Thursday, 27 July 2017

ஆன்மா,இயற்கை,இறைவன் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா,இயற்கை,இறைவன் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன்
தூலவடிவமான உடல் அடுத்து சூட்சும உடல்,கடைசியில் ஆன்மா

சூட்சும உடல் பல யுகங்களானாலும் அழியாமல் இருக்கும்.இவை 
எந்த தடைகளையும் கடந்துவிடும்.ஆனால் தூலஉடலைப்போல அதுவும் ஜடம்தான்

நான்‡உணர்வு,புத்தி,சித்தம்,பொறிகள்,புலன்கள்,உடல் எல்லாமே ஆன்மாவின்
கட்டளைக்கு அடங்கி நடக்கின்றன.இவற்றையயல்லாம் 
தோன்றுவித்ததும் ஆன்மாதான்

பிரபஞ்சத்தை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் அது எந்த அமைப்பில் 
உருவாக்கப்பட்டிருக்கிறதோ,அதே அமைப்பில்தான் அதன் ஒவ்வொரு பகுதியும்
அமைக்கப்பட்டிருக்கிறது

பிரபஞ்சத்தில் ஒரு சிறுபகுதியில் என்ன இருக்கிறதோ அதுவே பிரபஞ்சம் முழுவதும்
இருக்கும் என்பதை நாம் காணலாம்

ஒரு கண்ணாடித்துண்டை உடைத்துபொடியாக்கியால் அது மூலக்கூறுகளாக 
மாறுமேதவிர சூன்யமாகிவிடாது.இந்த உலகிலுள்ள எல்லா பொருட்களும் அதேபோல்தான்

எந்த பொருட்களையும் சூன்யமாக மாற்றமுடியாது.கண்களால் காணமுடியாத
நுட்பநிலையை அவை அடையலாம்.ஆனாலும் அவை நுட்பமாக இருக்கவே செய்கிறது

சூன்யத்திலிருந்து எந்த பொருட்களையும் உருவாக்க முடியாது.அதே போல் சூன்யத்திலிருந்து
பிரபஞ்சத்தை உருவாக்க முடியாது. ஏற்கனவே இருக்கும்
பொருளிலிருந்துதான் இன்னொன்றை உருவாக்க முடியும்.

இந்த பூமி குளிர்ந்துகொண்டே சென்று கடைசியில் ஒருநாள் தூள்தூளாக சிதறினாலும்
அவை நுட்பமான அணுக்களாக மாறுமேதவிர சூன்யமாகிவிடாது.அந்த அணுக்களிலிருந்து
மீண்டும் பூமி தோன்றும்

இந்த பிரபஞ்சம் நுட்பமான அணுக்களாக மாறுவதும் பிறகு பிரபஞ்சமாக விரிவடைவதும்
மறுபடிமறுபடி நடக்கிறது.இதை பிரபஞ்சம் ஒடுங்குதல் மற்றும் பரிணமித்தல் என்பார்கள்

உலகிலுள்ள சக்தியின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுதான் என்பதும்,
எந்த பொருளுக்கும் அழிவு(சூன்யம்) இல்லை என்பதும் நமக்குத் தெரியும்
-
இந்த பிரபஞ்சம் முன்னால் ஒடுங்கிய பிரபஞ்சத்தின் பரிணாம விரிவே. மீண்டும் இது நுட்பமாகி,
மிக நுட்பமாகி ஒடுங்கிவிடும்.அதிலிருந்து மீண்டும் புதிய யுகம் தோன்றும்.

சூன்யத்திலிருந்து ஏதோ ஒன்று படைக்கப்பட்டது என்ற பொருளில் படைப்பு என்பது 
எதுவும் ஏற்படவில்லை.படைப்பு என்பது வெளிப்பாடு

பிரபஞ்சம் என்பது வெளிப்பாடு,அதை வெளிப்படுத்தியவர் இறைவன். பிரபஞ்சம்
அவரது மூச்சின் வழியே வெளிவருவதுபோல் உள்ளது.திரும்பவும் அவருள்ளேயே
ஒடுங்கிவிடுகிறது

முதன் முதலாக படைப்பு எப்படி எங்கே என்று கேட்பது பொருளற்றது. காலத்திற்கு தொடக்கம்
என்ற ஒன்று கிடையாது.தொடக்கத்தை நினைத்தால் அதற்கு முன்பு என்ன என்று
சிந்திக்கவேண்டியிருக்கும். ஆகவே காலம் எல்லையற்றது

