Friday, 25 July 2025

தூக்கமும் மரணமும்

 

தூக்கமும் மரணமும்

..

இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலேயே உயிர்போய்விடும். அதன் பிறகு எதுவும் நமக்குத் தெரியாது.நம்மையும் நமக்குத்தெரியாது,வெளி உலகமும் தெரியாது,எதுவுமே தெரியாது.அப்படியே தூக்கத்திலேயே மாண்டுவிடுவோம் என்று வைத்துக்கொள்வோம்.

இன்று இரவு யாராவது தூங்க செல்வார்களா?

நாளை நாம் கண்விழிக்கப்போகிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் இன்று தூங்கச் செல்கிறோம். நாளை கண்விழிக்க மாட்டோம் என்று தெரிந்தால்,யாரும் தூங்க செல்ல மாட்டார்கள்.

தூக்கம் என்பது, அதுவும் தொடர்ந்த தூக்கம் என்பது நல்லதுதானே அப்படி இருக்கும்போது நாம் ஏன் தொடர்ந்த நிலையான தூக்கத்தை விரும்புவதில்லை?

ஏனென்றால் அதுதான் உயிரின் இயல்பு. நிலையான தூக்கம் என்பது மரணம்.

அந்த மரணத்தை எந்த உயிரும் விரும்புவதில்லை.

..

தூக்கத்திலேயே உயிர்போய்விட வேண்டும் என்று சில நேரங்களில் மனிதர்கள்

கூறுவார்கள்.ஆனால் உள் மனதில் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும்.

எவ்வளவுதான் துன்பங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு வாழவேண்டும் என்றுதான் ஒவ்வொரு உயிரும் ஆசைப்படுகிறது.

ஒரு சாதாரண எறும்பை நசுக்கினால்கூட அது எப்படியாவது மீண்டும் வாழவேண்டும் என்றே துடிக்கிறது.

இதுதான் உயிரின் இயல்பு.

உயிரின் இயல்பை மாற்ற முடியாது.

..

சிலர் இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு அப்படியே தூங்கிவிடுவோம். அது ஆனந்தமானது. நல்லது. என்று நினைக்கிறார்கள். ஆனால் சிறிது நேரம் பொறுமையாக யோசித்து பார்த்தால், நாம் இல்லாத வாழ்வை நாம் விரும்ப மாட்டோம் என்பது புரியும்.

மீண்டுவராத தூக்கத்தில் ”நான்-உணர்வு இல்லை. இந்த ”நான்-உணர்வுஇல்லாத எதையும் நாம் விரும்பமாட்டோம்.

சமாதி நிலையில் ”நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கும். ஆனால் தூக்கத்தில் அது இருக்காது.

தற்காலிக தூக்கத்தை மனிதர்கள் விரும்புவார்கள். நிரந்த தூக்கத்தை விரும்புவதில்லை.

..

இந்த நிரந்த தூக்கத்தை ”சூன்யம் என்று சொல்லாம். சமாதி நிலையில் ஏற்படுவது பூர்ணம் அல்லது முழுமை.

..

சிலர் பெரும் பாவத்தை செய்கிறார்கள். அந்த பாவத்தை பிறருக்கு அனுப்ப முடியுமா?

அனுப்ப முடியும். புண்ணியத்தை பிறருக்கு அனுப்ப முடியும்போது பாவத்தை ஏன் அனுப்ப முடியாது?

பெரும் பாவம் செய்தவர்களின் பாவத்தை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவிப்பார்கள். பாவிகளிடமிருந்து வாங்கி உண்டவர்கள் அந்த பாவத்தை அனுபவிப்பார்கள்.

தீயவர்களின் எச்சில் பட்ட உணவை உண்ணக்கூடாது. தீயவர்களிடமிருந்து எதையும் வாங்கி உண்ணக்கூடாது. தீயவர்களிடம் பழகக்கூடாது. இதனால் தீயவர்களின் பாவம் நமக்கு வருகிறது.

..

சிலர் மறுபிறப்பை நம்புவதில்லை. இந்த ஒரு பிறவி மட்டும்தான் உண்டு. எனவே இந்த ஒரு வாழ்க்கையில் பிறரை ஏமாற்றியாவது கொள்ளையடித்து,அனைத்து இன்பங்களையும் அனுபவித்துவிட்டு நிரந்த தூக்கத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் இந்த நிரந்தர தூக்கம்பற்றிய கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பிறகு உங்களுக்கு என்னவாகும் என்று கேட்டால், நிரந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவோம் என்கிறார்கள்.

..

ஒரு அரசியல்வாதி, கடவுளையும் நம்பவில்லை,கர்மாவையும் நம்பவில்லை,நல்வினைகளையும் நம்பவில்லை.அவன் நம்புவது எப்படியாவது இந்த உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவித்துவிட வேண்டும்.அதற்காக எப்படிப்பட்ட குறுக்கு வழியையும் பின்பற்றலாம்,யாரையும் ஏமாற்றலாம்.இறந்த பிறகு மறுபடி பிறப்பும் கிடையாது.எதுவும் கிடையாது. கடவுளும் கிடையாது. நிரந்த தூக்கத்திற்கு அல்லது சூன்யத்திற்கு சென்றுவிடுவோம் .இப்படிப்பட்ட ஒரு சிந்தனையோடு வாழ்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் இறந்த பிறகு என்னவாகும்?

