Monday, 23 March 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5


ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5
-வகுப்பு-5 நாள்-21-12-2019
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥

நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலம் என்று எதுவும் இல்லை.
நாம் எக்காலத்திலும் இருக்கிறோம்.
எதிர்காலத்திலும் நாமெல்லோரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை.

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥

எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம்
 ஏற்படுகிறதோ அதேபோல்தான்  வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை

வாழ்க்கையில் மிகப்பெரிய பயம் மரணபயம்.
ஒருவேளை நாம் இறந்துவிட்டால் என்ன செய்வது?
நமது குடும்பத்தில் உள்ள யாராவது இறந்துவிட்டால் என்ன செய்வது?
இந்த பயம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
இதற்கு காரணம் அறியாமை.
முதல் அணுவிலிருந்து படிப்படியாக பரிணமித்து நாம் மனித உடலை அடைந்திருக்கிறோம்.
இந்த லட்சக்கணக்கான பிறவிகளில் மரணபயம் நம்மை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
அவ்வளவு எளிதில் இது விலகாது.யாருக்கு இது கடைசி பிறவியோ அவர்களுக்குத்தான் மரணபயம் அகலும்

நாம் இறந்துவிட்டாதக மனதில் கற்பனை செய்தால் எப்படி இருக்கும்?
நமது ஆவி இறந்த உடலை பார்த்துக்கொண்டிருக்கும்.
உறவினர்கள் உடலைச்சுற்றி அழுதுகொண்டிருப்பார்கள் அதை நாம் ஆவியாக இருந்து பார்த்துக்கொண்டிருப்போம்.
இது உண்மை.நமது எதிர்காலம் நமது கற்பனையின்படிதான் நடக்கிறது.
அப்போதுகூட உடல்தான் அழிகிறதே தவிர நாம் ஆவி உடலில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.
மறுபடி மனித உடலில் பிறப்போம்.பழைய படி ஆவி உடல் கிடைக்கிறது.
இதேபோல் மனிதன் பல முறை மனித உடலுக்கும் ஆவி உடலுக்கும் சென்றுகொண்டே இருக்கிறான்
-
இதற்கு முடிவே இல்லையா?
இருக்கிறது. ஞானம் கிடைக்கும்போது,நான் ஆத்மா என்பதை உணரும்போது மறுபிறவி ஒரு முடிவுக்கு வருகிறது.அப்போதும் நாம் வாழ்ந்துகொண்டுதான் இருப்போம்.
ஞானிக்கு மரணபயம் இல்லை. ஞானம் அடையும்வரை மரண பயம் இருக்கும்.
இதுபற்றி ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்
-
அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥

எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அது அழியாதது என்று உறுதியாக தெரிந்துகொள். 
மாறாத தன்மையுள்ள அதை யாராலும் அழிக்க இயலாது

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥

எப்போதும் இருக்கும், அழியாத, அளவிடமுடியாத உடலில் குடியிருக்கும் அதற்கு(ஆன்மாவிற்கு), சொந்தமான உடல்கள் அழியக்கூடியது, ஆனால் ஆத்மாவிற்கு அழிவில்லை . ஆகவே பாரதா, யுத்தம் செய்

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥

ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை.
அவன் பிறப்பற்ற, நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான்.
உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை.

எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டுள்ளது? ஆத்மாவால்
நமக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?நானே ஆத்மா. அஹம் ஆத்மா
ஆத்மாவை உணர்ந்தவன் இவ்வாறு கூறிக்கொள்வான்
நானே இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறேன்.
நான் அழியாதவன்.என்னை யாராலும் அழிக்க முடியாது.

உடல்கள் அழியக்கூடியது.ஆனால் எனக்கு அழிவில்லை.
அதேபோல பிறரது உடல்களும் அழியக்கூடியது.ஆனால் அவர்களுக்கும் அழிவில்லை.
ஏனென்றால் அவர்களும் ஆத்மா
-
முதலில் இந்த ஞானத்தைப்பெற வேண்டும்.
இதைக்குறித்து மீண்டும் மீண்டும் சிந்தனை செய்ய வேண்டும்.
நான் ஆன்மா அல்லது ஆத்மா (இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான்)
நான் உடல் அல்ல. நான் மனம் அல்ல. நான் ஆத்மா
நான் பிறப்பற்றவன்.இறப்பற்றவன். எக்காலத்திலும் இருக்கக்கூடியவன்
இவ்வாறு ஆத்மாவைக்குறித்து எப்போதும் சிந்தித்துவரவேண்டும்
படிப்படியாக அக்ஞானம் மறைந்து ஞானம் உதிக்கும்
எப்போதெல்லாம் வாழ்க்கையில் மரணபயம் வருகிறதோ,
எதிரிகளால் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்
அஹம் ஆத்மா. நான் ஆத்மா
-
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥

பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே,
பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-4

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-4
-
வகுப்பு-4 நாள்-20-12-2019
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
-
 எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற மனச்சோர்வு எங்கிருந்து வந்தன?
வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை.
இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.

பார்த்தா, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல.
இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.
-
கடமை போர் செய்யும்படி தூண்டுகிறது. பாசம் போர்செய்ய மறுக்கிறது
-
துரியோதனது படையில் நியாயம் தெரிந்த பலர் இருக்கிறார்கள்.
தாங்கள் அநியாயத்தின் பக்கம் நிற்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.
இருந்தாலும் அவர்கள் போர்செய்ய வந்திருக்கிறார்கள்.
பீஷ்மர்,துரோணர்,கிருபர் போன்றவர்கள் இந்த போரைவிட்டுவிட்டு பிச்சையெடுத்து வாழும் வாழ்க்கைக்கு சென்றிருக்கலாம்.அவ்வாறு செய்திருந்தால் போர் நிகழாமல் போயிருக்கும்.சமாதானம் ஏற்பட்டிருக்கும்.

