Saturday, 5 August 2017

பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்


சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இன்பநுகர்ச்சி,மற்றொன்று பேரின்ப அனுபூதி.
இவை இரண்டும் மக்களை கவர்கிறது. பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன்
ஞானியாகிறான்

ஆசிரியர் தெளிந்த ஞானம் இல்லாதவராக இருந்தால் அவர் நூறுமுறை
உபதேசித்தாலும் சீடனால் ஆன்மாவை அறியமுடியாது

யாரைக்காண மனிதன் பலவகைத் துறவுகளை மேற்கொள்கிறானோ,அவரது
பெயரை சொல்கிறேன்.அதுதான் ஓம். அழிவில்லாத இந்த ஓம்தான் பிரம்மம்

அந்த ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.உடல் அழிந்தாலும்
ஆன்மா அழிவதில்லை

சிறியதில் சிறியதாகவும், பெரியதில் பெரியதாகவும், எல்லா உயிர்களுக்கும்
இறைவனாக விளங்கும் அவர், எல்லா உயிர்களின் இதயக்குகையில்
உறைகிறார். பாவம் இல்லாதவன் அவரை காண்கிறான்

வேதங்களை ஓதுவதாலோ கூர்ந்த அறிவாலோ ஆன்மாவை அடையமுடியாது.
ஆன்மா யாரை தேடுகிறதோ அவனே அதை அடைகிறான்

தொடர்ந்து பாவச்செயல்களை செய்பவன், மனம் அமைதிபெறாதவன்,தியானம்
செய்ய முடியாதவன், இவர்களால் ஆன்மாவை அடைய முடியாது

நீ பயப்படாதே விழித்தெழுந்து முயற்சியில் ஈடுபடு. லட்சியத்தை அடையும்வரை
நில்லாதே. அழிவே இல்லாத இறைவனை அறிவதால் மட்டுமே மரணத்திலிருந்து
நாம் தப்ப முடியும்

நாம் எப்படி ஆன்மாவைப் பார்ப்பது? மனத்தின் வெளிப்பார்வையை நிறுத்தி
அதை உள்ளே திருப்பவேண்டும்.இப்படிச் செய்தால்தான் உள்ளே இருக்கும்
இறைவனின் மகிமையைக் காணமுடியும்

இருப்பது ஒரே பொருளான ஆன்மாதான். நீங்கள் நான், இந்தப் பிரபஞ்சம் 
எல்லாமே ஒன்றுதான்.அது பலவாகத்தோன்றுகிறது, அவ்வளவுதான்.

ஒன்றேயான இந்தப்பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்தாலும், வெளியே உள்ள
தூய்மையோ,தூய்மையின்மையோ அதைப் பாதிப்பதில்லை

மனத்தை அலைக்கழிக்கும் ஆசைகளெல்லாம் அடங்கியபின், இறக்கும் இயல்புடையவனான மனிதன்
இறப்பற்றவன் ஆகிறான், பிரம்மத்தை அடைகிறான்

மனத்தின் கோணல்கள் எல்லாம் நிமிர்ந்தவுடன், இதயத்தின் முடிச்சுக்களெல்லாம்
அறுபட்டவுடன், இறக்கும் இயல்புடையவன் இறப்பற்றவன் ஆகிறான்

முற்காலத்தில் உண்மையை வெளியே தேடினார்கள். ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர்
தனக்குள்ளே உள்ள அற்புத எந்திரத்தை ஆராய்ந்தனர் அதன் பலனாக பிரபஞ்சரகசியத்தை அறிந்தார்கள்

உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அற்புத உண்மைப்பொருள் இருக்கிறது. இந்த பொருளுக்குப் பிறப்பும்
இல்லை.இறப்பும் இல்லை. அதற்கு உருவம் இல்லை. இது எங்கும் நிறைந்தது. எப்போதும் இருப்பது