அவன் நினைத்ததுபோல நடக்குமா? அவன் மறுபடி பிறப்பானா?அல்லது சூன்யமாகிவிடுவானா? நிரந்த தூக்கத்திற்கு செல்வாயா?

..

முதலில் இப்படிப்பட்டவர்களின் வாழ்வை ஆராய வேண்டும்.

பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல்,பிறரின் இறப்புக்கு தான் காரணம் ஆகாமல்,பிற குடும்பத்தை வறுமையில் தள்ளாமல் இப்படிப்பட்டவர்களால் வாழ முடியமா? முடியாது.

குறுக்கு வழியில் செல்பவன் பலரை துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டே முன்னேறுகிறான்.

 

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு. அந்த எதிர் செயலை நிறுத்தினால் மட்டும்தான் தூக்கம் வரும்.

யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத நல்லமனிதனுக்கு தூக்கம் வரும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய முடியாத அளவுக்கு உள்ள முட்டாளுக்கும் தூக்கம் வரும். பிறருக்கு தீமை செய்து வாழும் மனிதனுக்கு எப்படி தூக்கம் வரும்.

வாழும் நாட்களிலேயே அவர்களுக்கு தூக்கம் வரவில்லை.தூக்கமாத்திரைகளையும்,மதுவையும் குடித்து சிறிது நேரம் தூக்கலாம். அதன் பிறகு மீண்டும் அதே மனத்துடன் போராட வேண்டியிருக்கிதே. அவர்கள் இறந்த பிறகு எப்படி நிரந்த தூக்கம் வரும்.

..

ஒவ்வொரு நிமிடமும் நாம் யார் யாருக்கு தீமை செய்தோம், யார் யாரை கொலை செய்தோம்,யார் யாரை கொலை செய்ய ஆள் அனுப்பினோம் போன்ற எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்த எண்ணங்கள் இருக்கும்வரை நிரந்ததூக்கம்வராது.

எனவே அவர்கள் நினைப்பது போல நித்திய தூக்கம் அவர்களுக்கு வராது.

இறந்த பிறகு அவர்களது சூட்சும உடல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அது ஏற்கனவே செய்த பாவங்களுக்காக வருந்திக் கொண்டிருக்கும்.

.

அப்படிப்பட்டவர்கள் சொர்க்கத்தை நம்பாமல் இருக்கலாம் நரகத்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் இறந்த பிறகு அவர்களது ஆவி சாந்தி அடையாமல் சுற்றிக்கொண்டேதான் இருக்கும்.

அது பல்வேறு தீய கனவுகளை கண்டுகொண்டே இருக்கும். அந்த ஆவியை சாந்தப்படுத்த மனிதர்கள் இருக்க மாட்டார்கள். சொந்தங்கள் அந்த ஆவிக்கு உணவு அளிக்க மாட்டார்கள். அவர்கள் சேர்த்து வைத்த சொத்து.பணம் அனைத்தையும் அபகரித்து சென்றுவிடுவார்கள்.

இவைகள் அனைத்தையும் அந்த ஆவி பார்த்துக்கொண்டே இருக்கும். பிறரை ஏமாற்றி சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் செல்கிறதே என்று வேதனையில் அழுதுகொண்டெ இருக்கும்.

இவைகள் எல்லாம்தான் நரக வேதனை.

இதுதான் நரகம்.

எங்கோ தூரத்தில் உள்ள ஒரு நரக லோகத்திற்கு சென்று எண்ணை சட்டியில் வறுபட்டால்தான் நரகம் என்று அர்த்தம் அல்ல. தீயவர்களின் மனம் அவர்களுக்கு கொடுக்கும் வேதனைகூட நரகவேதனைதான்.

..

எனவே தீயவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்களது கர்மமே அவர்களை தண்டிக்கும். அவர்களது மனமே அவர்களை தண்டிக்கும். வாழும்போது தண்டிக்க தவறினால் இறந்த பிறகு தண்டிக்கும்.

..

சுவாமி வித்யானந்தர் 25-7-2025

Monday, 21 July 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19

..

அணுக்களாக நாம் மாறாமல் அணுவை பார்க்க முடியாது.

..

நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவாக ஆகிறோம்.நாமே அதுவாக இருக்கிறோம்,பிறகு அதையே நாம் பார்க்கிறோம் என்று நமது தத்துவங்கள் கூறுகின்றன. 


நம்மைசுற்றியுள்ள அணுக்களை நம்மால் ஏன் காண முடிவதில்லை? நாம் அணுக்களாக மாறினால் அதைக் காணமுடியும்.

ஒரு நுண்ணோக்கி மூலமாக அணுவைப் பார்க்கும்போது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு நாம் ஒரு அணுவாக இருக்கிறோம். நாம் அணுவாக இருப்பதால்தான் நம் கண்களுக்கு அணுக்கள் தெரிகின்றன. அதேபோல பிரபஞ்சத்தில் உள்ள galaxy யை பார்க்கும்போது நாம் galaxy. ஆக இருக்கிறோம்.

இது பற்றி விஞ்ஞானிகள் சிறிதும் யோசிப்பதில்லை.அதனால்தான் அவர்களால் பல கேள்விகளுக்கு விடைகாண முடிவதில்லை.

மகான்கள் மிகப்பெரிய சூரியன்களையும், கிரகங்களையும் தியானத்தில் ஆழந்திருந்தபோது கண்டதாக கூறியிருக்கிறார்கள். அவர்களால் எப்படி முடிந்தது?

அவர்கள் தங்களை தற்காலிகமாக மிகப்பெரியதாக மாற்றிக்கொண்டார்கள். சிலர் galaxy. அளவுக்கு தங்களை பெரிதாக்கிக்கொண்டார்கள். அதனால் அவர்களால் பலவற்றைக் காண முடிந்தது. மனிதனால் இப்படி பெரிதாக முடியுமா?

தொலை நோக்கி மூலம் மனிதன் பார்க்கும்போது தற்காலிகமாக மனிதன் விரிவடைகிறான் பெரிதாகிறான்.

.

நம் தத்துவம் என்ன சொல்கிறது பார்ப்போம். 

ஆத்மாவால் ஆத்மாவை உணர வேண்டும். நீ எப்போது ஆத்மாவாக மாறுகிறாயோ அப்போதுதான் பரமாத்மாவை உணர்வாய். ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்பதை அப்போது உணர்வாய் என்று கூறுகின்றன.

.

மனிதன் புறப்பொருட்களை ஆராயும்போது அந்த புறப்பொறுள் மயமாக ஆகிவிடுகிறான்.அதனால் அகமுகமாக ஆராய முடிவதில்லை. அகமுகமாக ஆராயும்போது புறப்பொருட்கள் அவனைப்பொறுத்தவரை மறைந்துவிடுகின்றன.

..

மனிதன் இந்த சிறிய உடலுக்குள் மட்டும்தான் இருக்கிறானா?

இந்த உலகத்தில் எதையெல்லாம் நாம் பார்க்கிறோமோ அது அனைத்துமாக நாமே இருக்கிறோம்.

இவைகள் எல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டும் அல்ல. மகான்கள் இதை அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள், அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவித்ததை நமக்கு கூறியிருக்கிறார்கள்.

.

.

நாம் கனவு காணும்போது,அந்த கனவில் வரும் அனைத்தையும் உருவாக்கிறது நாம்தான். இருந்தாலும் கனவு காணும்போது அதை நாம் அறிவதில்லை.கனவு கலைந்த பிறகுதான் அதுபற்றியஅறிவு நமக்கு வருகிறது.

கனவு காணும்போது கனவில் ஒரு பகுதியாக நாம் மாறிவிடுவதால் கனவுபற்றிய முழு அறிவும் நடக்கு கிடைப்பதில்லை.இருந்தாலும் கனவில் வரும் அனைத்தையும் உருவாக்கியது நாம் தான்.

.

அதேபோல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் உருவாக்கியது நாம்தான் என்பதை நாம் விழிப்படையும்போது உணர்வோம். அப்போது இந்த பிரபஞ்சம் நம் கண்களுக்குத் தெரியாது. மீண்டும் இந்த பிரபஞ்சத்திற்குள் நுளையும்போது விழிப்புநிலை மறந்துவிடுகிறது. நாம்தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தோம் என்பது மறந்துவிடுகிறது. கனவில் எப்படி அல்லல்படுகிறோமோ அப்படி உழல்கிறோம்.

தினமும் இந்த உண்மையை கனவின் மூலம் ஆன்மா நமக்கு உணர்த்துகிறது.

..

பல்வேறு உடல்கள் மூலம் ஒருவரே இந்த அனைத்து கனவுகளையும் கண்டுகொண்டிருக்கிறார்.ஒருவர் கனவிலிருந்து விழிப்படைந்தாலும் இந்த கனவு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இதனால்தான் இதை மாயை என்கிறார்கள்.

கடவுள் கனவு காண்பதில்லை. அவர் விழிப்புநிலையில் இருக்கிறார். நாம் விழிப்படையும்போது கடவுளாகிறோம்.

ஆனாலும் கனவு நடந்துகொண்டேதான் இருக்கும். எப்படிப்பட்ட கனவு நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காணவேண்டுமானால் விழிப்படைந்தவர் மீண்டும் கனவுக்குள் வந்தாக வேண்டும். அதாவது இந்த பிரபஞ்ச மாயைக்குள் வந்தாக வேண்டும். அப்போது நான் கடவுள் என்பது மறைந்துவிடும். கடவுள் மாயைக்குள் வருவதில்லை.

யார் மாயைக்குள் வந்தாரோ அவர் கடவுள் அல்ல.

..

இந்த தத்துவத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஆனாலும் புரிந்துகொள்ள முடியும் விழிப்படைந்தவர்களால் முடியும்.

.

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(5-7-2025)

இந்தியா உலகின் வல்லரசாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

 இந்தியா உலகின் வல்லரசாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

..

ஒரு மனிதன் வெற்றிபெற வேண்டுமானால் தன்னளவில் நல்லவனாகவும்,நேர்மையானவனாகவும் இருக்க வேண்டும். வெளிஉலகில் அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

ஏன் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்? சக்தியை அதிகரித்துக்கொள்ள இதுதான் வழி.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி உள்ளது. தீயவர்களிடமும் ஓரளவு சக்தி உள்ளது.

இந்த உலகில் ஒருவன் சாதிக்க வேண்டுமானால் அவனுக்கு நிறைய சக்தி தேவை.

.

ஒரு நல்லவனை தீயவன் எதிர்க்கும்போது, தீயவனின் சக்தி நல்லவனிடம் வருகிறது.

அதேபோல ஒரு தீயவனிடம் நல்லவன் சமாதானமாக போகும்போது,அல்லது எதிர்க்காதபோது நல்லவனின் சக்தி தீயவனிடம் போகிறது. இதனால்தான் பிரபலமான  சில நல்லவர்கள் ஒரு காலத்தில் தீயவர்களின் சகவாசம் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களது சக்தியை தீயவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள்.

எனவே தீயவனிடம் சமாதானம் செய்வது நல்லவனுக்கு நல்லதல்ல

..

நல்லவனை தீயவன் தொடர்ந்து துன்புறுத்தும்போதும், அவமதிக்கும்போதும். தீயவனுடைய சக்தி நல்லவனுக்கு வருகிறது. இவ்வாறு நல்லவன் அதிக சக்தியைப்பெற்று. நாட்டை ஆளும் தலைவனாகிறான்.

அந்த நல்லவன் தொடர்ந்து தீயவர்களை எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உயர்ந்த பதவியில் நிலைத்து நிற்க முடியும். மேலும்மேலும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

சில தலைவர்கள் செய்யும் தவறு இதுதான். பதவிக்கு வந்ததும் தீயவர்களோடு சமாதானம் செய்துகொள்கிறார்கள்.

இது அவர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும்.

..

இதே விதி ஒரு நாட்டிற்கும் பொருந்தும். இந்தியாவிற்கு சிறப்பாக பொருந்தும்.

இந்தியா இந்த உலகில் உள்ள தீவிரவாதம் நாடுகளை, ஏகாதிபத்திய நாடுகளை ,அதர்ம வழியில் செல்லும் நாடுகளை,  தொடர்ந்து எதிர்க்க வேண்டும். அவர்களும் தொடர்ந்து இந்தியாவை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள்.

இந்தியாவை அழிப்பதற்கு பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவார்கள். ஆனால் இந்திய தலைவர்கள் நல்லவர்களாகவும், இந்திய மக்களுக்காக உண்மையில் உழைப்பவர்களாகவும், மக்களை சுரண்டி பிழைக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

..

இப்படி இந்தியாவை தொடர்ந்து தீயசக்தி கொண்ட நாடுகள் எதிர்க்கும்போது. அந்த நாடுகள் தங்கள் சக்தியை இழப்பார்கள். இந்தியா சக்தியை பெருக்கிக்கொண்டே செல்லும். இதுதான் இந்தியா சக்தியை பெருக்கும் வழி.

எப்போது நாம் எதிர்ப்பதை நிறுத்திக்கொண்டு ,தீய நாடுகளிடம் சமாதானம் ஏற்படுத்துகிறோமோ அப்போது நமக்கான அழிவு ஏற்பட்டுவிடும். எனவே எதிர்ப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.

இப்படி எதிர்க்கும்போது சில போர்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நம்மை சுற்றியிருக்கும் நாடுகளை இரண்டாக பிரிக்க வேண்டும். அதர்மநாடுகள், தர்மநாடுகள்.

அதர்ம நாடுகளை எதிர்க்க வேண்டும். தர்மநாடுகளுடன் சமாதானம் செய்ய வேண்டும்.

..

சத்தியத்திற்காக தர்மத்திற்காக போரிடுபவர்கள் வெற்றிபெறுவார்கள்.அவர்களுக்கு தெய்வங்கள் துணைநிற்கும் என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்தியாவை அழித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகமும் திரண்டு வந்தாலும் இந்தியாவை அழிக்க முடியாது.

இந்தியா எதுவரை தர்மத்தில் பாதையில் செல்கிறதோ அதுவரை இந்தியாவை அழிக்கும்சக்தி உலகத்தில் யாருக்கும் இல்லை.

..

இந்தியா இந்த உலகிற்கு செய்ய வேண்டிய செயல் ஒன்று உள்ளது. ஒட்டுமொத்த உலகிற்கும் ஆன்மீகத்தை வழங்கும் மையமாக இந்தியா திகழப்போகிறது. முற்காலத்தில் பாரத்தில் வாழ்ந்த ரிஷிகள் அனைவரும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி  காத்திருக்கிறார்கள். அவர்கள் அழியவில்லை. சனாதன தர்மம் மீண்டும் பரவ இருப்பதை எண்ணி ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.

..

உலகம் முழுவதும் விரைவில் பெரும் போர்களை சந்திக்க இருக்கினறன என்பதை பலர் முன்னறிவித்திருக்கிறார்கள். இதை தவிர்க்க முடியாது. வலிமை பொருந்திய நாடுகள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ள துடிக்கின்றன. சிறிய நாடுகள் காணாமல் போகப்போகின்றன. சில பெரிய நாடுகள் பல துண்டுகளாக சிதறப்போகின்றன. முற்காலத்திலும் பல முறை இப்படித்தான் நடந்திருக்கின்றன.

..


சுவாமி வித்யானந்தர்-2-7-2025

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்? சாமவேதம்- வஜ்ரஸுசிகோபநிடதம்

 வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?

-

சாமவேதம்-  வஜ்ரஸுசிகோபநிடதம்

-

1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது

-

2. பிராமணர் சத்திரியர்  வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும். பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?

-

3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)

-

4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

5.ஆனால் பிறப்பால் வந்த  ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற  ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது

-

7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை

-

8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.

-

9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்? இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல்  ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எனனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.

-

இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள  - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.

