Thursday, 11 October 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-4




ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-4
-
இறைவன் செய்விக்கிறார் என்பது உண்மைதான்.அவர்தான் கர்த்தா,மனிதர்கள் கருவி மட்டுமே.அதேவேளையில் கர்மபலன் இருப்பதும் நிச்சயமான உண்மை.மிளகாயைத் தின்றால் வயிறு எரிகிறது.மிளகாய் வயிற்றை எரிக்கும் என்பது இறைவனின் கட்டளை.பாவம் செய்தால் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும்
-
சித்தனால் அதாவது இறைக்காட்சி பெற்றவனால் பாவம் செய்ய முடியாது.திறமையான பாடகன் தாளம் தவற மாட்டான்.பயிற்சிபெற்ற தொண்டையிலிருந்து ச-ரி-க--ம சரியான சுருதியில்தான் வரும்.
-
நானே அவன் என்று சொல்பவனுக்கு இந்த உலகம் கனவைப்போன்றது.அவனுடைய நான்-உணர்வுகூட கனவைப்போன்றதுதான்.மொத்தத்தில் அவனால் அன்றாட கடமைகளைச் செய்ய முடியாது.ஆனவே சேவக பாவனை,தாச பாவனை மிகவும் நல்லது
-
அனுமனிடம் சேவக பாவனை இருந்தது.அவன் ராமரிடம் பிரபோ சில சமயம் நீங்கள் முழுமை நான் உங்கள் அம்சம் என்றும்.சில சமயம் நீங்கள் எஜமான் நான் சேவகன் என்றும் நினைக்கிறேன் .ஆனால் உண்மை ஞானம் ஏற்படும்போது நீங்களே நான்,நானே நீங்கள் என்று காண்கிறேன் என்றார்
-
யார் உருவம் உள்ளவரோ அவரே உருவமற்றவர்.பக்தர்களுக்காக அவர் உருவமுடையவராக காட்சி தருகிறார்.பரந்து விரிந்து கிடக்கின்ற கடல் அதில் தண்ணீர் சில இடங்களில் பனிக்கட்டியாகிறது.பக்தனின் பக்தி என்ற குளிர்ச்சி காரணமாக உருவக்கடவுள் காட்சி கிடைக்கிறது
-
ஞான நெறியில் செல்பவன் உருவக்கடவுளை காண்பதில்லை.ஞானம் என்ற சூரியன் உதித்ததும் பனிக்கட்டிகள் எல்லாம் உருகிவிடுகின்றன.ஆனால் அருவம் யாருடையதோ அவருடையதே உருவமும்
-
இல்லறத்தில் சேற்றுமீனைப்போல வாழ வேண்டும். குளத்தில் சேறு இருக்கிறது,ஆனால் மீனில் உடலில் அது ஒட்டுவதில்லை.இந்த மாயா உலகில் வித்யை அவித்யை இரண்டும் உள்ளது.அவித்தையை விலக்கி வித்யையை பற்றிக்கொள்ள வேண்டும்
-
பரமஹம்சர்கள் என்று யாரை சொல்கிறோம்? பாலும் தண்ணீரும் கலந்து இருந்தாலும் அன்னப்பறவையைப்போல் தண்ணீரை விலக்கிவிட்டு பாலை எடுக்க தெரிந்தவர்களைத்தான். சர்க்கரை மணல் இரண்டும் கலந்திருந்தாலும் எறும்பைப்போல் மணலை நீக்கி சர்க்கரையை எடுக்கத்தெரிந்தவர்களைத்தான்
-
குழந்தை தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வரப்பின்மீது நடந்தால் ஒருவேளை குழியில் விழ நேரலாம்.ஆனால் தந்தை குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டால் அந்தக் குழந்தை ஒருபோதும் விழாது
-
ஒரு பெண் தன் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு  பணிவிடை செய்கிறாள். ஆனால் அவள் தன் கணவனுக்கு பணிவிடை செய்வது என்பது வேறு.அதேபோல் அனைத்து தெய்வங்களையும் வணங்கு.ஆனால் இஷ்டதெய்வத்திடம் உன் மனத்தை வை.
-
யாரையும் எந்த மதத்தையும் வெறுக்கக்கூடாது.அருவவாதி,உருவவாதி எல்லோரும் இறைவனை நோக்கியே செல்கிறார்கள்.ஞானி,யோகி,பக்தன் எல்லோரும் தேடுவது இறைவனைத்தான்.ஞான நெறியினர் பிரம்மம் என்கிறார்கள்.யோகிகள் ஆத்மா என்கிறார்கள்.பக்தர்கள் பகவான் என்கிறார்கள்
-
ஏதாவது ஒரு பாதையில் சரியாக போக முடிந்தால் அவரை அடையலாம்.அப்போது எல்லாப் பாதையைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.எப்படியாவது ஒருமுறை மாடியை அடைந்துவிடவேண்டும். பிறகு மரப்படிகள் வழியாகவும் கீழே வரலாம். நல்ல படிக்கட்டின் வழியாகவும் கீழே வரலாம்.கயிற்றை பிடித்துகூட இறங்கிவரலாம்
-
ஒருமுறை எப்படியாவது பணக்காரவீட்டு சொந்தக்காரனை சந்தித்துவிட வேண்டும்.அவனுடன் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது அவனே தன்னைப்பற்றியும் தனது சொத்துக்களைப்பற்றியும் சொல்வான்.அதேபோல இறைவனை அடைந்தால் இந்த உலகத்தைப்பற்றி அவரே அனைத்தையும் சொல்லித்தருவார்
