Friday, 21 September 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-8

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-8
-
எப்போதும் குருதேவரின் அமுதமொழிகளை நினைவில் வை.மனம் தானாக அமைதியடைவதைக் காண்பாய்
-
என்னைத்தவிர வேறோர் அம்மா இருக்கிறாளா என்ன? எல்லாப் பெண்களிலும் நானே இருக்கிறேன்.எல்லா அன்னையரிலும் நானே இருக்கிறேன்.யார் எங்கிருந்து வந்தாலும் சரி,அனைவரும் என் பிள்ளைகளே.இது அறுதி சத்தியம்.இதனைப் புரிந்துகொள்.
-
மகளே,எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கான காலம் இன்னும் வரவில்லை.அதனால்தானே என் பிள்ளைகள் அறிவற்றவர்கள்போல் பேசுகிறார்கள்.உரிய வேளை வந்தால் எல்லாம் புரியும்
-
இதோ பாரம்மா! எல்லாவற்றையும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியுமா என்ன? குடும்ப வாழ்க்கையில்தான் எத்தனை கஷ்டங்கள்.இந்த கஷ்டங்களைக் கண்டுதானே பகவான் மீண்டும்மீண்டும் இறங்கி வருகிறார்.
-
குழந்தைகளிடம் பகவானின் இருக்கை உள்ளது.அவர்களிடம் அவரது வெளிப்பாடு அதிகம்.ஏனெனில் குழந்தைகள் கள்ளம்கபடம் இல்லாதவர்கள்,தூயவர்கள்.அதனால்தானே குருதேவர் குழந்தையின் உள்ளத்துடன் அழைத்தால் தேவி ஓடி வருவாள் என்று கூறினார்
-
அனைத்தையும் மறந்து “அம்மா அம்மா” என்று அழைத்தால் அவள் ஓடி வருவாள் என்பதைத் தமது வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டி உலகிற்கு நிரூபித்தார் குருதேவர்
-
கவலை எதற்கு அம்மா? குடும்பச் சுமைகளையும் குருதேவர்தானே தந்துள்ளார்! குடும்பத்திலுள்ள வேலைகளைச் செய்வது உங்கள் கடமை.கடமைகள் முடிந்தால்தானே இறைவனிடம் வர முடியும்
-
ஆசைப்படுவதால் மட்டும் எல்லாம் நடந்துவிடாது.ஆசைகளை நிறைவேற்றுவது மனிதனின் கையில் இல்லை.இறைவனின் திருவுள்ளத்தால்தான் எல்லாம் நடக்கிறது
-
குடும்ப வாழ்க்கையில் இருந்தால் குருதேவரின் அன்பு,பாசம்,அருள் கிடைக்காதா? இப்படி ஓர் எண்ணம் உன் மனத்தில் எவ்வாறு எழுந்தது?குருதேவர் இல்லறத்தார்களுக்காகவே அதிகம் கவலைப்பட்டார்
-
இல்லறத்தார்களின் துயரம் அளவற்றது.எத்தனை மோகம்,எத்தனை பொறுப்பு,எத்தனை கடமைகளுக்கு இடையில் வாழவேண்டியிருக்கிறது.ஒரு கையால் பகவானைப் பிடித்துக்கொள், மறு கையால் குடும்பக் கடமைகளைச் செய் என்று குருதேவர் கூறுவதை அமுதமொழியில் படிக்கவில்லையா?
-
அவர் அந்தர்யாமி,அனைவரின் இதயத்திலும் அவர் எப்போதும் இருக்கிறார்.நீ உள்ளத்தில் பிரார்த்தனை செய்வாயானால் அவர் அதைப் புரிந்துகொள்ளவே செய்வார்.அது மட்டுமல்ல,குடும்பமும் அவருடையதே அல்லவா?அவரது திருவுள்ளம் இல்லாமல் ஏதாவது நடக்குமா?
-
யார் அவரை நேசிக்கிறார்களோ அவர்களை அவர் காக்கிறார்.நீ அவரை நேசித்தாலும் நேசிக்காவிட்டாலும் அவர் உன்னை நேசிக்கிறார்.நீ அவரை கொஞ்சம் நினைத்தாலும்போதும்,கொஞ்சம் தியானித்தாலும் போதும்.ஆனால் செய்வதை உயிரும் உள்ளமும் இணைந்து செய்யங்கள்
-
நாள் முடியும் வேளையில் இரண்டு சொட்டு கண்ணீருடன் நாமஜெபம் செய்யுங்கள்.இந்த இரண்டு சொட்டு கண்ணீர் அல்லாமல் உங்களிடம் வேறு என்னதான் உள்ளது.சொல் பார்க்கலாம்.வேறு உள்ள அனைத்தும் இறைவனுடையது
-
பயம் எதற்கு அம்மா? குருதேவர் இந்த முறை வந்தது உங்களுக்காகத்தான்.நீங்கள் பகவானைப் பெறுவதற்கு இந்த சுலபமான பாதையைக் காட்டி சென்றுள்ளார் அவர்
-
பகவானை நேசிப்பதற்கு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடு.பகவான் என்னுடையவர் என்ற எண்ணத்துடன் அவரை நேசிப்பதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்
-
முற்பிறவி வினைகளின் பயனையும் கொண்டுதானே பூமியில் ஒவ்வொருவனும் பிறக்கிறான்.அதனால்தான் சிலர் சிறுவயதிலிலருந்தே இறைவனை நேசிப்பதைக் காண்கிறோம்.சிலர் வளர்ந்த பிறகு வழி தவறிப்போகலாம்.எல்லாம் சொந்த வினைப்பயன்.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை தினமும் பெற வாட்சப் குழு 9003767303

No comments:

Post a Comment