-

சாரம்சம்

-

1.ஒரே ஜீவன்தான் பல பிறவிகளில் பிறந்தாலும் ஜீவன் பிராம்மணன் அல்ல.2.எல்லோரது உடலும் ஒரேபோல் இருப்பதால் உடல் பிராம்மணன் அல்ல.3.எல்லா ஜாதியிலும் ரிஷிகள் பிறப்பதால்.பிறப்பால் ஒருவன் பிராம்மணன் அல்ல.4.எல்லா ஜாதியிலும் அறிவாளிகள் இருப்பதால் அறிவை வைத்து ஒருவனை பிராம்மணன் என்று கூறமுடியாது. 5. செய்யும் தொழிவை வைத்து பிராமணன் என்று கூறமுடியாது. ஏனென்றால் அந்த தொழிலை எல்லோராலும் செய்ய முடியும்.6.தான தர்மங்கள் எல்லோரும் செய்கிறார்கள்.அதனால் அதைவைத்தும் கூறமுடியாது 7. பிரம்மத்தை உணர்ந்து,உடல் இருந்தாலும் உடலற்ற நிலையில் ஜீவன்முக்தனாக வாழ்பவன்தான் பிராமணன்.

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18

..

ஆண்பெண் தேடல்

..

இயற்கை படைப்பில் மிருகங்களைப் பொறுத்தவரை ஆண் தனியாகவும்,பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது.

பெண்ணைத்தேடி ஆண் அலையவேண்டும்,அப்போது போட்டி,போராட்டம்,பொறாமை அனைத்தும் ஏற்படவேண்டும் என்ற ரீதியில் உள்ளது. ஆனால் தாவரங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தாவரங்கள் ஆண்தன்மை,பெண்தன்மை இரண்டும் சேர்ந்தே படைக்கப்பட்டுள்ளது. அதனால் இனப்பெருக்கத்திற்கான போட்டி,போராட்டம் இல்லை ஆனால் அவைகளால் இடம்பெயர முடியாது. வெயிலோ,பனியோ,புயலோ அவைகளிலிருந்து தப்பித்து செல்ல முடியாது. அவைகள் இயற்கையின் அடிமைகளாக இருக்கின்றன. சுதந்திரம் இல்லை. மிருகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருக்கிறது,ஆனால் முழுமைநிலையில் இல்லை.

.

மனிதன் விலங்கின் வகையை சேர்ந்தவன் என்பதால் ஆண் தனியாகவும். பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு உயிர் உருவாகும் ஆரம்பக் கட்டத்தைப் பார்த்தால் அது ஆணாகவும் இல்லை,பெண்ணாகவும் இல்லை. உயிரின் ஆரம்பப்புள்ளியில் பால் வேறுபாடு இல்லை.

..

படைப்பின் ஆரம்பத்தில் முழுமை இருந்தது. அந்த முழுமை இரண்டாக பிரிந்து ஒன்று கவரும் சக்தியாகவும் இன்னொன்று விலக்கும் சக்தியாகவும் மாறியது. மனிதனின் ஒன்று ஆணாகவும் இன்னொன்று பெண்ணாகவும் ஆனது.

..

இந்த உலகில் ஆண் பெண்ணைத்தேடவேண்டும், பெண் ஆணைத்தேட வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனிதன் ஒரு பிறவியில் ஆணாகப்பிறக்கிறான்,இன்னொரு பிறவியில் பெண்ணாகப் பிறக்கிறான். அதனால் நிறைநிலை அடையும் மனிதனுக்கு ஆண்மனத்தின் இயல்புகளும் தெரியும்,பெண் மனத்தின் இயல்புகளும் தெரியும் ஏனென்றால் அவன் பல பிறவிகளை கடந்து வந்துவிட்டான்.

.

ஆன்மாவின் இயல்பு என்னவென்றால் இந்த ஆண்மை,பெண்மை இரண்டையும் முழுமையாக பெற்றிருப்பதுதான்.

எந்த மனிதன் ஆண்மை,பெண்மை இரண்டையும் முழுமையாக பெற்றிருக்கிறானோ அவனால்தான் ஆன்மாவை அடைய முடியும்.

..

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இந்த இரண்டு குணங்களும் முழுமையாக இருந்தது. அவரைப் பார்க்கவரும் பெண்கள்,அவரை பெண்ணாகவே கருதினார்கள். தங்கள் மனத்தில் உள்ள எதையும் அவர்கள் மறைக்காமல் அவரிடம் பேசுவார்கள்.

.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யையாக,சேவகியாகவே சாரதாதேவி தன்னை கருதினாள்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மனைவியின் தேவை இல்லை. அவர் ஏற்கனவே முழுமையாக இருந்தார்.

யார் முழுமைபெறவில்லையோ அவர்கள்தான் இன்னொரு துணையைத்தேடி அலைவார்கள்.

பின்னாளில் சாரதாதேவியும் முழுமைநிலையை அடைந்தார்.அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை குழந்தையாக பாவித்தார்.

..

இந்த பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் இயக்கம் இருக்கிறதோ,அங்கெல்லாம் முழுமை இல்லை. எதையோ ஒன்றைத்தேடியே அனைத்தும் அலைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணுவும் முழுமை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவைகளால் முழுமைபெற முடிவதில்லை.

.

அன்புதான் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைக்கிறது. முழுமையான அன்பில் ஆண்பெண் வேறுபாடு இருக்காது. காமம்தான் மனிதர்களை ஆண்தனியாகவும், பெண் தனியாகவும் பிரிக்கிறது.இந்த உலக இயக்கத்திற்கு காமம்,அன்பு இரண்டுமே தேவை.இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கம்போல சேர்ந்தே இருக்கிறது. ஆனால் அன்பு வெளிப்படும்போது காமம் வெளிப்படாது. அன்பை வளர்க்க வேண்டும் அப்படி வளர்த்தால்,காமம் தலை காட்டது.ஆனால் காமம் இருக்கும்,அது வெளிப்படாது.