-
இறைவனடைய திருப்பெயரையும் மகிமையையும் எப்போதும் பாடவேண்டும்.முடிந்தவரை உலகியல் சிந்தனைகளை அடியோடி விலக்க வேண்டும். விவசாயத்திற்காக சிரமப்பட்டு தண்ணீரைக்கொண்டு வருகிறாய்.ஆனால் வளைகள் வழியாக அது வெளியே போய்விடுகிறது.வாய்க்கால் வெட்டி என்ன பயன்?உலகியல் சிந்தனைகளை விலக்கினால்தான் இறைவனைக்காண முடியும்
-
மனம் தூய்மையடைந்து,உலகியல் பற்று அகன்றுவிடுமானால் மன ஏக்கம் ஏற்படும்.அப்போது உன் பிரார்த்தனை இறைவனைச் சென்றடையும்.உலகியல் பற்றை முழுமையாக விடமுடிந்தால் யோகம் கைக்கூடும்
-
எந்த விதமான ஆசையும் இருக்க்கூடாது.ஆசையோடு கூடிய பக்தியை ஸகாம பக்தி என்பார்கள்.பயன் கருதாமல் செய்யும் பக்தி அஹேதுகீ பக்தி.இறைவனா நீ என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன்னை நேசிக்கிறேன்-இதுதான் அஹேதுகீ பக்தி
-
மனைவிக்கு கணவனிடம் உள்ள வசீகரம்,தாய்க்கு  குழந்தையிடம் உள்ள ஈர்ப்பு.உலகியல் மனிதனுக்கு பொருள்மீது உள்ள பற்று இந்த மூன்றும் ஒன்று சேருமானால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட உணர்வு தோன்றுமானால் இறைக்காட்சி கிடைக்கும்.
-
அதிக ஆராய்ச்சி நல்லதல்ல.முதலில் இறைவன்.பிறகு உலகம். முதலில் இறைவனை அடைந்தால் அவருடைய உலகத்தைப்பற்றியும் அறிந்துகொள் முடியும்.
-
யாரும் அறியாதபடி தனிமையில் மன ஏக்கத்துடன் ஏங்கிஏங்கி அழுது இறைவனை அழைக்க வேண்டும்.முதலில் வேண்டுவது இறைக்காட்சி.அதன்பிறகு சாஸ்திரத்தைப்பற்றியும் உலகத்தைப்பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம்.அதிக ஆராய்ச்சி நல்லதல்ல.
-
அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அதனால் தீங்குதான் நேரும்.பிறகு நீயும் ஹாஸ்ராவைப்போல வறட்டுஞானி ஆகிவிடுவாய்.நான் இரவில் தனிமையில் அழுதுகொண்டே அம்மா ஆராய்சி புத்தியை உன் வஜ்ராயுதத்தால் ஓங்கி அடி என்று வேண்டுவேன்.
-
பக்தியினால் எல்லாம் கிடைக்கும். பிரம்மஞானத்தை விரும்புபவர்களும் பக்தி நெறியைக் கடைபிடித்தால்,அவர்களுக்கு அது கிடைக்கும்.இறைவனுடைய கருணை இருந்தால் ஞானத்திற்கு குறைவு இருக்குமா என்ன? தேவி ஞானத்தை அள்ளிக்கொடுப்பாள்.
-
இறைவனைப் பெற்றுவிட்டால் பண்டிதர்கள் வைக்கோல் துரும்புபோல் தோன்றுவார்கள். பக்தியினால் எல்லாம் கிடைக்கும்.
-
நான் அழதுகொண்டே தேவியிடம்,அம்மா வேத வேதாந்தத்தில் என்ன இருக்கிறதோ அதை எனக்கு தெரிவி.புராண,தந்திரத்தில் என்ன இருக்கிறதோ அதை எனக்கு தெரிவி என்று வேண்டினேன்.அம்பிகை ஒவ்வொன்றாக எனக்கு தெரிவித்தாள்.ஆம்.அவள் எனக்கு எல்லாவற்றையும் அறிவித்தாள்.எவ்வளவோ விஷயங்களை எனக்கு காட்டியருளினாள்
-
தேவி ஒரு நாள் நாலா பக்கமும் சிவனையும் சக்தியையும் காட்டினாள்-சிவசக்தியின் கூடலைக் கண்டேன்.மனிதன், ஜீவராசிகள்,மரம்.செடி.கொடி என்று அனைத்திற்குள்ளும் அதே சிவசக்தி,அதே புருஷ பிரகிருதி.அவர்களின் கூடலை எங்கும் கண்டேன்.
-
இறைவனை நாடும்போது சேவகனாக,பிள்ளையாக ஏதாவது ஒரு பாவனையை கைக்கொள்ள வேண்டும்.அல்லது வீரபாவனையை மேற்கொள்ளலாம்.என்னுடையது குழந்தை பாவனை.இந்த உறவு முறையைக் கண்டால் மாயாதேவி வெட்கத்தினால் விலகி வழிவிட்டு நிற்கிறாள்
-
சித்தனான பிறகு எல்லா பாவனையும் பிடிக்கும்.அந்த நிலையில் காமத்தின் நிழல்கூட இருக்காது.அந்த நிலையில் பெண்மை பாவனை வருகிறது. நான் ஓர் ஆண் என்ற உணர்வு இருக்காது.
-
ரிஷிகள் அருளிய சனாதன தர்மம்தான் நிலைத்து நிற்கும் மற்றவைகள் சிலகாலம் மட்டும் நிற்கும். எல்லாம் இறைவனின் திருவுள்ளப்படி தோன்றுகின்றன,மறைகின்றன
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் வாட்ஸ் அப் குழு 9003767303

No comments:

Post a Comment