Monday, 23 March 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-4

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-4
-
வகுப்பு-4 நாள்-20-12-2019
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
-
 எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற மனச்சோர்வு எங்கிருந்து வந்தன?
வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை.
இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.

பார்த்தா, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல.
இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.
-
கடமை போர் செய்யும்படி தூண்டுகிறது. பாசம் போர்செய்ய மறுக்கிறது
-
துரியோதனது படையில் நியாயம் தெரிந்த பலர் இருக்கிறார்கள்.
தாங்கள் அநியாயத்தின் பக்கம் நிற்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.
இருந்தாலும் அவர்கள் போர்செய்ய வந்திருக்கிறார்கள்.
பீஷ்மர்,துரோணர்,கிருபர் போன்றவர்கள் இந்த போரைவிட்டுவிட்டு பிச்சையெடுத்து வாழும் வாழ்க்கைக்கு சென்றிருக்கலாம்.அவ்வாறு செய்திருந்தால் போர் நிகழாமல் போயிருக்கும்.சமாதானம் ஏற்பட்டிருக்கும்.

அநியாயத்தின் பக்கம் நல்லவர்களும் நிற்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.
-
நமது வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்.
ஒரு அலுவலகத்தில் சாதாரண  பணியில் நாம் இருக்கலாம்.
நமக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் அநியாயத்தின் பக்கம் நிற்பார்கள்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள்.சில நல்லவர்களும் அவர்களோடு அதற்கு துணையாக இருப்பார்கள்.
இது நமக்கு வேதனையைத் தருவதாக இருக்கும்.

நமது மனம் அவர்களோடு சேர்ந்து தவறு செய்ய அனுமதிக்காது.
அதனால் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்
அவர்களை எதிர்க்கவும் முடியாது.அவர்களோடு உடன்படவும் முடியாது
இப்போது மனத்தில் பெரிய போராட்டம் நிகழும்
இந்த வேலையை விட்டுவிட்டு பிச்சை எடுத்து வாழ்வது மேல் என்ற எண்ணம் வரும்
-
இப்போது என்ன செய்வது? பகவத்கீதை நமக்கு எந்த விதத்தில் உதவும்?
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥

ஒரு சத்திரியன் என்ற முறையில் உனது முக்கிய கடமையைப் பற்றிக் கருதுவாயேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவையில்லை.
-
சத்திரியனுடைய கடமை என்ன? அநீதியை எதிர்த்து போர்புரிவது.
 அதனால் மரணம் நேர்ந்தாலும் அது நல்லதுதான்.
ஏனென்றால் அநீதியை எதிர்த்து போர்புரிபவனுக்கு சொர்க்கம் கிடைக்கும்.
அநீதியை எதிர்த்து போர்புரியும் ஒருவனை மக்கள் தெய்வம் என்று வணங்குவார்கள்.
அவனுக்கு கோவில் கட்டுவார்கள்.வழிபாடு நடத்துவார்கள்.

சுதந்திரப்போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து போராடி அந்த போராட்டத்தில் உயிரை நீத்த பலரை மக்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள்.
அவர்களைத்தவிர அந்த காலத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோனார்கள்.
அநீதியை எதிர்த்து போராடியவர்கள் எப்போதும் வாழ்வார்கள்.
அவர்கள் சூட்சும உடலில் நீண்டகாலம் வாழ்வார்கள்.இதுதான் சொர்க்க வாழ்க்கை
-
இவ்வாறு அநீதியை எதிர்க்க வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல் அநீதியுடன் சமாதானம் செய்துகொண்டால் என்னவாகும்?

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥

இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோடு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பாய்.

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥

மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர்.
மதிக்கப்பட்ட ஒருவனுக்கு அவமானம் மரணத்தைவிட மோசமானதே.

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥

உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெருமதிப்புக் கொண்டுள்ள பெரும் போர்த்தலைவர்கள்,
பயத்தால் நீ களம் விட்டதாக எண்ணி, உன்னைக் கோழையாய்க் கருதுவர்.

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥

உனது எதிரிகள் அன்பிலாதவற்றைக் கூறி உன்னைத் தூற்றுவர்.
இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தருவது வேறு என்ன இருக்க முடியும்?
-
அநீதியை எதிர்த்து நிற்க வேண்டும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நாம் ஒரு சாதாரண வேலையில் இருக்கலாம். நமது மேல் அதிகாரி தவறு செய்பவராக இருக்கலாம்
எடுத்த உடனேயே மேல் அதிகாரிகளை எதிர்த்து சிலர் போராடுகிறார்கள்.இது தவறு.
கடைசியில் இருக்கின்ற வேலையையும் இழந்து தெருவில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