அநியாயத்தின் பக்கம் நல்லவர்களும் நிற்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.
-
நமது வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்.
ஒரு அலுவலகத்தில் சாதாரண  பணியில் நாம் இருக்கலாம்.
நமக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் அநியாயத்தின் பக்கம் நிற்பார்கள்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள்.சில நல்லவர்களும் அவர்களோடு அதற்கு துணையாக இருப்பார்கள்.
இது நமக்கு வேதனையைத் தருவதாக இருக்கும்.

நமது மனம் அவர்களோடு சேர்ந்து தவறு செய்ய அனுமதிக்காது.
அதனால் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்
அவர்களை எதிர்க்கவும் முடியாது.அவர்களோடு உடன்படவும் முடியாது
இப்போது மனத்தில் பெரிய போராட்டம் நிகழும்
இந்த வேலையை விட்டுவிட்டு பிச்சை எடுத்து வாழ்வது மேல் என்ற எண்ணம் வரும்
-
இப்போது என்ன செய்வது? பகவத்கீதை நமக்கு எந்த விதத்தில் உதவும்?
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥

ஒரு சத்திரியன் என்ற முறையில் உனது முக்கிய கடமையைப் பற்றிக் கருதுவாயேயாயினும், நீதிக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமைகள் உனக்கில்லை. எனவே தயங்கத் தேவையில்லை.
-
சத்திரியனுடைய கடமை என்ன? அநீதியை எதிர்த்து போர்புரிவது.
 அதனால் மரணம் நேர்ந்தாலும் அது நல்லதுதான்.
ஏனென்றால் அநீதியை எதிர்த்து போர்புரிபவனுக்கு சொர்க்கம் கிடைக்கும்.
அநீதியை எதிர்த்து போர்புரியும் ஒருவனை மக்கள் தெய்வம் என்று வணங்குவார்கள்.
அவனுக்கு கோவில் கட்டுவார்கள்.வழிபாடு நடத்துவார்கள்.

சுதந்திரப்போராட்ட காலத்தில் வெள்ளையனை எதிர்த்து போராடி அந்த போராட்டத்தில் உயிரை நீத்த பலரை மக்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள்.
அவர்களைத்தவிர அந்த காலத்தில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாக மறைந்துபோனார்கள்.
அநீதியை எதிர்த்து போராடியவர்கள் எப்போதும் வாழ்வார்கள்.
அவர்கள் சூட்சும உடலில் நீண்டகாலம் வாழ்வார்கள்.இதுதான் சொர்க்க வாழ்க்கை
-
இவ்வாறு அநீதியை எதிர்க்க வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல் அநீதியுடன் சமாதானம் செய்துகொண்டால் என்னவாகும்?

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥

இந்த அறப்போரினின்று பின்வாங்கினாலோ கடமையினின்றும் தவறியதாலான தீயவிளைவுகளை நிச்சயமாய்ப் பெறுவதோடு, போர்வீரனெனும் பெயரையும் இழப்பாய்.

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥

மக்கள் உன்னை என்றும் அவதூறு செய்வர்.
மதிக்கப்பட்ட ஒருவனுக்கு அவமானம் மரணத்தைவிட மோசமானதே.

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥

உன் பெயரையும், புகழையும் பற்றிப் பெருமதிப்புக் கொண்டுள்ள பெரும் போர்த்தலைவர்கள்,
பயத்தால் நீ களம் விட்டதாக எண்ணி, உன்னைக் கோழையாய்க் கருதுவர்.

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥

உனது எதிரிகள் அன்பிலாதவற்றைக் கூறி உன்னைத் தூற்றுவர்.
இதைக் காட்டிலும் உனக்குத் துன்பம் தருவது வேறு என்ன இருக்க முடியும்?
-
அநீதியை எதிர்த்து நிற்க வேண்டும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நாம் ஒரு சாதாரண வேலையில் இருக்கலாம். நமது மேல் அதிகாரி தவறு செய்பவராக இருக்கலாம்
எடுத்த உடனேயே மேல் அதிகாரிகளை எதிர்த்து சிலர் போராடுகிறார்கள்.இது தவறு.
கடைசியில் இருக்கின்ற வேலையையும் இழந்து தெருவில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

நாம் இப்போது இருக்கும் நிலையிலிருந்தே தொடங்க வேண்டும்.
ஒரு எறும்பு இன்னொரு எறும்பை எதிர்க்கலாம். யானையை எதிர்க்கலாமா?
எனவே நாம் இப்போது இருக்கும் நிலையிலிருந்து நம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டே வரவேண்டும்.
ஒருவன் தனது கடமையை சிறப்பாக செய்ய ஆரம்பித்தால்.உயர்ந்த கடமைகள் படிப்படியாக வந்துகொண்டே இருக்கும்.
கடைசியில் உயர்ந்த அதிகாரியாகும் வாய்ப்பு கிடைக்கும்.
-
ஒரு அரசன் இன்னொரு அரசனை எதிர்த்து போர்புரியலாம்.
ஒரு சாதாரண படைவீரன் ஒரு ராஜாவை எதிர்த்து போரிட முடியாது.
அப்படி அந்த படைவீரனுக்கு ராஜாவை எதிர்க்க வேண்டும் என்று தோன்றினால்.
முதலில் ஒரு நாட்டிற்கு ராஜாவாக மாறவேண்டும்.பின்பு எதிர்த்து போரிடலாம்
-
எனவே நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலையில் நமக்கு சமமானவர்களை எதிர்த்து படிப்படியாக முன்னேற வேண்டும்.
-
சில வேளைகளில் இந்த உலகத்திலுள்ள யாரையும் பிடிக்காமல் போய்விடும். அப்போது பிச்சை எடுத்து வாழ்வது சிறந்தது என்று தோன்றும்.
ஒரு நாள் பிச்சை எடுத்து பார்த்தால் தெரியும்.
இந்த உலகத்தில் மிகமிக கீழாக மதிக்கப்படக்கூடிய ஒருவன் பிச்சைக்காரன்.
பிச்சைக்காரனின் முகத்தைக்கூட யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள்.மிகவும் அலட்சிய மனப்பான்மையுடனேயே பலர் பிச்சையிடுவார்கள்.
பிச்சையெடுப்பதை எண்ணி பிச்சைக்காரனால் பெருமைப்பட முடியாது.
சாதுக்கள் பலர் பிச்சை எடுக்கிறார்கள்.அவர் போதிய ஞானம் பெற்றவர்கள்.
அவர்கள் பிச்சையெடுப்பதை பெருமையாக நினைப்பவர்கள்.
மக்கள் அவர்களை வெறுப்புடன் நடத்துவதில்லை.அவர்கள் வேறு ரகம்.
உணவுக்காக பிச்சையெடுப்பவர்களைப்பற்றி கூறுகிறேன்
-
இங்கே அர்ஜுனன் போதிய ஞானம் பெறவில்லை. உலகியல் ஆசைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.பல்வேறு சபதங்களை நிறைவேற்ற வேண்டி பொறுப்பு இருக்கிறது.இவனை நம்பித்தான் மற்றவர்கள் இருக்கிறார்கள்.இவன் போர் செய்ய மறுத்தால் இவனோடு சேர்ந்து மற்றவர்களும் பலவந்தமாக பிச்சைக்காரர்களாக செல்ல வேண்டியதுதான்.
-
ஒருவரது  முன்னேற்றம் என்பது அவரோடு நிற்பதில்லை. அவரது குடும்பமும் அதனால் முன்னேறுகிறது.
அந்த குடும்பம் முன்னேறும்போது சமுதாயம் முன்னேறுகிறது. நாடு முன்னேறுகிறது.
ஒரு தனிமனித முன்னேற்றம் என்பது நாட்டின் முன்னேற்றம்
-
அர்ஜுனன் பாசத்தின் காரணமாக போரிலிருந்து பின்வாங்கினால் எதிரிகள்  என்ன கூறுவார்கள்?
அர்ஜுனன் நல்லவன் போர்புரிந்து எங்களை கொல்ல விரும்பவில்லை.அதனால் போர்புரியாமல் விலகிவிட்டான் என்றா கூறுவார்கள்? இல்லை
அர்ஜுனன் ஒரு கோழை. போர்புரிந்தால் இறந்துவிடுவோம் என்று பயந்துவிட்டான். உயிர் பயத்தால் போரிலிருந்து விலகிவிட்டான் என்று இகழ்வார்கள்.
அது மட்டுமல்ல இது நாள்வரை, அர்ஜுனனை பெரிய வீரன் என்று கூறிவந்த பலர் நம் எதிரிலியே இகழ்ந்து பேசுவார்கள்.கோழை என்பார்கள்.
அது இன்னும் கொடுமையாக இருக்கும்.வாழ்க்கையே நரகமாக மாறிவிடும்
-
எனவே வாழ்க்கையில் போராட வேண்டும். தர்மத்தின் பக்கம் நின்று போராட வேண்டும். அதுவும் சாதுர்யமாக போராட வேண்டும். நமது வலிமை எது என்று பார்க்க வேண்டும். நமக்கு சமமானவர்களுடன் போராட வேண்டும்.படிப்படியாக வலிமையை கூட்டிக்கொண்டே வரவேண்டும். ஒரு நாள் நாட்டின் பிரதமர் ஆகும் அளவுக்கு நமது வலிமை கூடலாம். அது பலநாள் உழைப்பை பொறுத்தது.
-
இப்படி படிப்படியாக முன்னேறி என்ன பயன்? அதனால் ஞானம் பெற முடியுமா? இந்த உலக வாழ்க்கையை விட்டுவிட்டு தனிமையான இடத்திற்கு சென்று வாழ்ந்தால்தானே ஞானம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்.
வேலை செய்து கொண்டே ஞானத்தை பெறும் வழியை ஸ்ரீகிருஷ்ணர் போதிக்கிறார்
-
முதலில் ஞானம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.பின்பு உலகத்தில் வாழ்ந்துகொண்டே அதை அடைவது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-3

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-3
-
வகுப்பு-3 நாள்-19-12-2019

-
இந்த பூமியில் அசுரர்கள் மனிதர்களாக பிறந்தார்கள்.
அவர்களை தடுக்க தேவர்களின் குழந்தைகள் பிறந்தார்கள்.

நல்லவர்கள் எப்போதும் தர்மத்தின் பாதையில் செல்வார்கள்.
தீயவர்கள் அதர்மத்தின் பாதையில் செல்வார்கள்.
நல்லவர்கள் பொதுவாக எல்லா இடங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள்.
தீயவர்கள் நல்லவர்களின் சொத்துக்களை பிடுங்கிக்கொள்கிறார்கள்

ஒரு நாட்டை மொத்தமாக எடுத்து பார்த்தால், சிலவருடங்கள் நாட்டில் அதர்மங்கள் அதிகரித்து காணப்படும்.
ஆட்சியாளர்களே அதர்மத்தை கண்டுகொள்ளாமலும்,அதை ஆதரிப்பது போல காணப்படுவார்கள்.
தர்மவான்கள் துன்பப்படுவார்கள்,அதர்மவான்கள் இன்பமடைவார்கள்.
இது ஒரு உச்சநிலையை அடையும்போது, அங்கே மிகப்பெரிய மாற்றம் நிகழும்
அப்போது மகான் ஒருவர் அங்கே பிறக்கிறார்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.அப்போது
ஒட்டுமொத்தமாக, அதர்மத்திலிருந்து தர்மத்தை நோக்கி நாடு பயணப்படும்.
அதர்மம் புரிந்தவர்கள் வேதனையடைவார்கள்.
தர்மவழியில் செல்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