.

ஆன்மாவை அடைய அன்பை வளர்த்துக்கொள்வதே வழி.யாரிடம் முழுமையான அன்பு உள்ளதோ அவரை நேசிக்க வேண்டும்,அவரிடம் அன்பு காட்ட வேண்டும். அப்படி செய்தால் அன்பு வளரும். மனிதர்களிடம் முழு அன்பை எதிர்பார்கக் முடியாது. அவர்களிடம் காமமும் இருக்கும் அன்பும் இருக்கும். ஒரு பெண்ணிடம் ஆண் காட்டும் அன்பிலும், ஒரு ஆணிடம் பெண் காட்டும் அன்பிலும் காமம் கலந்திருக்கும். அவர்கள் காமத்தை மட்டுப்படுத்தவில்லை. அதனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காமம் வெளிப்பட்டு,உண்மையான அன்பு மறைந்துவிடுகிறது.

..

காதலர்கள் தங்கள் காதலை தூய புனிதமான காமம் இல்லாத காதல் என்றுதான் ஆரம்பத்தில் நினைக்கிறார்கள்.ஆனால் நாள் ஆகஆக அதில் காமம் கலந்துவிடுகிறது. ஒருவேளை அவர்கள் காதலில் காமம் கலக்காமல் இருந்தால் அவர்கள் தெய்வநிலையை அடைந்துவிடுவார்கள்.

.

ஆன்மா மட்டுமே முழுமையாக இருக்கிறது. யார் இந்த ஆன்மாவை அடைகிறார்களோ அவர்களிடம் மட்டுமே முழுஅன்பு வெளிப்படுகிறது. அவர்களையே நாம் இஷ்டதெய்வமாக,குருவாக வணங்க வேண்டும்.

ஒரு குரு, சீடனை ஆசீர்வதிக்கும்போது குருவின் சக்தி சீடனிடம் செல்கிறது.இதனால் குருவின் மனம் சற்று கீழ்நிலைக்கு செல்கிறது.சீடன் பாவியாக இருந்தால் குருவின் மனம் மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிடும். அப்படி சென்றால் குரு வீழ்ச்சியை அழைய நேரும். அவர் காமத்திற்கு வசப்படநேரும்,அவரிடமுள்ள அன்பு மறைந்துவிடும்.

அதனால்தான் சீடனின் தகுதி முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.

..

இல்லறம் என்பதே இந்த அன்பை வளர்த்துக்கொள்வதற்கான இடம்தான். நமது தர்மசாஸ்திரம் முழுவதும் அதைத்தான் சொல்கிறது. அன்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் இல்லறத்தில் இருந்தே ஆன்மாவை அடைய முடியும்.

..

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(19-6-2025)

ஐந்தாம் வேதம் எது?

 ஐந்தாம் வேதம் எது?

..

மிகப்பழைய காலத்தில் வேதங்கள் தொகுக்கப்படவில்லை. பிறகு பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு ரிஷிகளிடம் வெளிப்பட்ட வேதத்தை தொகுத்தார்கள்.இதுதான் ”இருக்” வேதம். இருக்கு என்ற வார்த்தை இதிலிருந்துதான் உருவானது.

..

பிறகு பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பல ரிஷிகளிடம் வெளிப்பட்ட உண்மைகளை யஜுர்வேதம் என்ற பெயரில் தொகுத்தார்கள். இது மிகப்பெரிய வேதத்தொகுப்பு.இதை மனப்பாடம் செய்வதில் சிரமம் இருந்ததால் இதை இரண்டாக பிரித்தார்கள். அவை சுக்ல யஜுர்வேதம்,கிருஷ்ண யஜுர்வேதம். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாம வேதத்தை தொகுத்தார்கள். மகாபாரத காலத்தில் அதர்வண வேதம் தொகுக்கப்படவில்லை. மகாபாரதத்தில் பல இடங்களில் மூன்று வேதங்கள் பற்றித்தான் சொல்லப்பட்டுள்ளது.

மகாபாரத காலத்திற்கு பிறகு அதர்வணவேதம் தொகுக்கப்பட்டது.

.

மகாபாரதபோர் நிறைவடைந்ததும் கலிகாலம் துவங்கியது. மனப்பாடம் செய்யும் அளவுக்கு மக்களுக்கு நினைவாற்றல் இருக்காது என்பதால் முதன்முதலில் மகாபாரதம் எழுத்துவடிவில் வந்தது.

விநாயகர் இதை எழுதினார்.

பிறகு இதிலிருந்து பல பிரதிகள் எடுத்துக்கொண்டார்கள்.

இதில் பழைய காலத்து ரிஷிகள் பலரது அறிவுரைகள் உள்ளன.

.

வேதங்களின் சாரமான பகவத்கீதை அதில்தான் உள்ளது. மேலும் அறம்,பொருள்,இன்பம்,வீடு பற்றிய விளக்கங்கள் பிரம்மச்சர்யம்,இல்லறம்,வானப்பிரஸ்தம்,சன்னியாசம் பற்றி  கூறப்பட்டுள்ளது.

கர்மயோகம்,ராஜயோகம்,பக்தியோகம்,ஞானயோகம் பற்றிய பல அற்புத கருத்துக்கள் உள்ளன.