காலமும், பிரபஞ்சமும் எல்லையற்றவை இதற்கு ஒரு தொடக்கமும் இல்லை,
முடிவும் இல்லை.அதேபோல் இறைவனுக்கும் தொடக்கம் முடிவு இல்லை

ஒருவன் முக்திபெற்றதும் ஆவியுடல் முலக்கூறுகளாக பிரிந்துவிடுகிறது.ஆன்மா
அழிவற்றதாக எப்போதும் இருக்கிறது

அழிவு என்பதன் பொருள் என்ன? ஒரு பொருளை மூலக்கூறுகளாக பிரித்தால்
அதை அழிவு என்கிறோம்.மூலக்கூறுகளால் ஆக்கப்படாத பொருளுக்கு அழிவு இல்லை

ஆன்மா எந்த மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்டதல்ல என்பதால் அதற்கு அழிவு இல்லை
ஆகவே அதற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.

இயற்கை முழுவதையும் எடுத்துக்கொண்டால் அதற்கு தொடக்கமும் இல்லை
முடிவும் இல்லை.ஆனால் அதற்குள் பலகோடி மாறுதல்கள் நடக்கின்றன
-
சில மூலபொருட்களும் அதை ஒன்றிணைக்கும் சக்தியும் சேர்ந்து ஒருபொருள்
உருவாகிறது.அந்த ஒன்றிணைக்கும் சக்தி இல்லாவிட்டால் பொருள் உருவாகாது.
மூலப்பொருள் காரியம், சக்தி காரணம் என அழைக்கப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் காரியம், கடவுள் காரணம் .இதில் காரியமாகிய பிரபஞ்சத்தில்
காரணமாகிய கடவுள் சேர்ந்திருக்கிறார்.ஆன்மாக்கள் காரியம் இறைவன் காரணம்
என்றால் இறைவனே ஆன்மாக்களாகியுள்ளார்

எனக்கு ஒரு உடல் இருக்கிறது.இந்த உடல் ஆன்மாவை மூடியிருக்கிறது.ஆன்மா
உடலுள் இருந்துகொண்டு உடல் வழியாக பிரகாசிக்கிறது.

இந்த பிரபஞ்சம் இறைவனுக்கு உடல்போல் அமைந்துள்ளது. பிரபஞ்சம் ஒடுங்கும்போது
அது படிப்படியாக நுட்பமாகிறது.ஆனாலும் நுட்பமான சூட்சுமபிரபஞ்சம்
இறைவனுக்கு உடலாகவே இருக்கிறது.மீண்டும் சூட்சுமத்திலிருந்து தூலமாக மாறுகிறது

நாம் தனித்தனியானவர்கள், ஆனால் இறைவனுள் நாம் அனைவரும் ஒன்றே.
நாம் எல்லோரும் அவருள் இருக்கிறோம். நாம் எல்லோரும் அவருடைய பகுதிகள்

இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படையாகிய எல்லையற்ற ஆன்மாவையே நாம் 
இறைவன் என்கிறோம்
--
சுவாமி விவேகானந்தர்



























ஆன்மா: அதன் தளையும் முக்தியும் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா: அதன் தளையும் முக்தியும் சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

நாம் ஒவ்வொருவரும் அந்த பிரம்மமாகிய உண்மையும் மாயையும் கலந்த கலவை.
மாயையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் நாம் உண்மையில் யாரோ அதுவாக
இருப்போம்

குறிப்பிட்ட அளவு சக்தியும் குறிப்பிட்ட அளவு ஜடப்பொருளும் 
இணைந்தே உருவம் உண்டாகிறது.

நமது உடலுக்கு ஓர் ஆரம்பம் உண்டு என்றால் ஒரு முடிவும் உண்டு.ஆன்மாவிற்கு ஆரம்பம்
இல்லாததால் அதற்கு முடிவும் இல்லை

வேதாந்தத்தின் கருத்துப்படி உங்களுள்,என்னுள் என்று எல்லோருள்ளும் உள்ள ஆன்மா
எங்கும் நிறைந்தது

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனத்தில் ஒரு
பதிவை உண்டாக்குகிறது.அதை சம்ஸ்காரம் என்கிறார்கள்

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் மனத்தாலும் உடலாலும் செய்ய செயலின்
பலனே குணம். ஒவ்வொருவரும் தன் குணத்தை தானே உருவாக்கிக்கொள்கிறான்.