சில வருடங்களுக்கு பின் மீண்டும் தர்மம்குன்றி அதர்மம் தலை தூக்க ஆரம்பிக்கும்.
இது ஒரு வட்டம் போல தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.
இது இயற்கையின் நியதியாகும்.
-
ஏன் இவ்வாறு நிகழ்கின்றது என்று நீங்கள் கேட்கலாம்.
துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்தை பெறமுடியாது.
இன்பத்திலேயே இருப்பவன் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் இது நியதி.
ஒரு நாட்டிற்கும் இது பொருந்தும்.
நாம் மிகவும் அவசரப்படுகிறோம்.பொறுமையாக சிந்தித்துப்பார்த்தால் உண்மை புலப்படும்
-
அதர்மத்தின் பக்கம் துரியோதனனும் அவனது படைகளும் இருக்கிறார்கள்.
தர்மத்தின் பக்கம் தர்மரும் அவரது படைகளும் இருக்கின்றன.
இரண்டும் சம பலத்தோடு இருக்கின்றன. அதர்மத்தை அழிக்க கூடுதலாக இன்னொன்று தேவை.
அது தர்மம் அதர்மம் இரண்டையும் நன்கு அறிந்து,தர்மம் அதர்மம் இரண்டிற்கும் மேலானதாக இருக்க வேண்டும்.
-
ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார்.
அவருக்கு நண்பனும் இல்லை,எதிரியும் இல்லை
ஆனால் தர்மத்தை நிலைநாட்டவேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.
தர்மம் தோற்கக்ககூடாது.அப்படி தோற்றால்  மக்கள் நம்பிக்கையை இழந்துபோவர்கள்.உலகம் அழிந்துபோகும்.
-
ஸ்ரீகிருஷ்ணர் யார்?
அவரை ஏன் அவதாரம் என்று அழைக்கிறார்கள்?
-
யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள்,
அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர்,
கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக
அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்.அவருக்கு இன்னொரு பெயர் பகவான்
-
ஒரு மனிதனுக்கு உயிரோடு இருக்கும்போது கண்களால் பார்க்ககூடிய தூல உடலில் இருக்கிறான்.
இந்த துல உடல் அழிந்துபோனால்(இறந்துபோனால்) சூட்சும உடலில் வாழ்கிறான்
சூட்சும உடலும் அழிந்துபோனால் உடலற்ற நிலையில் ஆத்மாவாகிறான்
-
இந்த உலகத்திற்கும் மூன்று நிலைகள் உண்டு கண்களால் காணும் தூலஉலகம்
சூட்சும உடலில் வாழும் மனிதர்கள் காணும் உலகம் சூட்சும உலகம்
ஆத்மாவான பின் இந்த உலகமும் ஆத்மாவாக காட்சியளிக்கும். உருவங்கள் அனைத்தும் மறைந்து எல்லாம் ஒன்றாகிவிடும்
-
பொதுவாக நமக்கு நமது உடல்மீது பற்று ஏற்படுகிறது
சிலருக்கு குடும்பத்தில் உள்ள அனைவர்மீதும் பற்று ஏற்படும்
சிலருக்கு தங்கள் நாட்டின்மீது பற்று ஏற்படும்
சிலருக்கு மனிதர்கள் அனைவர்மீதும் பற்று ஏற்படும்
சிலருக்கு இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின்மீதும் பற்று ஏற்படும்
இந்த மொத்த உலகத்தின்மீதும் யாருக்கு பற்று ஏற்படுகிறதோ அவர் பகவான்.
-
ஒரு மனிதன் தன் சக்தியை முழுவதுமாக ஒடுக்கினால் அவன் பிரம்மமாகிறான்
பற்றற்றவன் பிரம்மத்தை அடைகிறான்
அதே மனிதன் சக்தியை பிரபஞ்ச அளவு விரிவுபடுத்தினால் பகவான் ஆகிறான்
அவனது பற்று பிரபஞ்சம் அளவு விரிவடைந்துவிட்டது
-
ஆதியில் இருந்த பகவானுக்கு ஆதிபகவான் என்று பெயர்.
இந்த பகவான் என்பது மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த நிலையை குறிக்கிறது.
பலர் இந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
பகவான் என்ற நிலை ஒன்றுதான் உள்ளது.
ஆனால் அந்த நிலையை பலர் அடைகிறார்கள்.
-
பகவான் என்ற நிலையை அடைய வேண்டுமானால் மனித உடலோடு பிறக்க வேண்டும்.
பல்வேறு தவங்கள் மேற்கொள்ள வேண்டும்.
படிப்படியாக சக்தியின் அளவை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
-
பகவான் புத்தர்,பகவான் சங்கரர்,பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்,பகவான் ரமணர் என்று இந்த பட்டியல் நீள்கிறது
இவர்கள் உலகத்தின் சக்திகள் முழுவதையும் அடக்கி ஆளத் தெரிந்தவர்கள்.
-
வைகுண்டத்தில் வீற்றிருந்த மகாவிஷ்ணு மனிதனாக பிறந்தார்
பிறக்கும்போதே பல்வேறு சக்திகளுடன் பிறந்தார்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர் அர்ஜுனன்
போர்க்களத்தில் பகவத்கீதை ஆரம்பமாகிறது
-
இரண்டு பக்கத்திலும் படைகள் அணிவகுத்து நிற்கின்றன.
தேவர்கள் அசுரர்கள் இருவரும் தனித்தனியாக இரண்டு அணிகளாக நிற்கவில்லை

தேவர்களில் பலர் இப்போது அசுரர்களின் படையில் இருக்கிறார்கள்.கர்ணன்,பீஷ்மர் போன்றவர்கள் தேவர்கள்.

