Thursday, 27 July 2017

ஞானயோகம் சாதனைப்படிகள் சொற்பொழிவின் சுருக்கம்

சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம்
சாதனைப்படிகள் சொற்பொழிவின் சுருக்கம்
--
கண்,காது போன்ற வெளிப்பொறிகள்.மூளையிலுள்ள
நரம்பு மையங்களான உட்புலன்கள் மற்றும் மனம்
இந்த மூன்றும் சேர்ந்தது புலனறிவு

ஏதாவது சின்னம் இல்லாமல் நீங்கள் சிந்திக்க முடியாது.பார்வையற்றோர்கூட 
ஏதாவது ஓர் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் சிந்திக்க முடியும்

புலன் என்னும் சொல் மூளையில் உள்ள நரம்பு மையத்தையே குறிக்கிறது
என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்

மனத்தை அடக்கவேண்டுமானால் முதலில் இந்தப் புலன்களை
அடக்க வேண்டும்.உள்ளேயோ வெளியேயோ மனம் அலையாமல் 
தடுக்க வேண்டும்

நாம் பார்த்தவை,கேட்டவை,உண்டவை,நாம் வசித்த இடங்கள் இப்படி
புலன் விசயங்களை நினைப்பதிலேயே நம் வாழ்வின் பெரும்பகுதி
கழிந்துவிடுகிறது

தன் மதத்திலும் இறைவனிடமும் எல்லையற்ற நம்பிக்கை ஒருவனுக்கு 
இருக்கவேண்டும்.நம்பிக்கை இல்லாதவன் ஞானியாக முடியாது.

கடவுள் உண்டு என்று ஒருவனுக்கு நம்பிக்கை இருந்தால்,அந்த கடவுளை
அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் எனறு தெரிந்தால்,அதை அடையாமல்
சும்மா இருப்பானா?

ஒவ்வொரு நாளும் நாம் இன்பத்தின் பின்னால் ஓடுகிறோம்.ஆனால் நாம் அதை
அடையும் முன் அது மறைந்துவிடுகிறது.ஆனாலும் நாம் இன்பத்தை தேடி
ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.

நாம் இன்பத்தை நோக்கிச் செல்லும் அளவிற்கு இன்பம் நம்மைவிட்டு 
விலகிப்போகிறது.இவ்வாறுதான் உலகம் செல்கிறது.வாழ்க்கை செல்கிறது

இரவிலும் பகலிலும் நம்மைச்சுற்றி பலர் செத்துக்கொண்டே இருப்பதை 
நாம் பார்க்கிறோம்.ஆனாலும் நமக்கு மரணம் இல்லை என்று நினைக்கிறோம்

இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.
இன்பத்தை அனுபவிப்பவன் துன்பத்தையும் அனுபவித்தே தீரவேண்டும்

துன்பத்தை நாடுவது மனிதனின் பெருமைக்கு குறைவானதுபோல் இன்பத்தை
நாடுவதும் அவனது பெருமைக்கு குறைவானது தான்.பகுத்தறிவுவாதி
இரண்டையும் நாடமாட்டான்

செல்வந்தர்களில் பலபேர் பழைய இன்பங்களில் நிறைவின்றி புதுப்புது 
இன்பங்களை தேடி அலைகிறார்கள்.காலப்போக்கில் அனைத்து இன்பங்களும்
பழையவையாகிவிடுகின்றன

கணநேரம் இன்பம் தருபவற்றை தேடி மக்கள் ஓடுகிறார்கள்.அவைகள் 
நரம்புகளை தட்டி எழுப்புகின்றன.அதன்பிறகு மிகப்பெரிய துன்பம் வருகிறது

மக்களில் பெரும்பாலானவர்கள் முட்டாள்கள்.பிரபலமான ஒருவன் என்ன 
செய்கிறானோ, அதை அப்படியே பின்பற்றுகிறார்கள்.தாங்கள் செய்வது சரியா
என்பதை சிந்திப்பதில்லை

