❓கேள்வி-ராமாயணத்தில் ராமர் சம்பூகனை வதம் செய்தது சரியா?
சம்பூகன் எந்த தவறும் செய்யவில்லை.
சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக ராமர் அவனைக்கொன்றது சரியா?
..
✍️பதில்-சூத்திரன் தவம் புரிந்தான் என்பதற்காக ராமர் அவனைக் கொல்லவில்லை.
சபரி என்ற சூத்திரபெண் காட்டில் கடுமையான தவமியற்றி பலகாலம் வாழ்ந்தாள்.ராமர் அவளைச் சென்று பணிந்தார்.அவள் கடித்து எச்சில்பட்ட பழங்களை ராமர் உண்டார். இங்கே ராமர் ஜாதியும் பார்க்கவில்லை,சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்றும் கூறவில்லை.
.
வால்மீகி வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தவர். அவரும் சூத்திர குலத்தை சேர்ந்தவர்தான். அவரை தவம் செய்யும்படி நாரதர் கூறினார். வால்மீகி பல காலம் தவம்புரிந்தார். பின்பு ராமருக்கு வேண்டிவரில் ஒருவரானார்
இங்கே சூத்திரன் தவம் புரியக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. வால்மீகி சூத்திரகுலத்தில் பிறந்ததால் யாரும் அவரை விலக்கிவைக்கவும் இல்லை.
.
குகன் சூத்திரகுலத்தை சேர்ந்தவன்.ராமர் அவனை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். சூத்திரன் என்பதற்காக அவனை ஒதுக்கிவைக்கவில்லை.
..
தற்செயலாகவோ அல்லது இயற்கை சீற்றம் காரணமாகவோகூட கணவனைவிட்டு மனைவி தனியாக இன்னொருவரின் வீட்டில் ஒருநாள் இரவை கழித்தாலும்கூட அவனை விலக்கி வைக்கவேண்டும் என்றவிதி அந்த காலத்தில் அயோத்தியில் நிலவிவந்தது.
சீதை பலநாட்கள் இராவணனின் அசோக வனத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்தாள்.ராவணனைக்கொன்று சீதையை ராமர்மீட்டார். சீதை அனைவர் முன்னிலையிலும் தீக்குளித்து தான் ஒரு புனிதவதி என்பதை நிரூபித்தாள்.
அப்படியிருந்தும் அயோத்தியில் உள்ள ஒரு சூத்திரன் சீதையைக்குறித்து தவறாகப்பேசினான் என்பதற்காக அந்த நாட்டு சட்டப்படி சீதையை கானகத்திற்கு அனுப்பியவர் ராமர்.
இதில் சூத்திரனையும் தன்னுடைய பிரஜையாகவே அவர் பார்த்தார்.
..
அப்படியென்றால் எதற்காக சம்பூகளை கொன்றார்?
..
அதிக சக்தியைப்பெறுவதற்காக அசுரர்கள் தவம்புரிவார்கள். அவர்கள் தவம்புரிந்து குறுக்கு வழியில் சக்திகளைப்பெற்றபிறகு நாட்டில் உள்ள மக்களை துன்புறுத்துவார்கள். இப்படி குறுக்கு வழியில் சக்தியைப்பெறுவதற்காக தவம்புரிபவர்களை அரசர்கள் கொல்வது தர்மம்.
சம்பூகன் குறுக்கு வழியில் தவம்செய்து அதிகசக்தியைப்பெற நினைத்தான்.அதனால் நாட்டில் பல துர்சகுணங்கள் ஏற்படத்தொடங்கின.பிராமணரின் குழந்தை எந்த காரணமும் இல்லாமல் இறந்துபோனது.இவைகளை ஆராய்ந்தபிறகு சம்பூகன் அதிக சக்திவேண்டி தவம்புரிவதே இதற்குக்காரணம் என முடிவுக்கு வந்தார்கள்.
நாரதரே இதனை ராமரிடம் தெரிவித்தார். எனவே ராமர் அவனைக் கொன்றார்.
..
சாஸ்திரவிதிப்படி ஒருவர் தவம் செய்வதை யாரும் தடுப்பதில்லை.
ஒருவர் சூத்திரகுலத்தில் பிறந்திருந்தாலும், குருவிடம் சரணடைந்து குருவின் வழிகாட்டுதலின்படி தவம் செய்யலாம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
வால்மீகி நாரதரை குருவாக ஏற்று தவம்புரிந்தார்.
..
சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment