Wednesday, 20 December 2017

மனுஸ்மிருதி என்றால் என்ன என்பது தெரியாது.

கேள்வி...இந்துமதத்திற்கும் ஸ்மிருதிக்கும் உள்ள தொடர்பு என்ன?
-
சுவாமி வித்யானந்தர்....
-
இந்துக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்மிருதிகள் என்றால் என்ன? மனுஸ்மிருதி என்றால் என்ன என்பது தெரியாது. ஏனென்றால் தற்போது இந்துக்களை அவைகள் ஆட்சிசெலுத்தவில்லை. இந்துக்கள் அவைகளை பற்றி அறியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பிற மதத்தை சேர்ந்தவர்கள் இந்துக்களை பார்த்து உங்கள் ஸ்மிருதி இப்படி கூறுகிறது. நீங்கள் இதிலிருந்து பிறந்தவர்கள்,நீங்கள் அப்படி இப்படி என்று ஸ்மிருதிகள் உள்ளது என்று கூறுகிறார்கள். இதை கேட்டு இந்துக்கள் சிரிக்கிறார்கள். நாங்கள் பிறந்ததிலிருந்து இப்படி ஒன்றை கேள்விப்பட்டதே இல்லை. நாங்களே கேள்விப்படாத ஒன்றை குறித்து உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கரை. உங்கள் வேலையை பார்க்க வேண்டியது தானே என்கிறார்கள்.
-
இந்த ஸ்மிருதிகள் என்பது என்ன என்பதை ஆராய்வோம்.
-
பழைய காலத்தில் ரிஷிகள் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். அவர்கள் சுயநலம் இல்லாதவர்கள். இறைவனை அடைவதையே வாழ்க்கையில் லட்சியமாக கொண்டவர்கள்.தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது. இந்த உலகத்தில் உள்ள அனைவரும் இறைவனை காணவேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள். அதே நேரத்தில் அனைவராலும் ஒரே பிறவியில் இறைவனை அடையமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும். சிலர் சொல்வது போல இன்ன இன்ன கொள்கைகளை நம்புங்கள். அவ்வாறு நம்பும் அனைவரும் சொர்க்கம் செல்லலாம் என்றெல்லாம் கூறி மக்களை குழப்பவிரும்பவில்லை. இறைவனை அடைவதற்கென்று சில தகுதிகளை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அது சிலருக்கு ஒரு பிறவியில் சாத்தியமாகலாம், சிலருக்கு பல பிறவிகள் ஆகலாம்.
-
ஆகவே இந்த ரிஷிகள் மனித சமுதாயம் முழுவதும் இறைவனை நோக்கி செல்ல வேண்டும், அதே நேரத்தில் மெதுவாக படிப்படியாக செல்ல வேண்டும் என்பதை தெரிந்துவைத்திருந்தார். வேகமாக செல்பவர்களுக்கு ஒரு பாதை, சுமாரான வேகம் உள்ளவர்களுக்கு இன்னொரு பாதை,மெதுவாக செல்பவர்களுக்கு ஒரு பாதை என பல பாதைகளை உருவாக்கினார்.
-
அரசர்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பார்கள். மாறிக்கொண்டிருக்கும் அரசர்கள் தங்கள் விருப்பப்படி சட்டங்களை இயற்றிக்கொண்டிருந்தால் சமுதாயம் அதை ஏற்றுக்கொள்வதிலும்,அதை உடனே நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு அரசர் சில சட்டங்களை இயற்றியிருப்பார்,அவரை வீழ்த்திவிட்டு வரும் இன்னொரு அரசர், முன்பாக உள்ள அரசர் இட்ட சட்டங்கள் எதுவும் செல்லாது. உங்களுக்கென்று புதுசட்டம் இயற்றுகிறேன் என்று சொன்னால், மக்களின் தொடர்முன்னேற்றம் பாதிக்கப்படும், பிறகு இன்னொருவர் வேறு சட்டத்தை கொண்டுவருவார். ஆகவே இதை தடுப்பதற்காக சட்டங்கள் இயற்றுவது அரசர்கள் கையில் இல்லை. அவைகளை அந்த ரிஷிகள் தான் இயற்றினார்கள். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான் அரசர்களின் வேலை.இவ்வாறு பல நூற்றாண்டுகளாக பல மன்னர்கள் மாறியபோதும் சட்டம் மாறுவதில்லை. மக்களின் வாழ்க்கையும் ஒரே போல தான் இருக்கும். பெரியமாறுதல்கள் எதுவும் இருக்காது.