நல்லவர்கள் சில வேளைகளில் தீயவர்களின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் நல்லவர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் அல்லது பயமுறுத்தப்படுகிறார்கள்.எல்லா காலத்திலும் இப்படி நடக்கிறது
-
பதிமூன்று ஆண்டுகள் கழித்தபின் வந்தால் நாடு தருவதாக பேச்சு
ஆனால் நாடு கொடுக்கவில்லை. போர்புரிந்து நாட்டை பெற்றுக்கொள்ளும்படி துரியோதனன் கூறிவிட்டான்.
போர்புரிவதைத்தவிர வேறு வழியில்லை என்ற சூழலில் போர்க்களத்தில் இரண்டு படைகளும் அணிவகுத்து நிற்கின்றன.
-
போர் துவங்குவதற்கு முன்பு எதிர் அணியில் உள்ள நல்லவர்களை அர்ஜுனன் பார்க்கிறான்
தாத்தா பீஷ்மர், குரு துரோணாச்சாரியர்,கிருபர் இன்னும் பலரை கொல்வது என்பது முடியாத காரியம்.
ஆனால் அவர்கள் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள்
-
போர்புரிய வேண்டுமானால் அதற்குரிய மனநிலை அவசியமாகும்.
போர் துவங்கும் முன் போர்வீரர்களின் மனதில் போர்குணத்தை ஏற்றுவார்கள்.
அர்ஜுனனுக்கு போர்புரியும் மனம் இல்லை.அவனது மனத்தில் பாசம் தலைதூக்குகிறது.
இவர்களை கொல்வதைவிட தான் கொல்லப்படுதல் சிறந்தது அல்லது பிச்சையெடுத்து வாழ்வது சிறந்தது என்று நினைக்கிறான்.
இந்த எண்ணத்தோடு வில்,அம்புகளை தேரில் வைத்துவிட்டு அமர்ந்துவிடுகிறான்.
-
இதன் பிறகுதான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசம் துவங்குகிறது
-
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
-
 எனதருமை அர்ஜுனனே! உன்னிடம் இதுபோன்ற மனச்சோர்வு எங்கிருந்து வந்தன?
வாழ்வின் முன்னேற்ற நோக்கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை.
இவை மேலுலகங்களுக்கு ஒருவனைக் கொண்டு செல்வதில்லை. அவமானத்தையே கொடுக்கின்றன.

பார்த்தா, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல.
இதுபோல் சிறுமையான இதயபலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளை தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.