நாம் இப்போது இருக்கும் நிலையிலிருந்தே தொடங்க வேண்டும்.
ஒரு எறும்பு இன்னொரு எறும்பை எதிர்க்கலாம். யானையை எதிர்க்கலாமா?
எனவே நாம் இப்போது இருக்கும் நிலையிலிருந்து நம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டே வரவேண்டும்.
ஒருவன் தனது கடமையை சிறப்பாக செய்ய ஆரம்பித்தால்.உயர்ந்த கடமைகள் படிப்படியாக வந்துகொண்டே இருக்கும்.
கடைசியில் உயர்ந்த அதிகாரியாகும் வாய்ப்பு கிடைக்கும்.
-
ஒரு அரசன் இன்னொரு அரசனை எதிர்த்து போர்புரியலாம்.
ஒரு சாதாரண படைவீரன் ஒரு ராஜாவை எதிர்த்து போரிட முடியாது.
அப்படி அந்த படைவீரனுக்கு ராஜாவை எதிர்க்க வேண்டும் என்று தோன்றினால்.
முதலில் ஒரு நாட்டிற்கு ராஜாவாக மாறவேண்டும்.பின்பு எதிர்த்து போரிடலாம்
-
எனவே நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலையில் நமக்கு சமமானவர்களை எதிர்த்து படிப்படியாக முன்னேற வேண்டும்.
-
சில வேளைகளில் இந்த உலகத்திலுள்ள யாரையும் பிடிக்காமல் போய்விடும். அப்போது பிச்சை எடுத்து வாழ்வது சிறந்தது என்று தோன்றும்.
ஒரு நாள் பிச்சை எடுத்து பார்த்தால் தெரியும்.
இந்த உலகத்தில் மிகமிக கீழாக மதிக்கப்படக்கூடிய ஒருவன் பிச்சைக்காரன்.
பிச்சைக்காரனின் முகத்தைக்கூட யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள்.மிகவும் அலட்சிய மனப்பான்மையுடனேயே பலர் பிச்சையிடுவார்கள்.
பிச்சையெடுப்பதை எண்ணி பிச்சைக்காரனால் பெருமைப்பட முடியாது.
சாதுக்கள் பலர் பிச்சை எடுக்கிறார்கள்.அவர் போதிய ஞானம் பெற்றவர்கள்.
அவர்கள் பிச்சையெடுப்பதை பெருமையாக நினைப்பவர்கள்.
மக்கள் அவர்களை வெறுப்புடன் நடத்துவதில்லை.அவர்கள் வேறு ரகம்.
உணவுக்காக பிச்சையெடுப்பவர்களைப்பற்றி கூறுகிறேன்
-
இங்கே அர்ஜுனன் போதிய ஞானம் பெறவில்லை. உலகியல் ஆசைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.பல்வேறு சபதங்களை நிறைவேற்ற வேண்டி பொறுப்பு இருக்கிறது.இவனை நம்பித்தான் மற்றவர்கள் இருக்கிறார்கள்.இவன் போர் செய்ய மறுத்தால் இவனோடு சேர்ந்து மற்றவர்களும் பலவந்தமாக பிச்சைக்காரர்களாக செல்ல வேண்டியதுதான்.
-
ஒருவரது  முன்னேற்றம் என்பது அவரோடு நிற்பதில்லை. அவரது குடும்பமும் அதனால் முன்னேறுகிறது.
அந்த குடும்பம் முன்னேறும்போது சமுதாயம் முன்னேறுகிறது. நாடு முன்னேறுகிறது.
ஒரு தனிமனித முன்னேற்றம் என்பது நாட்டின் முன்னேற்றம்
-
அர்ஜுனன் பாசத்தின் காரணமாக போரிலிருந்து பின்வாங்கினால் எதிரிகள்  என்ன கூறுவார்கள்?
அர்ஜுனன் நல்லவன் போர்புரிந்து எங்களை கொல்ல விரும்பவில்லை.அதனால் போர்புரியாமல் விலகிவிட்டான் என்றா கூறுவார்கள்? இல்லை
அர்ஜுனன் ஒரு கோழை. போர்புரிந்தால் இறந்துவிடுவோம் என்று பயந்துவிட்டான். உயிர் பயத்தால் போரிலிருந்து விலகிவிட்டான் என்று இகழ்வார்கள்.
அது மட்டுமல்ல இது நாள்வரை, அர்ஜுனனை பெரிய வீரன் என்று கூறிவந்த பலர் நம் எதிரிலியே இகழ்ந்து பேசுவார்கள்.கோழை என்பார்கள்.
அது இன்னும் கொடுமையாக இருக்கும்.வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்
-
எனவே வாழ்க்கையில் போராட வேண்டும். தர்மத்தின் பக்கம் நின்று போராட வேண்டும். அதுவும் சாதுர்யமாக போராட வேண்டும். நமது வலிமை எது என்று பார்க்க வேண்டும். நமக்கு சமமானவர்களுடன் போராட வேண்டும்.படிப்படியாக வலிமையை கூட்டிக்கொண்டே வரவேண்டும். ஒரு நாள் நாட்டின் பிரதமர் ஆகும் அளவுக்கு நமது வலிமை கூடலாம். அது பலநாள் உழைப்பை பொறுத்தது.
-
இப்படி படிப்படியாக முன்னேறி என்ன பயன்? அதனால் ஞானம் பெற முடியுமா? இந்த உலக வாழ்க்கையை விட்டுவிட்டு தனிமையான இடத்திற்கு சென்று வாழ்ந்தால்தானே ஞானம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.
வேலை செய்து கொண்டே ஞானத்தை பெறும் வழியை ஸ்ரீகிருஷ்ணர் போதிக்கிறார்
-
முதலில் ஞானம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.பின்பு உலகத்தில் வாழ்ந்துகொண்டே அதை அடைவது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்

No comments:

Post a Comment