இந்த பிரபஞ்சம் முழுவதும் ஓர் உடம்பு, இதற்கு பின் பிரபஞ்சமனமும், அதற்கு பின் பிரபஞ்ச ஆன்மாவும்
உள்ளது.மனித உடல் பிரபஞ்ச உடலின் ஓர் அம்சம். மனிதமனம் பிரபஞ்சமனத்தின் ஓர்அம்சம். மனிதஆன்மா
பிரபஞ்ச ஆன்மாவின் ஓர் அம்சம்

பிரபஞ்ச ஆன்மாவாக இருப்பது எதுவோ, அதுவே நீ. நீ அதன் அம்சம் அல்ல, முழுமை.
இறைவனாகிய முழுமை நீயே.

ஆன்மா என்ற நிலையில் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அதுவே எனக்குள்ளும் 
உங்களுக்குள்ளும் இருக்கிறது.அது ஒன்றேதான்.

ஒரே ஆன்மாதான் பல்வேறு உடல்களில் பல ஆன்மாக்களாக பிரதிபலிக்கிறது. இந்த உண்மை நமக்கு
தெரிவதில்லை.

நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு அந்நியமானவர்கள் என்று நினைக்கிறோம். இப்படி நினைக்கும்வரை
உலகம் துக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

ஒருவன் ஏன் மற்றொருவனுக்கு தீமை செய்கிறான்? தனக்கு கிடைக்கவேண்டிய
இன்பத்தை மற்றவன் தடுத்துவிடுவானோ என்ற பயம் காரணமாகத்தான்.

இருப்பது ஆன்மா மட்டுமே என்றால் பயத்திற்கு இடம் ஏது? என் தலையில் ஒரு இடிவிழுந்தாலும் அந்த
இடியாக இருப்பதும் நானே என்று உணர்பவன் எதற்கும் பயப்டுவதில்லை

நான் ஏன் பிறரை நேசிக்க வேண்டும்? ஏனெனில் அவர்களும் நானும் ஒன்றல்லவா? நானும் என்
சகோதரனும் ஒன்று என்பதால்தான் நான் அவனிடம் அன்பு செலுத்துகிறேன்.

நம் காலடியில் நெளியும் மிகத்தாழ்ந்த புழுவிலிருந்து மிக உயர்ந்த பிராணிவரை உள்ள
உயிரினங்களுக்கெல்லாம் உடல்கள் பலவானாலும் ஆன்மா ஒன்றுதான்.

எல்லா வாய்கள் மூலமும் நீயே உண்கிறாய், எல்லா கைகள் மூலமும் நீயே உழைக்கிறார்.பலகோடி
உயிர்கள் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதும் நீதான்.துன்புறுவதும் நீதான்

எனக்கு மரணம் ஏது? எனக்கு அப்பால் வேறு எதுவும் இல்லையே! பயம் ஒழிகின்ற அன்றுதான் முடிவற்ற
இன்பமும் எல்லையற்ற அன்பும் நெஞ்சில் இடம்பெறும்.

பிரபஞ்ச படைப்புகள் அனைத்திடமும் தோன்றும் என்றும் மாறாத இரக்கமும்,அன்பும்,அழிவற்ற ஆனந்தமும்
மனிதனை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்திவிடுகின்றன.எந்த துக்கமும் அவனை தொடமுடியாது.

நான் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவன், இறைவனிலிருந்து வேறுபட்டவன் என்ற வேறுபாட்டு எண்ணமே
இந்த இன்பதுன்பங்களுக்கு முற்றிலும் காரணம்

நானே அவன். நானே இந்த பிரபஞ்சத்தின் ஆன்மா. நான் எல்லையற்ற பேரின்ப வடிவினன்,
என்ற அனுபவம் உண்டான உடனே உண்மை அன்பு தோன்றும். பயம் மறையும்.துயரங்கள் ஒழியும்

இந்துமதம்-விவேகானந்தர் விஜயம்
































No comments:

Post a Comment