ஒருவன் இறக்கும்போது அவனது சம்ஸ்காரங்கள் இறப்பதில்லை. அவை மனத்துடன்
சேர்ந்திருக்கின்றன.மரணத்திற்கு பிறகு எங்கு செல்வது என்பதை இந்த சம்ஸ்காரங்களே
முடிவு செய்கின்றன

பிராணன் என்று சொல்லப்படும் சக்திகள் ஒன்று சேர்ந்து ஜடப்பொருளிலிருந்து உடலையும்
மனத்தையும் உருவாக்குகின்றன. மரணத்தின்போது பிராணன் உடலை விட்டு வெளியேறி
வேறு ஜடப்பொருளிலிருந்து வேறு உடலையும் மனத்தையும் உருவாக்குகிறது

மனம் அழிந்து தூள்தூளாகிச் சிதறி,சம்ஸ்காரங்களையும் விட்டுவைக்காமல்
போகும்போதுதான், நாம் பரிபூரண சுதந்திரம் அடைவோம்.

நம்முடைய இப்போதைய பிறவி முற்பிறவியின் பலனே.இந்த உலகில் தற்போது நாம்
செய்யும் செயல்களே நமது அடுத்த பிறவியை நிர்ணயிக்கின்றன

நம்மைப் பிறக்கச் செய்வது எது? நமது முன்வினைகள். நம்மை இவ்வுலகிலிருந்து 
வெளியே கொண்டுபோவது எது? இங்கே நாம் செய்யும் செயல்கள்

இயற்கை ஆன்மாவின் முன் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆன்மா அறியாமை காரணமாக
தான் இயங்குவதாகவும் இயற்கை நிலையாக இருப்பதாகவும் நினைக்கிறது. பூமி நிலையாக
இருப்பதாகவும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதாக நாம் தவறாக 
நினைப்பதுபோல்.

மனிதனுக்கு ஆன்மா இருப்பதுபோல் மிருகங்களுக்கும் மற்ற எல்லா உயிர்களுக்கும்
ஆன்மா உண்டு.

பிரபஞ்சம் முழுவதும் பிரம்மத்தில்தான் இருந்தது.அதிலிருந்து வெளிப்பட்டது.அது
எங்கிருந்து வெளிப்பட்டதோ, அதற்குள் அடங்குவதற்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது

மனிதப்பிறவியே பிரம்மத்தை மிகவும் நெருங்கிய நிலையாகும்.
மனித பிறவியில் மட்டும் தான் ஜீவன் சுதந்திரம் பெற முடியும்.ஆகவே தேவர்களைவிட 
மற்ற மிருகங்களைவிட மனிதனே மிகச்சிறந்தவன்

நாம் எந்த பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டடோமோ அந்த பிரம்மத்தை அடைவதற்கான 
முயற்சிதான் வாழ்க்கையின் பெரிய போராட்டம். அங்கே தான் நிலையான
அமைதி இருக்கிறது 

முதலில் ஒரு சமநிலை இருந்தது .அது கலைந்துவிட்டது.எல்லா பகுதிகளும் எல்லா 
அணுக்களும் எல்லா மூலக்கூறுகளும் இழந்த தங்கள் சமநிலையை திரும்பப்பெறவே
போராடிக்கொண்டிருக்கின்றன

ஆயிரக்கணக்கானோரில் ஏதோ ஒருசிலருக்குத்தான் தாங்கள் சுதந்திரம் 
அடைந்துவிடுவோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுகிறது.மற்றவர்கள் லெளகீக 
வி­யங்களிலேயே திருப்தி அடைகின்றனர்

காரணகாரிய விதிகளின் பலனை முன்கூட்டியே அறிவும் திறன் உள்ளவர்களுக்கு,
இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப்பற்றி துல்லியமாக சொல்ல முடிகிறது

கடவுள் எதையும் விரும்ப முடியாது. விரும்பினால் அவர் கடவுளாக இருக்க முடியாது,
அவர் நிறைநிலையை அடையாதவராகத்தான் இருப்பார்.