-

ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடங்கள்-2

ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடங்கள்-2
-
வகுப்பு-2 நாள்-18-12-2019
-
இந்த உலகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள்.
நாம் தனியாக அமர்ந்து நமது மனத்தை ஆராய்ந்து பார்த்தால் பாதி நல்ல சிந்தனைகளும்,பாதி கெட்ட சிந்தனைகளும் நிறைந்திருப்பதை பார்க்கலாம்
நமது குடும்பங்களைப் பார்த்தால் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள்,சிலர் கெட்டவர்களாக இருப்பார்கள்
இந்த நல்லது,கெட்டது என்பது இந்த உலகம் முழுவதும் எங்கும் பரந்து கலந்துள்ளது
நல்லதை மட்டும் தனியாக பிரிக்க முடியாது.கெட்டதை மட்டும் தனியாக பிரிக்க முடியாது.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதுபோல.ஒவ்வொரு செயலிலும்கூட நல்லது,கெட்டது இரண்டும் கலந்துள்ளது.
-
இரண்டு அணுவிஞ்ஞானிகளை எடுத்துக்கொண்டால், ஒருவர் அறிவை பயன்படுத்தி அணு உலைகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வார்.  இன்னொருவர் அணு குண்டுகளை செய்து உலகத்தைஅழிக்க முயற்சி செய்வார்.
-
முற்காலத்தில் தேவர்கள்,அசுரர்கள் என்று இரண்டுவிதமானவர்கள் இருந்தார்கள்.
ஒரு அரசன் இந்த உலகத்தில் தானதர்மங்கள் செய்து நல்லவனாக வாழ்ந்தால் பின்பு தேவனாகிறான்
அதேபோல ஒரு அரசன்  நல்லவர்களை துன்புறுத்தி வாழ்ந்தால் பின்பு அசுரனாக மாறுகிறான்
தேவனிடம் எப்படி அதிக அளவு அறிவு இருக்குமோ அதே அளவு அறிவு அசுரனிடமும் உண்டு.ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் விதத்தில் இருவரும் மாறுபடுகிறார்கள்
-
முற்காலத்தில் அரசர்கள் இந்த உலகை ஆட்சி செய்வதுடன் நின்றுவிட விரும்பவில்லை.
இந்த உலகத்தைவிட்டு சென்றபிறகுகூட இந்த உலகின்மீது அதிகாரம் செலுத்த விரும்பினார்கள்.
இதற்கான வழிகள் வேதத்தில் கூறப்பட்டுள்ளன.
வாழும்போது அதிக அளவு புண்ணியத்தை சம்பாதிப்பதுதான் அதற்கான வழி
அதிகம் புண்ணியத்தை சம்பாதிப்பவன் ஒளி உடலில் நீண்டகாலம் வாழ்கிறான்.
அவனுக்கு தேவன் என்று பெயர். அதேபோல ஒளி உடலில் வாழும் பெண் தெய்வத்திற்கு தேவி என்று பெயர்
-
இந்த பூமி பல்வேறு இயற்கை சக்திகளால் நிரம்பியது.
கடலும்,மலையும்,காற்றும்,மழையும்கூட இயற்கை சக்திகள்தான்
இது தவிர பூமிக்கு வெளியேயுள்ள சூரியன்,சந்திரன்,செவ்வாய் போன்ற பல கிரகங்கள்,நட்சத்திர மண்டலங்கள் பூமியின்மீது ஆதிக்கம் செலுத்துகிறது.
-
இந்த இயற்கை சக்திகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற தேவர்களுக்கு உண்டு.யார் அதிகம் புண்ணியம் செய்திருக்கிறார்களோ அவர்கள் தேவர்களில் உயர்ந்தவன். அவருக்கு பெரிய பதவி கிடைக்கும்
-
உதாரணமாக சூரியனை கட்டுப்படுத்தும் சக்தி வேண்டுமானால் அதிக அளவு தான தர்மங்களை ஒரு அரசன் செய்திருக்க வேண்டும். அப்போது சூரியதேவன் என்ற பதவி கிடைக்கும்.சனிக்கு ஒரு தேவன்.வியாழனுக்கு ஒரு தேவன்.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தேவன் உண்டு
அதேபோல ஒரு கடல் அரசனாகவோ,நதி தேவதையாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஏற்ப தான தர்மங்கள் செய்திருக்க வேண்டும்.
மழை மிகவும் முக்கியம். எனவே அந்த பொறுப்பை தேவர்களில் உயர்ந்தவரான இந்திரன் வைத்துக்கொண்டான்.
மழை வேண்டுமானால் இந்திரனை வணங்கவேண்டும். அப்போது அவர் மனம் மகிழ்ந்து மழைய உண்டு பண்ணுவார். அந்த தேவனை மகிழ்விக்காவிட்டால் மழையை தடுத்துவிடுவார்.
-
இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம்.ஏனென்றால் தற்காலத்தில் அப்படி எதுவும் இல்லை.முற்காலத்தில் இப்படித்தான் நடந்தது
கடலில் இறங்க வேண்டுமானால் கடல் தேவனை வணங்க வேண்டும். நதியில் நீராட வேண்டுமானால் நதி தேவதையை வணங்க வேண்டும்.
மலையின் மிது ஏற வேண்டுமானால் மலை அரசனை வணங்க வேண்டும்.
கட்டிடம் கட்ட வேண்டுமா? அதற்கு ஒரு தேவனை வணங்க வேண்டும்
மருந்து தயாரிக்க வேண்டுமா? அதற்கு ஒரு தேவனை வணங்க வேண்டும்
-
இந்த நடைமுறைகளை சரியாக பின்பற்றாமல் தங்கள் விருப்பம்போல செயல்படுபவர்கள் மீது தேவர்கள் கடும்கோபம் கொள்வார்கள். அவர்கள் முயற்சிகளை நாசம் செய்வார்கள்.
எனவே ஒரு காலத்தில் மக்கள் இந்த தேவர்கள்மீது உள்ள பயத்திலேயே வாழ்ந்தார்கள்
-
காலை முதல் இரவு வரை தேவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன.
அந்த காரியத்தை செய்ய வேண்டுமானலும் யாகம் வளர்த்து,தேவர்களுக்கு  கொடுக்க வேண்டியதை அந்த யாகத்தில் கொடுப்பார்கள்.
சில தேவர்கள் சோமபானம் கேட்பார்கள். சில தேவர்கள் ஆடுகளை பலியிட கேட்பார்கள். சில தேவர்களுக்கு பல்வேறு பழங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
இந்த யாகங்களை சாதாரண மனிதர்கள் செய்ய முடியாது. புரோகிதர்களுக்கு கொடுக்க வேண்டிதை கொடுத்து,அவர்கள் மூலமாக இதை செய்ய வேண்டும். புரோகிதர்கள் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார்கள்
-
மகாபாரத காலம் என்பது இப்படிப்பட்ட தேவர்கள் ஆட்சி செய்த காலம்
-
சிலர் தேவ பதவியை அடைவதற்காக குறுக்கு வழிகளை கையாண்டார்கள்.அது தான் தவம்
தவத்தின் மூலம் அதிகஅளவு சக்தி கிடைக்கிறது.மிக குறுக்கிய காலத்திலேயே தேவபதவி கிடைத்துவிடும்
இவ்வாறு தவம் செய்து தேவ பதவியை அடைய நினைத்தவர்கள் அசுரர்கள்.
தேவலோகத்தை விட உயர்ந்த உலகங்கள் இருந்தன. கைலாயம்,வைகுண்டம்,சத்தியலோகம் போன்ற பல உலகங்கள் இருந்தன
அந்த உலகத்தின் அதிபதிகளை நினைத்து கடுமையான தவம் செய்வார்கள்.
-
ஒரு காலத்தில் தேவர்களை வீழ்த்துவதற்காக அசுரர்கள் பலர் பூமியில் பிறந்தார்கள்.
வேறு உலகங்களில் இல்லாத பெருமை பூமியில் உண்டு.இது கர்மபூமி. இங்கேதான் நல்லதும் செய்ய முடியும் கெட்டதும் செய்ய முடியும்.
தேவ லோகத்தில் நல்லது செய்ய முடியாது. ஏனென்றால் அங்கே இருப்பர்கள் எல்லோரும் தேவைகள் இல்லாதவர்கள்.ஒருவரின் உதவி இன்னொருவருக்கு தேவைப்பாடாது
பூலோகத்தில் மனிதர்களுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. இந்த தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பவன் உயர்நிலையை அடைகிறான்
-
அசுரர்கள் பலர் பூமியில் மனிதர்களாக பிறந்தார்கள்.அவர்கள் சக்திகளை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக தேவர்களும் தங்கள் பிரதிநிதியாக குழந்தைகள் பிறக்கும்படி செய்தார்கள். சூரியதேவனின் மகன் கர்ணன்,இந்திரனின் மகன் அர்ஜுனன்,வாயுதேவனின் மகன் பீமன் உட்பட இன்னும் பலர்.
-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்


ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
வகுப்பு-1 நாள்-17-12-2019
-
இந்துமதத்தின் புனித சாஸ்திரம் என்ன என்று யாராவது கேட்டால் நாம் உடனே எதை சொல்ல வேண்டும்?
வேதம்.
வேதம்தான் இந்துக்களின் புனித சாஸ்திரம்
-
அப்படியானால் பகவத்கீதை?
இதைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்
-
வேதம் என்றால் என்ன?
-
வேதம் என்றால் எக்காலத்திலும் இருக்கக்கூடிய அறிவுத்தொகுதி.
தொடக்கமும் முடியும் அற்ற வேதங்களின் மூலமே உலகம் முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது.
-
இந்த உலகத்தில் என்னென்ன உள்ளதோ அவை அனைத்தும் எண்ணங்களின் வெளிப்பாடே.
எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
-
தோன்றா நிலையில் இருந்த எண்ணம் எந்த சொற்களின் மூலம் வெளிப்பட்டதோ,
அந்த சொற்களின் தொகுதியே வேதங்கள்.
-
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால்,புறவுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் வேதங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஏனெனில் ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அதைக்குறிக்கும் சொல் இல்லாமல் இருக்க முடியாது.(சொல்லுக்குப் பின்னால் எண்ணம் உள்ளது) எண்ணம்,அதிலிருந்து சொல்,அதிலிருந்து புறப்பொருள் உருவாகிறது.
-
இந்த சொல் என்பது என்ன? வேதங்களே.
வேதத்தின் மொழி என்ன? சமஸ்கிருதம் இல்லை.
வேதத்தின் மொழி வேதமொழி.(அதற்கு எழுத்துக்கள் இல்லை)
 வேதமொழியைவிட பழைய மொழி எதுவும் இல்லை.
-
வேதங்களை எழுதியது யார் ? என்று நீங்கள் கேட்கலாம்.
வேதங்கள் எழுதப்படவே இல்லை.
சொற்களே வேதங்கள்.
ஒரு சொல்லை நான் பிழையின்றி உச்சரித்தால் அதுவே வேதம்.
விரும்பிய பலனை அது உடனே அளிக்கும்.
-
வேதத்தொகுதி என்னென்றும் உள்ளது.
உலகம் எல்லாம் அந்தச் சொல்தொகுதியின் வெளிப்பாடே.
வெளிப்பட்டு காணப்படுகின்ற சக்தி ஒரு கல்பம் முடியும்போது சூட்சும நிலையை அடைந்து, சொல் வடிவையும், பின்பு எண்ண வடிவையும் அடைகிறது. அடுத்த கல்பத்தில் மீண்டும் எண்ணங்கள் சொல்லாகி, அதிலிருந்து உலகம் பிறக்கிறது.
-
வேதங்களில் அடங்காதது என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் மனமயக்கமே.
அப்படி எதுவும் இருக்க முடியாது.இந்த உலகம் வேதத்திற்குள் அடக்கம்
-
வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. மற்ற மதங்களின் நூல்கள் அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவை,ஆனால் வேதங்கள் மனிதரால் எழுதப்படவில்லை.
-
மனிதரால் உருவாக்கப்ட்டவை எதுவாக இருந்தாலும் அவை வேதங்கள் அல்ல.ஏனென்றால் வேதங்களுக்கு துவக்கமும் இல்லை,முடியும் இல்லை.அவை எல்லையற்ற காலம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
-
எழுத்துக்கள் என்பது கண்டுபிடிக்கப்படாத, பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் வாழ்வை பார்ப்போம்.
-
அந்த காலத்தில் இயற்கையின் ரகசியங்களை அறிய நினைத்த ரிஷிகள், பல தவங்களை இயற்றி, இயற்கையை கடந்து, சுதந்திர நிலையை அடைந்தார்கள். அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்டது வேதம்.
இவ்வாறு பல காலங்களில் பல ரிஷிகளிடமிருந்து வேதம் வெளிப்பட்டது.
-
அவர்கள் கூறிய கருத்துக்களை சீடர்கள் மனப்பாடம் செய்து கொண்டார்கள். ஏனென்றால், அந்த காலத்தில் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறு மனப்பாடம் செய்வதன் மூலம் இவை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டன.
-
வேதங்களில் என்ன இருக்கும்?
-
பிரார்த்தனைகள், யாகங்கள், சடங்குகள்,அறிவுரைகள் போன்றவை.
சுருக்கமாக கர்மகாண்டம்,ஞான காண்டம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது
-
கர்மகாண்டத்தை சற்று விளக்குவோம்.
-
சடங்குகளும் பல தேவதைகளைப்பற்றிய பலவகையான துதிப்பாடல்களும் அதில் உள்ளன.
சடங்குகள் பல கிரியைகள் அடங்கியவை.
அவற்றுள் சில மிக விரிவானவை.அவற்றைச்செய்ய பல புரோகிதர்கள் தேவை.
சடங்குகளின் விரிவால் புரோகிதத் தொழிலே தனியொரு சாஸ்திரமாயிற்று.
படிப்படியாக இந்த சடங்குகளிலும் துதிகளிலும் பொதுமக்களுக்கு மதிப்பு வளர்ந்தது.
தேவதைகள்கூட மறைந்து அவர்களது இடத்தை இந்தச்சடங்குகள் பிடித்துக்கொண்டன.
-
இந்த கர்மகாண்டத்தை பின்பற்றுபவர்களில் மீமாம்சகர்கள் என்ற ஒரு பிரிவினர் .இவர்கள் வேதத்தையே தெய்வமாக வழிபடுகிறார்கள்.
-
புரோகிதர்கள் இந்த துதிகளைப்பாடி,அக்கினியில் ஆஹுதி அளிப்பார்கள்.அவற்றின் சொற்களுக்கே பல பயன்களை அளிக்கும் சக்தியுண்டு . இயற்கைக்கு உட்பட்ட மற்றும் இயற்கையை மீறிய அனைத்து சக்திகளும் அங்கு உள்ளன.
-
வேதங்கள் ஒரு அபூர்வசக்தியுள்ள வெறும் வார்த்தைகள் மட்டுமே.
அவற்றை சரியாக உச்சரித்தால் விளைவுகளை உண்டாக்கவல்லது.
ஓர் உச்சரிப்பு தவறானாலும் பலன் தராது.
மற்ற மதங்களின் பிரார்த்தனைகள் போல் அல்லாமல் வேதங்களே இவர்களை பொறுத்தவரை தெய்வங்கள்.
வேதங்களின் சொற்களுக்கு எவ்வளவு உயர்வான இடம் அளிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து நீங்கள் உணரலாம்.

