மகன்,நான் பணக்காரன், நான் பிரபலமானவன் இத்தகையை தளைகளை விட்டுவிட்டால்தான் இறைக்காட்சி கிடைக்கும்.
-
கடவுள்தான் உண்மை,மற்ற எல்லாம் நிலையற்றவை,வாழ்க்கை நிலையற்றது.இத்தகைய சிந்தனைதான் விவேகம். விவேகம் இல்லையென்றால் உபதேசங்களை மனத்தில் வாங்கிக்கொள்ள முடியாது
-
இறைவனை தியானிக்க வேண்டுமானால் முதலில் அவரை எந்த வரையறைக்கும் உட்படாதவராக தியானிக்க முயற்சிப்பது நல்லது.அவர் வரையறைகளுக்கு உட்படாதவர்,மனவாக்கிற்கு அப்பாற்பட்டவர்.ஆனால் இந்த வகையான தியானத்தின் மூலம் நிறைநிலையை அடைவது கடினம்.அவதாரபுருஷரை தியானிப்பது எளிது.
-
மனிதர்களின் உள்ளே நாராயணன் உள்ளார்.உடல் ஒரு திரை மட்டுமே-லாந்தர் விளக்கின் உள்ளே விளக்கு எரிவதுபோல் அல்லது கண்ணாடி அலமாரிக்குள் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதுபோல்
-
படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் இரவு பகலாக நடந்துகொண்டே இருக்கிறதே இவையெல்லாம் இறைவனின் சக்தியால் நடைபெறுகின்றன.இதை ஆத்யா சக்தி என்று சொல்கிறார்கள்.இந்த ஆத்யா சக்தியும் பிரம்மமும் பிரிக்க முடியாதவை.பிரம்மம் இன்றி சக்தி இல்லை.இறைவன் இந்த உலகத்தில் நம்மை வைத்திருக்கும்வரை ஆத்யாசக்தியும் உண்மை,பிரம்மமும் உண்மை.
-
இறைவன் உருவம் உள்ளவர்,அதேபோல் உருவமற்றவர்.இன்னும் எத்தனையெத்தனையோ நிலைகள் உடையவர் .நித்தியம் யாருடையதோ அவருடையதே லீலையும். மன வாக்கிற்கு எட்டாத அவரே பல உருவங்களைத் தாங்கிச் செயல்களில் ஈடுபடுகிறார். ஓம் என்பதிலிருந்தே, ஓம் சிவ.ஓம் காளி, ஓம் கிருஷ்ண எல்லாம் தோன்றியுள்ளன.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேங்களை அறிய 9003767303 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ரிக்கொஸ்ட் அனுப்பவும்

No comments:

Post a Comment