Monday, 23 March 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-3

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-3
-
வகுப்பு-3 நாள்-19-12-2019

-
இந்த பூமியில் அசுரர்கள் மனிதர்களாக பிறந்தார்கள்.
அவர்களை தடுக்க தேவர்களின் குழந்தைகள் பிறந்தார்கள்.

நல்லவர்கள் எப்போதும் தர்மத்தின் பாதையில் செல்வார்கள்.
தீயவர்கள் அதர்மத்தின் பாதையில் செல்வார்கள்.
நல்லவர்கள் பொதுவாக எல்லா இடங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள்.
தீயவர்கள் நல்லவர்களின் சொத்துக்களை பிடுங்கிக்கொள்கிறார்கள்

ஒரு நாட்டை மொத்தமாக எடுத்து பார்த்தால், சிலவருடங்கள் நாட்டில் அதர்மங்கள் அதிகரித்து காணப்படும்.
ஆட்சியாளர்களே அதர்மத்தை கண்டுகொள்ளாமலும்,அதை ஆதரிப்பது போல காணப்படுவார்கள்.
தர்மவான்கள் துன்பப்படுவார்கள்,அதர்மவான்கள் இன்பமடைவார்கள்.
இது ஒரு உச்சநிலையை அடையும்போது, அங்கே மிகப்பெரிய மாற்றம் நிகழும்
அப்போது மகான் ஒருவர் அங்கே பிறக்கிறார்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.அப்போது
ஒட்டுமொத்தமாக, அதர்மத்திலிருந்து தர்மத்தை நோக்கி நாடு பயணப்படும்.
அதர்மம் புரிந்தவர்கள் வேதனையடைவார்கள்.
தர்மவழியில் செல்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

சில வருடங்களுக்கு பின் மீண்டும் தர்மம்குன்றி அதர்மம் தலை தூக்க ஆரம்பிக்கும்.
இது ஒரு வட்டம் போல தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.
இது இயற்கையின் நியதியாகும்.
-
ஏன் இவ்வாறு நிகழ்கின்றது என்று நீங்கள் கேட்கலாம்.
துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்தை பெறமுடியாது.
இன்பத்திலேயே இருப்பவன் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் இது நியதி.
ஒரு நாட்டிற்கும் இது பொருந்தும்.
நாம் மிகவும் அவசரப்படுகிறோம்.பொறுமையாக சிந்தித்துப்பார்த்தால் உண்மை புலப்படும்
-
அதர்மத்தின் பக்கம் துரியோதனனும் அவனது படைகளும் இருக்கிறார்கள்.
தர்மத்தின் பக்கம் தர்மரும் அவரது படைகளும் இருக்கின்றன.
இரண்டும் சம பலத்தோடு இருக்கின்றன. அதர்மத்தை அழிக்க கூடுதலாக இன்னொன்று தேவை.
அது தர்மம் அதர்மம் இரண்டையும் நன்கு அறிந்து,தர்மம் அதர்மம் இரண்டிற்கும் மேலானதாக இருக்க வேண்டும்.
-
ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார்.
அவருக்கு நண்பனும் இல்லை,எதிரியும் இல்லை
ஆனால் தர்மத்தை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.
தர்மம் தோற்கக்ககூடாது.அப்படி தோற்றால்  மக்கள் நம்பிக்கையை இழந்துபோவர்கள்.உலகம் அழிந்துபோகும்.
-
ஸ்ரீகிருஷ்ணர் யார்?
அவரை ஏன் அவதாரம் என்று அழைக்கிறார்கள்?
-
யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள்,
அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர்,
கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக
அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்.அவருக்கு இன்னொரு பெயர் பகவான்
-
ஒரு மனிதனுக்கு உயிரோடு இருக்கும்போது கண்களால் பார்க்ககூடிய தூல உடலில் இருக்கிறான்.
இந்த துல உடல் அழிந்துபோனால்(இறந்துபோனால்) சூட்சும உடலில் வாழ்கிறான்
சூட்சும உடலும் அழிந்துபோனால் உடலற்ற நிலையில் ஆத்மாவாகிறான்
-
இந்த உலகத்திற்கும் மூன்று நிலைகள் உண்டு கண்களால் காணும் தூலஉலகம்
சூட்சும உடலில் வாழும் மனிதர்கள் காணும் உலகம் சூட்சும உலகம்
ஆத்மாவான பின் இந்த உலகமும் ஆத்மாவாக காட்சியளிக்கும். உருவங்கள் அனைத்தும் மறைந்து எல்லாம் ஒன்றாகிவிடும்
-
பொதுவாக நமக்கு நமது உடல்மீது பற்று ஏற்படுகிறது
சிலருக்கு குடும்பத்தில் உள்ள அனைவர்மீதும் பற்று ஏற்படும்
சிலருக்கு தங்கள் நாட்டின்மீது பற்று ஏற்படும்
சிலருக்கு மனிதர்கள் அனைவர்மீதும் பற்று ஏற்படும்
சிலருக்கு இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின்மீதும் பற்று ஏற்படும்
இந்த மொத்த உலகத்தின்மீதும் யாருக்கு பற்று ஏற்படுகிறதோ அவர் பகவான்.
-
ஒரு மனிதன் தன் சக்தியை முழுவதுமாக ஒடுக்கினால் அவன் பிரம்மமாகிறான்
பற்றற்றவன் பிரம்மத்தை அடைகிறான்
அதே மனிதன் சக்தியை பிரபஞ்ச அளவு விரிவுபடுத்தினால் பகவான் ஆகிறான்
அவனது பற்று பிரபஞ்சம் அளவு விரிவடைந்துவிட்டது
-
ஆதியில் இருந்த பகவானுக்கு ஆதிபகவான் என்று பெயர்.
இந்த பகவான் என்பது மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த நிலையை குறிக்கிறது.
பலர் இந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
பகவான் என்ற நிலை ஒன்றுதான் உள்ளது.
ஆனால் அந்த நிலையை பலர் அடைகிறார்கள்.
-
பகவான் என்ற நிலையை அடைய வேண்டுமானால் மனித உடலோடு பிறக்க வேண்டும்.
பல்வேறு தவங்கள் மேற்கொள்ள வேண்டும்.
படிப்படியாக சக்தியின் அளவை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
-
பகவான் புத்தர்,பகவான் சங்கரர்,பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்,பகவான் ரமணர் என்று இந்த பட்டியல் நீள்கிறது
இவர்கள் உலகத்தின் சக்திகள் முழுவதையும் அடக்கி ஆளத் தெரிந்தவர்கள்.
-
வைகுண்டத்தில் வீற்றிருந்த மகாவிஷ்ணு மனிதனாக பிறந்தார்
பிறக்கும்போதே பல்வேறு சக்திகளுடன் பிறந்தார்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர் அர்ஜுனன்
போர்க்களத்தில் பகவத்கீதை ஆரம்பமாகிறது
-
இரண்டு பக்கத்திலும் படைகள் அணிவகுத்து நிற்கின்றன.
தேவர்கள் அசுரர்கள் இருவரும் தனித்தனியாக இரண்டு அணிகளாக நிற்கவில்லை