கடவுள் கோபம் கொள்கிறார்,கடவுள் இதனை விரும்புகிறார்,மகிழ்ச்சிகொள்கிறார் என்று
பேசுவது குழந்தைப்பேச்சு.அதற்கு பொருளே இல்லை.இதேபோல் செயல்படுபவர் கடவுளாக
இருக்க முடியாது

ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும்போது ஊர்ந்துகொண்டும் பல் இல்லாமலும்
பிறக்கிறது.உலகைவிட்டு செல்லும் கிழவனும் ஊர்ந்துகொண்டு பல் இல்லாமல் செல்கிறான்.

நிறைநிலை பெற்ற மனிதர்கள் எதற்கும் ஆசைப்படுவதில்லை. ஏன்? ஆசைப்படுவதற்கு ஒன்றும் இல்லை
ஆசையற்ற நிலையே தெய்வநிலை
-
சுவாமி விவேகானந்தர்






















ஞானயோகம் சாதனைப்படிகள் சொற்பொழிவின் சுருக்கம்

சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம்
சாதனைப்படிகள் சொற்பொழிவின் சுருக்கம்
--
கண்,காது போன்ற வெளிப்பொறிகள்.மூளையிலுள்ள
நரம்பு மையங்களான உட்புலன்கள் மற்றும் மனம்
இந்த மூன்றும் சேர்ந்தது புலனறிவு

ஏதாவது சின்னம் இல்லாமல் நீங்கள் சிந்திக்க முடியாது.பார்வையற்றோர்கூட 
ஏதாவது ஓர் உருவத்தை ஆதாரமாகக் கொண்டுதான் சிந்திக்க முடியும்

புலன் என்னும் சொல் மூளையில் உள்ள நரம்பு மையத்தையே குறிக்கிறது
என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்

மனத்தை அடக்கவேண்டுமானால் முதலில் இந்தப் புலன்களை
அடக்க வேண்டும்.உள்ளேயோ வெளியேயோ மனம் அலையாமல் 
தடுக்க வேண்டும்

நாம் பார்த்தவை,கேட்டவை,உண்டவை,நாம் வசித்த இடங்கள் இப்படி
புலன் விசயங்களை நினைப்பதிலேயே நம் வாழ்வின் பெரும்பகுதி
கழிந்துவிடுகிறது

தன் மதத்திலும் இறைவனிடமும் எல்லையற்ற நம்பிக்கை ஒருவனுக்கு 
இருக்கவேண்டும்.நம்பிக்கை இல்லாதவன் ஞானியாக முடியாது.

கடவுள் உண்டு என்று ஒருவனுக்கு நம்பிக்கை இருந்தால்,அந்த கடவுளை
அடைந்தால் பேரானந்தம் கிடைக்கும் எனறு தெரிந்தால்,அதை அடையாமல்
சும்மா இருப்பானா?

ஒவ்வொரு நாளும் நாம் இன்பத்தின் பின்னால் ஓடுகிறோம்.ஆனால் நாம் அதை
அடையும் முன் அது மறைந்துவிடுகிறது.ஆனாலும் நாம் இன்பத்தை தேடி
ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.

நாம் இன்பத்தை நோக்கிச் செல்லும் அளவிற்கு இன்பம் நம்மைவிட்டு 
விலகிப்போகிறது.இவ்வாறுதான் உலகம் செல்கிறது.வாழ்க்கை செல்கிறது

இரவிலும் பகலிலும் நம்மைச்சுற்றி பலர் செத்துக்கொண்டே இருப்பதை 
நாம் பார்க்கிறோம்.ஆனாலும் நமக்கு மரணம் இல்லை என்று நினைக்கிறோம்

இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.
இன்பத்தை அனுபவிப்பவன் துன்பத்தையும் அனுபவித்தே தீரவேண்டும்

துன்பத்தை நாடுவது மனிதனின் பெருமைக்கு குறைவானதுபோல் இன்பத்தை
நாடுவதும் அவனது பெருமைக்கு குறைவானது தான்.பகுத்தறிவுவாதி
இரண்டையும் நாடமாட்டான்

செல்வந்தர்களில் பலபேர் பழைய இன்பங்களில் நிறைவின்றி புதுப்புது 
இன்பங்களை தேடி அலைகிறார்கள்.காலப்போக்கில் அனைத்து இன்பங்களும்
பழையவையாகிவிடுகின்றன

கணநேரம் இன்பம் தருபவற்றை தேடி மக்கள் ஓடுகிறார்கள்.அவைகள் 
நரம்புகளை தட்டி எழுப்புகின்றன.அதன்பிறகு மிகப்பெரிய துன்பம் வருகிறது