இதோடு நான்கு வர்ணங்களான பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன் பற்றியும்,அவர்களது கடமைகள் பற்றியும் விளக்கமாக உள்ளது.

அரசனின் கடமை குடிமக்களின் கடமை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இதில் விளக்கப்படாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம்.

.

திருக்குறள் போன்ற தமிழ் நூல்கள் எல்லாம் மகாபாரதத்தை படித்த பிறகு எழுதப்பட்டவை என்பதை இரண்டையும் படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அந்த அளவுக்கு திருக்குறளின் அளநெறி கருத்துக்கள் அனைத்தும் அப்படியே மகாபாரத அறநெறி கருத்துக்களுடன் ஒத்திருக்கின்றன.ஆன்ம தத்துவம்,பிரபஞ்ச தத்துவம் போன்ற உயர்ந்த தத்துவங்கள் திருக்குறளில் இல்லை.

.

மகாபாரதம் என்றவுடன் அதில் உள்ள கதைகள்தான் பலருக்கு நினைவிற்கு வரும்.ஆனால் அதில் உள்ள உபதேசப்பகுதிகள் மிகப்பெரியவை. கிட்டத்தட்ட மூன்றில் ஒருபகுதி உபதேங்களால் ஆனவை. மிகவுயர்ந்த தத்துவங்கள் அனைத்தையும் பற்றி இந்த உபதேசப்பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.

.

பல உயர்ந்த தத்துவங்கள் மகாபாரதத்தில் இருப்பதால் மகாபாரதத்தை ஐந்தாம் வேதம் என்கிறார்கள்.

விஷ்ணுசகஷ்ரநாமம்,சிவ சகஸ்ரநாமம், போன்றவை இதில் உள்ளன.பகவத்கீதை,அனு கீதை,ஹம்ச கீதை போன்ற பல கீதைகள் இதில் உள்ளன.

.

இவ்வளவு உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த மகாபாரதம் - சிறந்த சனாதன சாஸ்திரம்.

இந்த ஐந்தாம்வேதம் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இது அனைவரையும் சென்றடையவேண்டும். 

உலகம் முழுவதையும் சென்றடையவேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை

..

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17

..

மனத்தின் மூலம் சாப்பிடுவது

..

உடலை வளர்த்தேன் மனத்தை வளர்த்தேன். மனத்தை வளர்த்தேன் உடலை வளர்த்தேன் என்ற கருத்து ஒன்று உண்டு.

நல்ல சுவையான சத்தான உணவுகளை சாப்பிடும்போது மனம் சந்தோசமடைகிறது. உடல் வளர்கிறது.

இதை இப்படி மாற்றி யோசித்துப் பாருங்கள் மனத்தால் நன்றாக சுவையான உணவுகளை உண்டு பாருங்கள், அப்போது உடல் வளர்கிறதா? உடலால் எதையும் சாப்பிடவில்லை. மனத்தால் மட்டுமே சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிட முடியுமா? முடியும் சிலரால் முடியும். அப்படி மனத்தால் சுவைமிகுந்த உணவுகளை சாப்பிட முடிபவர்களால் உடல் வளரும். உடலுக்கு தனியாக உணவளிக்க வேண்டியதில்லை.

..

மனம் என்பது சூட்சுமஉடல். வெறும் எண்ணங்களை மட்டுமே நாம் மனம் என்று நினைக்கிறோம்.ஆனால் இந்துமத தத்துவங்களின்படி மனம் என்பது சூட்சும உடல். நமது உடலுக்கு எப்படி உருவம் உள்ளதோ அதுபோல மனத்திற்கும் ஒரு உருவம் உண்டு. அது வளர்கிறது,தேய்கிறது. கருக்கிறது, ஒளிர்கிறது, ஈர்க்கப்படுகிறது,விலக்கப்படுகிறது. காலத்தில் விரைவாக செல்கிறது,மெதுவாக செல்கிறது. பல்வேறு பரிமாணங்களில் அது வேலை செய்கிறது.

..

நாம் காணும் தூலஉடலிலிருந்து பெரும் உணவிலிருந்துதான் சூட்சும உடல் அதற்கான உணவைப்பெறுகிறது.

ஆனால் சிலர் பல ஆண்டுகள் உணவு சாப்பிடாமல் நல்ல ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். உடலுக்கு உணவு கொடுக்காவிட்டால் அது இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது உணவு உண்ணாமல் சிலர் எப்படி வாழ்கிறார்கள்? மற்றவர்கள் வேலை செய்வதுபோல அவர்கள் வேலை செய்கிறார்கள்.ஆகால் தண்ணீர் குடிப்பதில்லை,உணவு உண்பதில்லை. அவர்களுக்கான உணவு மனத்திலிருந்து கிடைக்கிறது. மனம் தேவையான உணவை உண்கிறது.அந்த உணவு உடலை வளர்க்கிறது.

..

இது ஒரு சுழற்சிபோல உள்ளது மகான்கள் சூட்சும உடலோடு வாழ்கிறார்கள். தேவைப்படும்போது அவர்கள் தூலஉடலை எடுத்துக்கொள்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தூலஉடலோடு வாழ்கிறார்கள். இறந்த பிறகு சூட்சு உடலை எடுத்துக்கொள்கிறார்கள்.

..

மனதால் நாம் செய்யும் செயல்கள் உடலை பாதிக்கிறது. உடலால் நாம் செய்யும் செயல்கள் மனத்தை பாதிக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

மனோவிஞ்ஞானம் என்ற ஒன்று இருக்கிறது. மனத்தை பலப்படுத்தினால் உடலில் தோன்றியிருக்கும் நோய்களை குணப்படுத்திவிடலாம். உடலில் தோன்றும் நோய்கள் மனத்தை பாதிக்கிறது.

பழைய காலத்தில் மருத்துவ சிகிச்சை செய்யும்போது மந்திரங்களை பயன்படுத்துவார்கள். இதற்கான காரணம் நோயாளியின் மனத்தை முதலில் திடகார்த்தமாக்க வேண்டும். அவனுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். கீழ்நிலையில் உழன்றுகொண்டிருக்கும் மனத்தை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டும். அவனது குண்டலினி சக்தியை மேலே உயர்த்த வேண்டும். அப்படி அவனது மனம் மேல் நிலைக்கு உயரும்போது. அவனது உடல் நோய்கள் படிப்படியாக விலகிவிடும்.

..

இந்து மதத்தில் இடம்பெறும் பல்வேறு வகையான நோன்புகள்.விரதங்கள் போன்றவற்றின் நோக்கம் மனத்தை உயர்நிலைக்கு உயர்த்துவதே. உதாரணமாக கோவில்களில் நடக்கும் ”தீ” மிதிக்கும் நிகழ்வை பார்ப்போம்.

”தீ” மிதிக்கும்போது சில நொடிகளுக்கு அவனது குண்டலினி சக்தி மேல்நோக்கி எழுகிறது. இந்த சமயத்தில் தெய்வீக ஆவேசம் வந்தவன்போல அவன் செயல்படுகிறான். அவனது மனம் உயர்நிலையை அடைவதால் உடலும் உயர்நிலையை அடைகிறது. உடல் நோய்கள் ஓரளவுக்கு நீங்குகிறது. மனத்தை அதிகநேரம் உயர்நிலையில் நிறுத்தி வைக்க முடியுமானால் இன்னும் உடல்சார்ந்த பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

..

சபரி மலைக்கு விரதம் இருந்து நடந்தே செல்வதைப் பார்க்கிறோம். நடந்துசெல்லும் பாதை பயணம் மிகவும் கடினமானது. மனத்தை நன்றாக திடப்படுத்திக்கொண்டு இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்தால் மனம்மேல் நிலையை அடைகிறது. பக்தியோடு செல்பவர்கள் கரடுமுரடான பாதையின் கஷடங்களை உணரமாட்டார்கள்.உடல் உணர்ச்சியற்றநிலையை அடைகிறது. அப்போது அவர்கள் மனதால் எண்ணுவது நடக்கும்.அவர்களது ஆசைகள் நிறைவேறும்.

..

மனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு பக்தியும் பயிற்சியும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

வெறும் உடல்பயிற்சி மட்டும் இருந்தால் மனிதனுக்கு நம்பிக்கை வராது. மனிதமனம் எதையும் எளிதில் நம்பாது. எனவே கோவிலை சுற்றி அங்கபிரதட்சிணம் செய்,இறைநாமத்தை தொடர்ந்துசொல் நன்மை நடக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியே நடக்கிறது. சிலர் எவ்வளவுதான் முய்றிசசெய்தாலும் பயிற்சி செய்தாலும் துன்பங்கள் விலகவில்லை என்று சொல்வார்கள். இதற்கு காரணம் அவர்களது மனம் உயர்நிலையை அடையவில்லை, குண்டலினி சக்தி மேல்நிலையை அடையவில்லை. எது முக்கியமோ அதைவிட்டுவிட்டு வெறும் இயந்திரம்போல் வேலை செய்வதால் என்ன பயன்?

..

இறைநாமத்தை தொடர்ந்து ஜெபம் செய்தால் நினைப்பது நடக்கும் என்று சொல்கிறார்கள். ஜெபம் செய்யும்போது எதையும் நினைக்கக்கூடாது என்பதை மறந்துவிடுகிறார்கள். மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓட எத்தனை ஆண்டுகள் ஜெபம் செய்தாலும் ஒன்றும் நடக்காது. பத்து நிமிடம் எந்த சிந்தனையும் இல்லாமல் ஜெபம் செய்ய முடியுமா?

..

உடலும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையது. உடல் பலமாக இருந்தால் மனம் பலமாக இருக்கும். மனம் பலமாக இருந்தால் உடல் பலமாக இருக்கும். மனம் பலவீனமாக உள்ளவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை எதுதேரியுமா? உடலை பலப்படுத்துவதுதான். நல்ல சத்தான உணவை உண்டு. பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடலை பலப்படுத்தவேண்டும். போர்களத்திற்கு செல்லும் வீரனின் உடல் எப்படி பலமாக இருக்குமோ அப்படிஉடலை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மனம் பலமடையும்.

இதைவிட்டுவிட்டு வேறு என்ன செய்தாலும் மனம் பலமடையாது. பல்வேறு சிந்தனைகள் மனத்தில் ஓடி அவர்கள் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

இதேபோல உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், மனத்தை பலப்படுத்துவதற்காக ஆன்மீக கருத்துக்களை சிந்திக்க வேண்டும். ஆன்மாவைப்பற்றி கேட்க வேண்டும். கேட்டதை எப்போதும் சிந்திக்க வேண்டும். இப்படி செய்தால் மனம் பலப்படும். உடல் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஒழுக்கமான வாழ்க்கை அமையும்.

..

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(17-6-2025)

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...