Saturday, 5 August 2017

முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்

சுவாமி விவேகானந்தரின் முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்

அந்தப்பரம்பொருளைக் காணமுடியாது, உணர முடியாது,குறிப்பிட்டுக்கூற முடியாது.
அது நிறமற்றது.கண்கள் அற்றது.காதுகள் அற்றது,உடல் அற்றது,எங்கும் நிறைந்தது.
தனியானது,எல்லாவற்றையும் ஊடுருவியுள்ளது.

பரம்பொருளிலிருந்தே இந்த பிரபஞ்சம் வெளிவந்துள்ளது.மகான்கள் 
அந்தப் பரம்பொருளைக் காண்கிறார்கள். அவரைக் காண்பதே மேலான ஞானம்

பரம்பொருளில் ஆசை எழுகிறது.அதிலிருந்து படைப்புக் கடவுள் தோன்றினார்.
அதிலிருந்து உணர்வு,அதிலிருந்து ஜடப்பொருளும் எல்லா உலகங்களும் தோன்றின

முக்தியை விரும்பாமல் சொர்க்கத்தை விரும்பி பல புண்ணியங்களை செய்தவன் 
இறக்கும்போது சூரியக் கிரணங்கள் வழியாக பல்வேறு அழகிய உலகங்கள் வழியாக 
சொர்க்கத்திற்கு செல்கிறான்.சிலகாலம் அங்கு வாழ்ந்தபின் மீண்டும் பூமியில் பிறக்கிறான்

சொர்க்கத்தில் வசிப்பவர்கள் சிலகாலம் மட்டுமே அங்கு வாழ்கிறார்கள் புண்ணியபலன் தீர்ந்தபின்
மீண்டும் மனிதர்களாக பிறக்கிறார்கள்,சிலர் இன்னும் கீழான பிறவியை அடைகிறார்கள்

உலகைத் துறந்து, புலன்களை அடக்கக் கற்றுக் கொண்டவர்கள் காடுகளில் வசிக்கிறார்கள்.அவர்கள்
இறக்கும்போது சூரிய கிரணங்கள் வழியாக சென்று பரம்பொருள் வாழும் உலகை அடைகிறார்கள்.
மரணமிலாப் பெருநிலையை எய்துகிறார்கள்

எங்கு சென்றால் மீண்டும் திரும்பிவர வேண்டியதில்லையோ,அந்த இடத்தை அறிவதற்காக
குருவை நாடுகிறார்கள்.

குரு என்பவர் யார்? சாஸ்திரங்களை அறிந்தவர்.எப்போது யாருடைய மனம் பிரம்மத்திலேயே 
சஞ்சரிக்கிறதோ,செயல்புரிவது,சொர்க்கத்திற்கு செல்வது போன்றவற்றை துறந்தவரோ அவரே குரு

யார் சீடன்? யார் தன் மனத்தை அடக்கியனோ, யார் அமைதி அடைந்தவனோ,யார் மனத்தில்
எழுகின்ற பேரலைகளை ஒடுக்கியவனோ அவன் சீடன்

இந்த பரம்பொருள் அழிவற்றவர், என்றென்றும் இருப்பவர்,உருவமற்றவர்,தொடக்கம் இல்லாதவர்
உயிர் மனம் அனைத்தையும் கடந்து, அனைத்திற்கும் வெளியில் நிற்பவர்.தூயவர்,மாற்றமில்லாதவர்

பரம்பொருளிடமிருந்தே பிராணன்,மனம்,புலன்கள்,காற்று,ஒளி,தண்ணீர்,இந்த பூமி,சூரியன்
என்று எல்லாம் தோன்றியுள்ளன

பரம்பொருளிலிருந்தே எல்லா மனிதர்களும்,எல்லா மிருகங்களும்,எல்லா உயிர்களும்,எல்லா
மனஆற்றல்களும், எல்லா நல்லொழுக்கங்களும் ,உயிர்கள் வாழ்கின்ற ஏழு உலகங்களும்
தோன்றியுள்ளன

எல்லாம் அவரிலிருந்தே தோன்றின.எல்லாவற்றின் உள்ளேயும் உறைபவர் அவரே.ஒவ்வோர்
உயிரின் ஆன்மா அவரே.அவரே பிரம்மம்,அவரே பிரபஞ்சம்,அவரே மும்மூர்த்திகள்

இரண்டு வார்த்தைகள் உள்ளன.ஒன்று ஞானம் இன்னொன்று அனுபூதி. ஞானம் என்பது 
விழிப்புணர்வு,விஞ்ஞானம் என்பது அனுபூதி

அனைத்திற்கும் அப்பால் பொன்னிறப் பேரொளி திகழ்கிறது.மாசற்ற ஒப்புவமையற்ற அவரே பிரம்மம்
ஒளிக்கெல்லாம் ஒளியும்,அனைத்தையும் அறிபவரும்,ஆன்மாவும் அவரே

சொர்க்கத்திற்கு செல்லவேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் எண்ணிவந்தவர்கள்,
இந்த வாழ்க்கைக் கனவு முடிந்ததும் அவர்கள் எண்ணிய சொர்க்கம் என்ற கனவிற்குள் செல்கிறார்கள்

வாழ்நாள் முழுவதும் நரகத்தைப்பற்றி நினைத்து பயந்தவர்கள்,இறந்தபிறகு அவர்கள் எண்ணிய
நரகத்தில் இருப்பதாக கனவு காண்கிறார்கள்

சொர்க்கம்,நரகம் போன்ற முட்டாள்தனமான எண்ணங்களையயல்லாம் விட்டுவிடுவதுதான்
அறிவுள்ள சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு அழகு

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும் ஒரு கனவுதான்.சொர்க்கம் இன்னொரு கனவு
மனித உடலோடு வாழ்வது ஒருகனவு,மிருகவுடலுடன் வாழ்வதாக நினைத்தால் அது ஒரு கனவு

பரம்பொருளே உண்மை.அவரே குரு.இந்த கனவுகளிலிருந்து விடுபட விரும்புபவர் அவரே.
அனைத்தையும் சாட்சியாக நின்று காணவிரும்புபவர் அவரே.
தனது சொந்த இயல்பை உணரவிரும்புபவர் அவரே

நான் சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று விரும்பும்போது அது என்னை மனவசியத்திற்கு உள்ளாக்குகிறது
அந்த நிலையிலேயே இறக்கும்போது சொர்க்கத்திற்கு செல்வதாக காண்கிறேன்.அங்கே இறக்கைகளுடன்
தேவதைகள் பறப்பது போன்றவற்றை எல்லாம் பார்க்கிறேன்

நீங்கள் இந்த உலகம் உண்மை என்று கூறுகிறீர்கள்.அது தவறு.இந்த உலகம் உண்மை என்றால்
சொர்க்கம், நரகம் போன்றçவுயம் உண்மை.இந்த மூன்றும் மனவசியம் என்று வேதாந்தி சொல்கிறான்

சிலர் மனவசியத்தின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு என்று மாறிமாறி சென்றுகொண்டே
இருக்க விரும்புகிறார்கள்.இவர்களே சம்சாரிகள்.இவர்கள் முட்டாள்கள்

ஆன்மாவில் பால்வேறுபாடு எப்படி இருக்க முடியும்? இது சுய மனவசியமே. நீங்களே உங்களை
வசியத்தில் ஆழ்த்திக்கொண்டு,ஆண்,பெண் என்றெல்லாம் நினைத்துக் கொள்கிறீர்கள்

உன்னை மனவசியத்திற்கு ஆளாக்கி, அங்கே அந்தப்புத்தகங்களே இல்லை என்று நம்பச்செய்துவிட்டால்
நீ ஒரு வருடம் அதே இடத்தில் இருந்தாலும் மனவசியத்திலிருந்து விடுபடும்வரை அங்குள்ள
புத்தங்களை காணமுடியாது

எல்லாம் மனமயக்கம். ஆண்,பெண்,மிருகங்கள் எல்லாமே மனவசியத்தில் ஆழந்திருக்கின்றன.
எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதால் எல்லோரும் இந்தக் கனவைக் காண்கிறோம்

பிரபஞ்சம் முழுவதும் மனவசியத்திற்கு உள்ளாகியிருப்பதாக வேதாந்தம் கூறுகிறது. இதற்கு
காரணம் யார் ? நாமே. இந்த மனவசியத்தை மேலும் இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்வதே பற்று

இந்த அழுகையும் கதறலும் எதுவும் உங்களுக்கு கடுகளவுகூட பயன்தராது. இதனால்தான் எல்லா மதங்களும்
உலகத்தைத் துறக்குமாறு கூறுகின்றன.இதன் உண்மைப்பொருள் என்ன என்பதை பலமதங்கள் அறியவில்லை

மனவசியத்திற்கு ஒரு உள் எல்லையும் ஒரு வெளி எல்லையும் உண்டு. உள் எல்லைக்குள்ளும் வெளி எல்லையிலும்
நிற்பவர்கள் மனவசியத்தால் பாதிக்கப்படுவதில்லை.மனவசியத்தை உண்டுபண்ணுபவன் அதன்
உள் எல்லைக்குள் நிற்கிறான்.அதனால் அவன் பாதிக்கப்படுவதில்லை

நாம் இந்த உலகமென்னும் மனவசியத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாதிருக்க வேண்டுமானால் வெளி எல்லையை கடந்து
ஞானம் என்ற பகுதியில் நிற்கவேண்டும். அல்லது உள் எல்லையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் இறைவனுக்கு அருகில்
பக்தி என்ற நிலையில் நிற்கவேண்டும்.

பிரபஞ்சம் என்னும் இந்த மாயாஜாலத்தை இறைவனே உண்டாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார்.எத்தனையோ
ஜாலங்கள் வந்துபோய்க்கொண்டிருக்கின்றன.இந்த மாயாஜாலங்களை உருவாக்குகின்ற சக்தியே மாயை.
இந்த மாயையை ஆள்பவர் கடவுள்

இறைவனின் பாதங்களின் அருகில் உள் எல்லைக்குள் நின்றுகொள்.உன்னை மாயை பாதிக்காது என்கிறான் பக்தன்
அவனது காட்சி தெளிவாக இருக்கிறது

நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது மாட்டிக்கொள்ளாமல் விளையாடலாம்.இப்போது நீங்கள்
மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.இதுதான் வித்தியாசம்

இதுவரை யாரும் பிறக்கவும் இல்லை.இறக்கப்போவதும் இல்லை.எல்லாம் முட்டாள்தனம்.சொர்க்கமும் மனமயக்கம்
இந்த பூமியும் மனமயக்கம்.எல்லோரும் மனவசியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்

சொர்க்கம் மூடநம்பிக்கை, கடவுளும் மூடநம்பிக்கை, ஆனால் தான் மட்டும் உண்மை என்கிறான் உலோகாயதவாதி
சொர்க்கமும்,கடவுளும் மூடநம்பிக்கை மனிதனும் மூடநம்பிக்கைதான்.ஒன்று உண்மையானால் மற்றதும் உண்மை

வெளிப்பட்டுத்தோன்றும் உலகமும் இந்த நாடகமும் எல்லாமே மாயை,இவை இறைவன் அல்ல.
எதிலிருந்து இந்த உலகம் வெளிப்பட்டுள்ளதோ எதன்மீது இந்த நாடகம் நடைபெறுகிறதோ அதுவே பரம்பொருள்.

உண்மையில் நாம் பரம்பொருளுடன் ஒன்றுபட்டவர்கள்.நீங்கள் அவருடன் ஒன்றுபட்டவர்கள்
என்பது உங்களுக்குத்தெரியும் இதை அனுபூதியில் உணரவேண்டும்.

எப்போது மனமயக்கம் தெளியுமோ,மனவசியம் விடுபடுமோ‡அது ஒரு கணநேரத்திற்காக இருந்தாலும் சரி,
அப்போதுதான் அது அனுபூதி ஆகும்.அந்த அனுபூதி ஒரு மின்னல்வெட்டுபோல் மின்னி மறையலாம்.ஆனாலும்
அனுபூதி வந்தேயாகவேண்டும்

நீங்கள் பாடுபட்டால் அந்த நிலையை அடையலாம். அந்த மனவசியம் உங்களைவிட்டு அகலும்போது நீங்கள் ஓர்
உடம்பு,ஆண்,பெண் போன்ற எண்ணங்கள் எல்லாம் அதனுடன் சேர்ந்தே விலிகிவிடுகின்றன.

உலகின் உண்மை ஒருகணம் அனுபூதியில் உணரப்பட்டுவிட்டால், அதன்பிறகு நீ எவ்வளவுகாலம் வாழ்ந்து,
எவ்வளவு வினைப்பயனை அனுபவிக்க நேர்ந்தாலும் ஏமாறமாட்டாய்

நீங்கள் சுதந்திரராகி, மனவசியம் உங்களைவிட்டு விலகும்போது மிகப்பயங்கரமானவைகூட உங்களை பயமுறுத்தாது
ஒரு மலையே உங்கள்மீது விழுந்தாலும் நீங்கள் கவலைப்படமாட்டீர்கள்.ஏனெனில் அதுவெறும் மனமயக்கம் என்று
உங்களுக்குத் தெரிந்திருக்கும்

இந்துமதம்-விவேகானந்தர் விஜயம்












































பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்


சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி சொற்பொழிவின் முக்கிய கருத்துக்கள்

இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இன்பநுகர்ச்சி,மற்றொன்று பேரின்ப அனுபூதி.
இவை இரண்டும் மக்களை கவர்கிறது. பேரின்ப வழியை தேர்ந்தெடுப்பவன்
ஞானியாகிறான்

ஆசிரியர் தெளிந்த ஞானம் இல்லாதவராக இருந்தால் அவர் நூறுமுறை
உபதேசித்தாலும் சீடனால் ஆன்மாவை அறியமுடியாது

யாரைக்காண மனிதன் பலவகைத் துறவுகளை மேற்கொள்கிறானோ,அவரது
பெயரை சொல்கிறேன்.அதுதான் ஓம். அழிவில்லாத இந்த ஓம்தான் பிரம்மம்

அந்த ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.உடல் அழிந்தாலும்
ஆன்மா அழிவதில்லை

சிறியதில் சிறியதாகவும், பெரியதில் பெரியதாகவும், எல்லா உயிர்களுக்கும்
இறைவனாக விளங்கும் அவர், எல்லா உயிர்களின் இதயக்குகையில்
உறைகிறார். பாவம் இல்லாதவன் அவரை காண்கிறான்

வேதங்களை ஓதுவதாலோ கூர்ந்த அறிவாலோ ஆன்மாவை அடையமுடியாது.
ஆன்மா யாரை தேடுகிறதோ அவனே அதை அடைகிறான்

தொடர்ந்து பாவச்செயல்களை செய்பவன், மனம் அமைதிபெறாதவன்,தியானம்
செய்ய முடியாதவன், இவர்களால் ஆன்மாவை அடைய முடியாது

நீ பயப்படாதே விழித்தெழுந்து முயற்சியில் ஈடுபடு. லட்சியத்தை அடையும்வரை
நில்லாதே. அழிவே இல்லாத இறைவனை அறிவதால் மட்டுமே மரணத்திலிருந்து
நாம் தப்ப முடியும்

நாம் எப்படி ஆன்மாவைப் பார்ப்பது? மனத்தின் வெளிப்பார்வையை நிறுத்தி
அதை உள்ளே திருப்பவேண்டும்.இப்படிச் செய்தால்தான் உள்ளே இருக்கும்
இறைவனின் மகிமையைக் காணமுடியும்

இருப்பது ஒரே பொருளான ஆன்மாதான். நீங்கள் நான், இந்தப் பிரபஞ்சம் 
எல்லாமே ஒன்றுதான்.அது பலவாகத்தோன்றுகிறது, அவ்வளவுதான்.

ஒன்றேயான இந்தப்பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்தாலும், வெளியே உள்ள
தூய்மையோ,தூய்மையின்மையோ அதைப் பாதிப்பதில்லை

மனத்தை அலைக்கழிக்கும் ஆசைகளெல்லாம் அடங்கியபின், இறக்கும் இயல்புடையவனான மனிதன்
இறப்பற்றவன் ஆகிறான், பிரம்மத்தை அடைகிறான்

மனத்தின் கோணல்கள் எல்லாம் நிமிர்ந்தவுடன், இதயத்தின் முடிச்சுக்களெல்லாம்
அறுபட்டவுடன், இறக்கும் இயல்புடையவன் இறப்பற்றவன் ஆகிறான்

முற்காலத்தில் உண்மையை வெளியே தேடினார்கள். ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர்
தனக்குள்ளே உள்ள அற்புத எந்திரத்தை ஆராய்ந்தனர் அதன் பலனாக பிரபஞ்சரகசியத்தை அறிந்தார்கள்

உடலுக்கும் மனத்திற்கும் உள்ளே அற்புத உண்மைப்பொருள் இருக்கிறது. இந்த பொருளுக்குப் பிறப்பும்
இல்லை.இறப்பும் இல்லை. அதற்கு உருவம் இல்லை. இது எங்கும் நிறைந்தது. எப்போதும் இருப்பது

இந்த பிரபஞ்சம் முழுவதும் ஓர் உடம்பு, இதற்கு பின் பிரபஞ்சமனமும், அதற்கு பின் பிரபஞ்ச ஆன்மாவும்
உள்ளது.மனித உடல் பிரபஞ்ச உடலின் ஓர் அம்சம். மனிதமனம் பிரபஞ்சமனத்தின் ஓர்அம்சம். மனிதஆன்மா
பிரபஞ்ச ஆன்மாவின் ஓர் அம்சம்

பிரபஞ்ச ஆன்மாவாக இருப்பது எதுவோ, அதுவே நீ. நீ அதன் அம்சம் அல்ல, முழுமை.
இறைவனாகிய முழுமை நீயே.

ஆன்மா என்ற நிலையில் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அதுவே எனக்குள்ளும் 
உங்களுக்குள்ளும் இருக்கிறது.அது ஒன்றேதான்.

ஒரே ஆன்மாதான் பல்வேறு உடல்களில் பல ஆன்மாக்களாக பிரதிபலிக்கிறது. இந்த உண்மை நமக்கு
தெரிவதில்லை.

நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு அந்நியமானவர்கள் என்று நினைக்கிறோம். இப்படி நினைக்கும்வரை
உலகம் துக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

ஒருவன் ஏன் மற்றொருவனுக்கு தீமை செய்கிறான்? தனக்கு கிடைக்கவேண்டிய
இன்பத்தை மற்றவன் தடுத்துவிடுவானோ என்ற பயம் காரணமாகத்தான்.

இருப்பது ஆன்மா மட்டுமே என்றால் பயத்திற்கு இடம் ஏது? என் தலையில் ஒரு இடிவிழுந்தாலும் அந்த
இடியாக இருப்பதும் நானே என்று உணர்பவன் எதற்கும் பயப்டுவதில்லை

நான் ஏன் பிறரை நேசிக்க வேண்டும்? ஏனெனில் அவர்களும் நானும் ஒன்றல்லவா? நானும் என்
சகோதரனும் ஒன்று என்பதால்தான் நான் அவனிடம் அன்பு செலுத்துகிறேன்.

நம் காலடியில் நெளியும் மிகத்தாழ்ந்த புழுவிலிருந்து மிக உயர்ந்த பிராணிவரை உள்ள
உயிரினங்களுக்கெல்லாம் உடல்கள் பலவானாலும் ஆன்மா ஒன்றுதான்.

எல்லா வாய்கள் மூலமும் நீயே உண்கிறாய், எல்லா கைகள் மூலமும் நீயே உழைக்கிறார்.பலகோடி
உயிர்கள் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதும் நீதான்.துன்புறுவதும் நீதான்

எனக்கு மரணம் ஏது? எனக்கு அப்பால் வேறு எதுவும் இல்லையே! பயம் ஒழிகின்ற அன்றுதான் முடிவற்ற
இன்பமும் எல்லையற்ற அன்பும் நெஞ்சில் இடம்பெறும்.

பிரபஞ்ச படைப்புகள் அனைத்திடமும் தோன்றும் என்றும் மாறாத இரக்கமும்,அன்பும்,அழிவற்ற ஆனந்தமும்
மனிதனை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்திவிடுகின்றன.எந்த துக்கமும் அவனை தொடமுடியாது.

நான் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவன், இறைவனிலிருந்து வேறுபட்டவன் என்ற வேறுபாட்டு எண்ணமே
இந்த இன்பதுன்பங்களுக்கு முற்றிலும் காரணம்

நானே அவன். நானே இந்த பிரபஞ்சத்தின் ஆன்மா. நான் எல்லையற்ற பேரின்ப வடிவினன்,
என்ற அனுபவம் உண்டான உடனே உண்மை அன்பு தோன்றும். பயம் மறையும்.துயரங்கள் ஒழியும்

இந்துமதம்-விவேகானந்தர் விஜயம்