தேவர்களில் பலர் இப்போது அசுரர்களின் படையில் இருக்கிறார்கள்.கர்ணன்,பீஷ்மர் போன்றவர்கள் தேவர்கள்.

நல்லவர்கள் சில வேளைகளில் தீயவர்களின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் நல்லவர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் அல்லது பயமுறுத்தப்படுகிறார்கள்.எல்லா காலத்திலும் இப்படி நடக்கிறது
-
பதிமூன்று ஆண்டுகள் கழித்தபின் வந்தால் நாடு தருவதாக பேச்சு
ஆனால் நாடு கொடுக்கவில்லை. போர்புரிந்து நாட்டை பெற்றுக்கொள்ளும்படி துரியோதனன் கூறிவிட்டான்.
போர்புரிவதைத்தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் போர்க்களத்தில் இரண்டு படைகளும் அணிவகுத்து நிற்கின்றன.
-
போர் துவங்குவதற்கு முன்பு எதிர் அணியில் உள்ள நல்லவர்களை அர்ஜுனன் பார்க்கிறான்
தாத்தா பீஷ்மர், குரு துரோணாச்சாரியர்,கிருபர் இன்னும் பலரை கொல்வது என்பது முடியாத காரியம்.
ஆனால் அவர்கள் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள்
-
போர்புரிய வேண்டுமானால் அதற்குரிய மனநிலை அவசியமாகும்.
போர் துவங்கும் முன் போர்வீரர்களின் மனதில் போர்குணத்தை ஏற்றுவார்கள்.
அர்ஜுனனுக்கு போர்புரியும் மனம் இல்லை.அவனது மனத்தில் பாசம் தலைதூக்குகிறது.
இவர்களை கொல்வதைவிட தான் கொல்லப்படுதல் சிறந்தது அல்லது பிச்சையெடுத்து வாழ்வது சிறந்தது என்று நினைக்கிறான்.
இந்த எண்ணத்தோடு வில்,அம்புகளை தேரில் வைத்துவிட்டு அமர்ந்துவிடுகிறான்.
-
இதன் பிறகுதான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசம் துவங்குகிறது
-
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
-
 எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற மனச்சோர்வு எங்கிருந்து வந்தன?
வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை.
இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.

பார்த்தா, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல.
இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.

-

No comments:

Post a Comment