மக்களில் பெரும்பாலானவர்கள் முட்டாள்கள்.பிரபலமான ஒருவன் என்ன 
செய்கிறானோ, அதை அப்படியே பின்பற்றுகிறார்கள்.தாங்கள் செய்வது சரியா
என்பதை சிந்திப்பதில்லை

எல்லா அறிவும் நமக்குள்ளேயே இருக்கின்றன.ஆன்மாவை மூடியிருக்கும் 
திரையை விலக்குவதன் மூலம் எல்லா அறிவையும் பெறலாம்

உலகிலுள்ள எல்லா நூல்களையும் படிக்கலாம் ஆனாலும் கடவுள் பற்றி சிறிதும்
புரிந்துகொண்டிருக்க மாட்டோம்.ஆன்மீக பயிற்சி இல்லாமல் இறைவனைப்பற்றி
எதையும் அறிந்துகொள்ள முடியாது

அறிவுப்பயிற்சிக்கு மட்டும் இடம்கொடுத்து, இதய உணர்ச்சிகள் விரிய இடம் 
கொடுக்காதது தான் மேலைநாட்டு கல்விமுறையின் தீமைகளுள் ஒன்றாகும்.
இந்த அறிவால் மனிதனின் சுயநலம் மேலும் பெருகியிருக்கிறது

அறிவு நிறைந்து அதே நேரத்தில் இதய உணர்ச்சி இல்லாவிட்டால்,அவனால்
இறைவனை காண முடியாது.

அறிவு நிறைந்த ஒருவன் மிகவும் கொடியவனாகவும் இருக்கலாம்.ஆனால் அறிவற்ற
இரக்கம்மிகுந்த ஒருவன் ஒருபோதும் கொடியவனாக இருக்க மாட்டான்.

ஆன்மீகம் என்பது அன்பையும், இதய பண்பான எல்லையற்ற கருணையையும்
வளர்ப்பதற்கான பயிற்சி. இறைவனை அடைய ஒருவன் கற்றவனாக இருக்க
வேண்டிய அவசியமில்லை
-
நீங்கள் தூயவர்களா? நீங்கள் தூயவரானால் இறைவனை அடைவது நிச்சயம்
உலகிலுள்ள விஞ்ஞானம் அனைத்தும் தெரிந்திருந்தாலும் நீங்கள்
தூயவராக இல்லாவிட்டால் இறைவனை காண முடியாது

பழைய கால இந்தியர்கள் தொலைநோக்கி,உருபெருக்கி,சோதனைசாலை
எதுவும் இல்லாமல் பல விஞ்ஞானத்தை படைத்தார்கள்.எப்படி? இதயத்தின் மூலம்
தான்.இதயத்தின் மூலம் பிரபஞ்ச ரகசியத்தை அறியலாம்

தற்கால விஞ்ஞான வளர்ச்சியால் நடந்த நன்மை என்ன?சிலர் பலரை 
அடிமையாக்கி வாழ்கின்றனர்.ஒவ்வொரு ஏழையும் புதுப்புது பொருளை 
வாங்க போராடுகிறான் துன்புறுகிறான் முடிவில் அழிந்துபோகிறான்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு செலவிட்ட ஆற்றலை மக்களை
தூயவர்களாக்குவதற்கு செலவிட்டிருந்தால் இந்த உலகம் 
இன்னும் இன்பமாகியிருக்கும்.

இந்த உலகபொருட்களை அறிவது போல் இறைவனையும் 
பல்லாயிரம்பேர் கண்டிருக்கிறார்கள்.ஆனால் கண்களால் காணவில்லை.அது
ஐம்புலன்களையும் கடந்த காட்சியாகும்

உண்மை ஆன்மீகம் என்பது ஐம்புலன்களை கடந்து சென்றபிறகு தான் வருகிறது
அப்போது இதுவரை மக்கள் காணாத பலவற்றை காண்போம்.கேட்காத பலவற்றை
கேட்போம்.இதுவரை உணராதவற்றை உணர்வோம்

இறைவன் என்ற ஒரே பொது மையத்திலிருந்து தோன்றியவர்களே நாம் 
அனைவரும்.முடிவில் எல்லா உயிர்களும் தந்தையான இறைவனை 
அடைந்துதான்தீரவேண்டும்
---
இந்துமதம்- விவேகானந்தர் விஜயம்
--