மழைபொழிய வேண்டுமா? இன்ன இன்ன பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்.
குழந்தை பிறக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
யுத்தத்தில் ஜெயிக்க வேண்டுமா? யாகம் செய்ய வேண்டும்
இன்ன இன்ன பலன் கிடைக்க வேண்டுமா?இப்படி இப்படி யாகம் செய்ய வேண்டும்.
திருமணமா இந்த சடங்கை செய்ய வேண்டும்.மரணமா? இந்த சடங்கை செய்ய வேண்டும்.
 சொர்க்கம் செல்ல வேண்டுமா? அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டுமா? பலசாலியாக வேண்டுமா? பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டுமா? இன்னும் பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள் அங்கே சொல்லப்பட்டுள்ளன
-
இவ்வாறு மனப்பாடம் செய்யப்பட்டவைகளை,முறைப்படுத்தி வரிசைப்படுத்தினார்கள்.
அவைகளை ரிக்வேதம் என்று அழைத்தார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு இன்னும் பல ரிஷிகளின் வாரத்தைகளை சேர்க்க வேண்டியிருந்தது. அவைகளை தொகுத்து யஜுர் வேதம் என்றார்கள்.
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாமவேதம்,
மகாபாரத காலத்திற்குபிறகு  வியாசர் வேதத்தை நான்காக தொகுத்தார்
அவை ரிக்வேதம்,யஜுர்வேதம்,சாமவேதம்,அதர்வணவேதம்
-
அந்த காலத்தில் நடந்த இயற்கை பேரிடரிலோ, போர்களாலோ,நோய்களாலோ, வேதத்தை மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒருவரோ,அல்லது ஒரு சமுதாயமோ அழிந்துவிட்டால், வேதத்தின் அந்த பகுதி முழுவதும் அழிந்துவிடும். பிறகு அது திரும்ப கிடைக்காது. இவ்வாறு வேதத்தின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
முற்கால வேதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியே தற்போது நம்மிடம் உள்ளது என்று சொல்லப்படுகிறது
ஆகவே இதை சரிசெய்ய எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானது.
-
அதன் பிறகு எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மரப்பட்டைகள்,மர இலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் வேதங்களை எழுத ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு மொழி படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
வேதத்தை மனப்பாடம் செய்வது குறைந்துபோனது.
வேதங்கள் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகவில்லை.
அப்போது எழுதப்பட்ட மொழி பிராமண மொழி அல்லது பிராமி மொழி என்று அழைக்கப்படுகிறது
பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இந்த மொழி வளரச்சியடைந்து உலகின் பல பகுதிகளுக்கு சென்றது
உலகம் முழுவதும் பிராமி மொழியின் கல்வெட்டுகளைக் காணலாம்
பிராமி மொழியுடன் சேர்ந்து வேதமும் உலகம் முழுவதும் பரவியது
-
வேதத்தின் சில வார்த்தைகளை பிராமி மொழியில் உச்சரிப்பது கடினமாக இருந்தது மேலும் பிராமி மொழியில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி பாணினி என்ற ரிஷி சமஸ்கிருதம் என்ற மொழியை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார்
-
அதன்பிறகு வேதங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
-
வேதங்கள் எழுதப்பட்ட பிறகு அவைகள் பலருக்கு பயனுள்ளதாக இருந்தது.
அதன் கூடவே பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
வேதங்களில் பல கருத்துக்கள் இருந்தன. ஒருவர் அவைகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆகவே தங்களுக்கு பிடித்த பகுதிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு வேதங்களை பின்பற்றிய மக்கள் பல்வேறு மதப்பிரிவுகளை உருவாக்கினார்கள்.
-
சிலர் சொர்க்கத்திற்கு செல்வது குறித்த கருத்துக்களை ஆதரித்தார்கள்.
சிலர் முக்தி பற்றிய கருத்தை ஆதரித்தார்கள்.
சிலர் இந்த உலக இன்பங்களை அனுபவிக்கும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களில் கூறப்படும் பல்வேறு கருத்துக்களை பற்றி விவாதிக்கிறார்.
இதில் வேதாந்தம் என்று சொல்லப்படும் நெறி கடைசியாக உருவானது. இது தான் தற்கால இந்துமதம்.
-
ஸ்ரீகிருஷ்ணரின் பகவத்கீதை, வேதாந்தத்தின் சிறந்த நூலாக கருதப்படுகிறது.
இது வேதத்தின் பல கருத்துக்களை விளக்கிகூறுகிறது. எதையும் குறைகூறவில்லை.
சொர்க்கம் செல்வதோ,மற்றஉலக இன்பமோ,மனிதனின் துன்பத்தை முற்றிலும் நீக்காது ,முக்தி என்பது தான் மனிதனின் லட்சியம் என்பதை போதிக்கிறது.
-
முக்தி என்ற லட்சியத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு மதங்கள் உருவானது.
-
வேதம்= கர்மகாண்டம்+ ஞானகாண்டம்
ஞான காண்டம்(வேதாந்தம்)=உபநிடதங்கள் +பகவத்கீதை+பிரம்மசூத்திரம்(தத்துவசாஸ்திரம்)
-
வேதாந்தம்= சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,காணபத்யம்,சூர்யம் என்ற ஆறு மதங்கள்
கர்மகாண்டத்திற்கு எதிராக தோன்றிய மதம் = புத்தம், சமணம். இந்த இரண்டு மதங்களும் ஞான காண்டத்தில் உள்ள கடவுள் கருத்தை தவிர பிற பகுதிகளை ஏற்றுக்கொள்கிறது
-
இவைகள் தவிர இன்னும் பல மதங்கள் இந்தியாவில் தோன்றிக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் சில மதங்கள் தோன்றுகின்றன.
-
எது இந்துமதம் என்று யாராவது கேட்டால் நாம் சொல்ல வேண்டியது என்ன?
இந்தியாவில் தோன்றிய மதங்களில் கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்தும் இந்துமதம்
-
இந்துமதத்திற்கு என்று உள்ள நம்பிக்கை என்ன?
கடவுள் ஒருவரே. மகான்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
அவரை அடைவதற்கான பாதைகள் பல. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதை
ஏகம் சத். விப்ரா பஹுதா வதந்தி (ரிக்வேதம்)