எல்லா அறிவும் நமக்குள்ளேயே இருக்கின்றன.ஆன்மாவை மூடியிருக்கும் 
திரையை விலக்குவதன் மூலம் எல்லா அறிவையும் பெறலாம்

உலகிலுள்ள எல்லா நூல்களையும் படிக்கலாம் ஆனாலும் கடவுள் பற்றி சிறிதும்
புரிந்துகொண்டிருக்க மாட்டோம்.ஆன்மீக பயிற்சி இல்லாமல் இறைவனைப்பற்றி
எதையும் அறிந்துகொள்ள முடியாது

அறிவுப்பயிற்சிக்கு மட்டும் இடம்கொடுத்து, இதய உணர்ச்சிகள் விரிய இடம் 
கொடுக்காதது தான் மேலைநாட்டு கல்விமுறையின் தீமைகளுள் ஒன்றாகும்.
இந்த அறிவால் மனிதனின் சுயநலம் மேலும் பெருகியிருக்கிறது

அறிவு நிறைந்து அதே நேரத்தில் இதய உணர்ச்சி இல்லாவிட்டால்,அவனால்
இறைவனை காண முடியாது.

அறிவு நிறைந்த ஒருவன் மிகவும் கொடியவனாகவும் இருக்கலாம்.ஆனால் அறிவற்ற
இரக்கம்மிகுந்த ஒருவன் ஒருபோதும் கொடியவனாக இருக்க மாட்டான்.

ஆன்மீகம் என்பது அன்பையும், இதய பண்பான எல்லையற்ற கருணையையும்
வளர்ப்பதற்கான பயிற்சி. இறைவனை அடைய ஒருவன் கற்றவனாக இருக்க
வேண்டிய அவசியமில்லை
-
நீங்கள் தூயவர்களா? நீங்கள் தூயவரானால் இறைவனை அடைவது நிச்சயம்
உலகிலுள்ள விஞ்ஞானம் அனைத்தும் தெரிந்திருந்தாலும் நீங்கள்
தூயவராக இல்லாவிட்டால் இறைவனை காண முடியாது

பழைய கால இந்தியர்கள் தொலைநோக்கி,உருபெருக்கி,சோதனைசாலை
எதுவும் இல்லாமல் பல விஞ்ஞானத்தை படைத்தார்கள்.எப்படி? இதயத்தின் மூலம்
தான்.இதயத்தின் மூலம் பிரபஞ்ச ரகசியத்தை அறியலாம்

தற்கால விஞ்ஞான வளர்ச்சியால் நடந்த நன்மை என்ன?சிலர் பலரை 
அடிமையாக்கி வாழ்கின்றனர்.ஒவ்வொரு ஏழையும் புதுப்புது பொருளை 
வாங்க போராடுகிறான் துன்புறுகிறான் முடிவில் அழிந்துபோகிறான்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு செலவிட்ட ஆற்றலை மக்களை
தூயவர்களாக்குவதற்கு செலவிட்டிருந்தால் இந்த உலகம் 
இன்னும் இன்பமாகியிருக்கும்.

இந்த உலகபொருட்களை அறிவது போல் இறைவனையும் 
பல்லாயிரம்பேர் கண்டிருக்கிறார்கள்.ஆனால் கண்களால் காணவில்லை.அது
ஐம்புலன்களையும் கடந்த காட்சியாகும்

உண்மை ஆன்மீகம் என்பது ஐம்புலன்களை கடந்து சென்றபிறகு தான் வருகிறது
அப்போது இதுவரை மக்கள் காணாத பலவற்றை காண்போம்.கேட்காத பலவற்றை
கேட்போம்.இதுவரை உணராதவற்றை உணர்வோம்

இறைவன் என்ற ஒரே பொது மையத்திலிருந்து தோன்றியவர்களே நாம் 
அனைவரும்.முடிவில் எல்லா உயிர்களும் தந்தையான இறைவனை 
அடைந்துதான்தீரவேண்டும்
---
இந்துமதம்- விவேகானந்தர் விஜயம்
--






























No comments:

Post a Comment