-
இவ்வாறு நடைமுறையில் இருக்கும் இந்த சட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளவையாக இல்லை. அல்லது சில சட்டங்கள் காலாவதியாகிவிட்டன.பயன்படுத்த தகுதியில்லாதவையாகிவிட்டன என்பதை அதற்கு பின் வரும் ரிஷிகள் தெரிந்து கொள்வார்கள். ஏற்கனவே இருக்கும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து,புதிய சட்டத்தை உருவாக்குவார்கள்.பிறகு இது பின்பற்றப்படும். இவ்வாறு ஸ்மிருதிகள் என்ற சட்டங்கள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டுகொண்டே இருக்கும். நிலையான சட்டங்கள் என்று எதுவும் இல்லை. காலத்திற்கு ஏற்ப இவைகள் மாறிக்கொண்டே இருக்கும். அந்தந்த காலத்தில் வாழும் ரிஷிகள் இவைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
-
இந்த ஸ்மிருதிகளில் என்ன என்ன இருக்கும்?
-
நமது நாட்டில் தற்போது இருக்கும் சட்டம் எப்படியோ அதே போல தான் ஸ்மிருதிகளும். அரசர்களின் கடமைகள் என்ன? பிராமணர்களின் கடமைகள் என்ன? பாமர மக்களின் கடமைகள் என்ன? எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று அவைகள் ஆணையிட்டு கூறுகின்றன. இந்த சட்டங்களை பின்பற்றாதவர்களை அரசர்கள் தண்டிப்பார்கள்..இந்த ஸ்மிருதிகள் பெரும்பாலும்,இறைவனை நோக்கி மக்கள் செல்வதை குறிக்கோளாக கொண்டிருப்பதால்,மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை காணலாம்.
-
ஸ்மிருதிகளால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளும்,தீமைகளும்
-
எந்த ஒரு சட்டமும் முழுமையாக எல்லோருக்கும் நன்மை செய்யும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அதிக நன்மையையும்,சிலருக்கு அதிக தீமையையும் கொண்டுவருகின்றன. அவைகளில் முக்கியமானது ஜாதி பற்றிய கட்டுப்பாடுகள். அந்த காலத்தில் தொழில்கள் அடிப்படையில் ஜாதிகள் பிரிக்கப்பட்டன. ஒரு ஜாதியில் இருப்பவர் திறமைவாய்ந்தவராக இருந்தால் இன்னொரு ஜாதிக்குரிய தொழிலை செய்யும் நடைமுறை இருந்ததை பற்றி வேறொரு கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.அதை படிக்கவும்....
-
சூத்திர ஜாதியில் பிறந்த ஒருவனுக்கு பிராமணஜாதிக்குரிய குணங்கள் இருந்தால்,அவன் பிராமணனாக கருதப்பட்ட காலம் மாறி, அவனை தொடர்ந்து தாழ்ந்தவனாகவே கருதிய நிலையை சமுதாயத்தில் ஏற்பட்டது. இதற்கு ஸ்மிருதிகளின் சட்டங்கள் தான் காரணம். ஒருவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், அவர்கள் தங்களுக்குரிய கடமைகளை சிறப்பாக செய்தால்,இறைவனை அடையலாம் என்னும் போது,அவர்கள் ஏன் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாறவேண்டும்? என்று கேட்டார்கள். ஒரு ஜாதியில் பிறப்பவன் அந்த ஜாதிக்குரிய கடமைகளை சிறப்பாக செய்தால் அடுத்த பிறவியில் இன்னொரு ஜாதியில் பிறக்கலாம், பிறகு அந்த ஜாதியில் சிறப்பாக கடமைகள் செய்து அடுத்த பிறவியில் இன்னொரு ஜாதியில் பிறக்கலாம். பிராமணஜாதி என்பது உயர்ந்த ஜாதி. பிராமணஜாதியில் பிறப்பவர்கள் பெரும்பாலும் முக்தியடைவார்கள்.அதற்கு ஏற்றவாறே அந்த ஜாதியின் சட்டதிட்டங்கள்,வாழ்க்கை முறைகள் வகுக்கப்பட்டிருக்கும். தாழ்ந்த ஜாதியில் பிறந்த ஒருவர் பிராமணனாக வேண்டுமானால்,படிப்படியாக பலபிறவிகள் எடுத்து கடைசியில் பிராமண ஜாதியில் பிறக்க வேண்டும்.
-
ஆகவே ஸ்மிருதிகளில் நான்கு ஜாதிகளுக்கும் தனித்தனி சட்டங்களை இயற்றினார்கள்.அவைகளை கடக்க முடியாதவாறு கடுமையாக்கினார்கள்.இந்த பிறவியில் பிறக்கும் ஒருவன் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு மாற முடியாது. இந்த ஜாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பிற ஜாதியினருடன் உணவு உண்ணக்கூடாது. அவர்களுடன் பழகக்கூடாது. ஒருவேளை ஒரு ஜாதியில் உள்ளவன், இன்னொரு ஜாதிக்கு செல்ல வேண்டுமா? அடுத்துவரும் பிறவியில் அது நடக்கலாம். இந்த பிறவியில் இவ்வளவு தான்.
-
அதே வேளையில் ஒரேபிறவியில் இறைவனை அடைவதற்கும் வழிகள் உள்ளன.
நான்கு ஜாதியில் உள்ள மக்களுக்கு நான்கு பாதைகள் இயல்பாகவே பொருந்துவதாக உள்ளது.அவைகள் பக்தியோகம்,கர்மயோகம்,ராஜயோகம்,ஞானயோகம்
-
சூத்திரஜாதியில் பிறக்கும் ஒருவனுக்கு இயல்பாகவே இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால், இறைவனிடம் பக்தி இருந்தால், அவன் எளிமையாக இறைவனை அடையலாம்.முக்தி பெறலாம். இவ்வாறு பலர் தாழ்ந்த ஜாதியில் பிறந்து இறைவனை அடைந்திருக்கிறார்கள்.பக்தியோகம் அவர்களுக்கு இயல்பானது
-
வியாபாரிகள்,முதலாளிகள் போன்று சமுதாயத்தில் பணம் சம்பாதிக்கும் தொழிலில் இருப்பர்களுக்கு கர்மயோகம் சிறப்பானதாகும். அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஓய்வு என்பதே இல்லை. அவர்கள் சம்பாதிக்கிறார்கள், தங்களுக்கு தேவையானவற்றை தவிர மற்றவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்குகிறார்கள். இவ்வாறு அவர்கள் கர்மயோகம் புரிகிறார்கள்.அவ்வாறு பிறருக்கு நன்மை செய்யும் போது,கிடைக்கும் பலனை இறைவனிடம் அர்ப்பணிப்பதன் மூலம், அவர்களும் இறைவனை அடையலாம்.
-
அரசர்கள், அமைச்சர்கள் போன்ற சத்திரியர்கள், தவம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பார்கள்.பிறகு அவற்றை விட்டுவிட்டு தவம் செய்ய கிழம்பிவிடுவார்கள்.ராஜயோகம் என்பது அவர்களுக்கு இயல்பான ஒன்று. அவர்கள் ராஜயோகத்தின் மூலம் இறைவனை அடையலாம்.
-
பிராமணர்கள் அறிவை பயன்படுத்துகிறார்கள்.மிகவும் கட்டுப்பாடான வாழ்வை வாழ்கிறார்கள். அனைத்தையும் தங்கள் கூர்ந்த அறிவால் ஆராய்ந்து அறிகிறார்கள். ஞானயோகம் என்பது இவர்களுக்கு இயல்பான ஒன்று.பிரம்மத்தை பற்றி ஆராய்வதால் இவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
-
ஆகவே நான்கு ஜாதியை சேர்ந்தவர்களும் தத்தம் ஜாதியில் ,தங்களுக்குரிய கடமைகளை சிறப்பாக செய்துவருவதன் மூலம் இறைவனை அடைய முடியும் என்றால், ஒருவர் ஒரு ஜாதியிருந்து இன்னொரு ஜாதிக்கு ஏன் மாறவேண்டும்? ஆன்மீக ரீதியில் எல்லாம் சரிதான்.பிறகு பிரச்சினை எங்கே ஏற்பட்டது?
-
இந்த உலகத்தில் உள்ள சிறப்பான பொருட்கள் அனைத்தையும் அரசரிடம் சமர்ப்பிக்கிறார்கள். அவர் எதை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தாலும்,அவைகள் உடனே கிடைத்துவிடுகின்றன. அவருக்கு சேவை செய்ய பலர் இருக்கிறார்கள். அவர் சொர்க்கத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள். வைசியஜாதியில் உள்ள பெரும் செல்வந்தர்கள் கூட கிட்டத்தட்ட பல இன்பங்களை அனுபவித்து மகிழ்கிறார். பிராமணன் விரும்பினால்,மன்னர்கள் அனைத்து வசதிகளையும் செய்து தரதயாராக இருப்பார்கள். ஆகவே மூன்று ஜாதியினருக்கும்,இந்த வாழ்வில் அனுபவிப்பதற்கு பல பொருட்கள் கிடைக்கின்றன.அவர்களை யாரும் தடைபோடுவதில்லை. ஆனால் சூத்திரனுக்கு?
-
பானை செய்யும் தொழிலை பரம்பரையாக செய்யும் ஒரு சூத்திரனை எடுத்துக்கொள்வோம். அவனுக்கு பானை செய்துவியாபாரம் செய்வதில் அதிக வருமானம் கிடைக்கவில்லை. ஆகவே அதிக வருமானம் கிடைக்கும் தொழிலை செய்ய விரும்புகிறான்.ஆனால் இந்த ஸ்மிருதிகள் அவனுக்கு தடைபோடுகின்றன. பரம்பரை தொழிலைவிடக்கூடாது என்கின்றன. ஏன் அவைகள் அப்படி சொல்கின்றன? பானை செய்வது பற்றிய அறிவு உங்கள் பகுதியில் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த தொழிலை விட்டுவிட்டால், பானைகள் கிடைக்காமல்,மற்றவர்கள் திண்டாடநேரும், மற்றவர்களுக்கு அந்த தொழிலும் தெரியாது. இதே போல ஒவ்வொருவரும்,தங்களது குலத்தொழிலை விட்டுவிட்டால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படும். ஆகவே உங்கள் குலத்தொழிலை எக்காரணத்தை கொண்டும்விடக்கூடாது. உங்கள் தொழிலுக்குள் வேறுயாரும் குறுக்கே வரமாட்டார்கள் என்கிறது.
-
கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது. ஆனால் வருமானம்? சில தொழில்களை செய்பவன் குறுகிய காலத்தில் அதிகம்சம்பாதித்து,வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்கிறான். சில தொழில்களை செய்பவன் குறைந்த ஊதியத்தை பெற்று வறுமையில் வாடுகிறான். இதில் அடிமை தொழில்கள் வேறு இருக்கின்றன. அடுத்தவனுக்கு அடிமையாக வேலை செய்பவனை எக்காரணத்தை கொண்டும் முன்னேறவிடமாட்டான்.முன்னேறினால் பிறகு இவனுக்கு சேவகம் செய்வது யார்? ஆகவே ஏதாவது சூத்திரன் அதிகம் சம்பாதித்து பணக்காரன் ஆகநினைத்தாலும்,மற்ற ஜாதியினர் அதை விடமாட்டார்கள். எங்கே தங்களைவிட உயர்ந்துவிடுவானோ என்ற எண்ணம் தான்.
-
ஆகவே சூத்திரனாக பிறப்பவன் பரம்பரை பரம்பரையாக அடிமைவேலை செய்ய வேண்டும். அவன் இந்த உலகத்தின் இன்பங்கள் எதையும் அனுபவிக்க கூடாது. தொடர்ந்து அவமானப்பட்டுக்கொண்டே வாழவேண்டும். சுயமாக சிந்திக்க கூடாது. மற்ற ஜாதியினரை கேள்விகேட்க கூடாது என்று எத்தனையெத்தனையோ கட்டுப்பாடுகள்.
-
காலம் மாறமாற சூத்திரர்கள் எண்ணிக்கையில் அதிகரித்தார்கள்.அதே அளவு அவர்களை அடக்கியாள சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. இறைவனை காண்பதே மனிதனின் லட்சியம் என்று சூத்திரர்களிடம் போதித்தார்கள். ஜயா எங்களுக்கு இறைவனும் வேட்டாம் வேறு எதுவும் வேண்டாம். உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி, இருக்க இடம் இன்றி சாகிறோம்.இறைவனை பற்றி எங்களிடம் சொல்லி ஏன் எங்களை மேலும் மேலும் கொல்கிறீர்கள்.. நீங்கள் எதுவும் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் எங்கள் வழியிலேயே செல்கிறோம். உங்கள் சட்டங்களை காட்டி எங்களை கொடுமைப்படுத்தாதீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
-
இவர்களை இப்படியே விட்டால், ஸ்மிருதிகளை பின்பற்ற மாட்டார்கள், மதத்தை பின்பற்ற மாட்டார்கள், இவர்கள் முன்னேறினால் நம்மையும் மதிக்க மாட்டார்கள். நம்மிடம் அடிமைவேலை செய்ய மாட்டார்கள் என்று பயந்து, மேலும் மேலும் இவர்கள் மீது அடக்குமுறையை ஏவினார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் கடைசியில் நீங்களும் வேண்டாம். உங்கள் ஸ்மிருதியும் வேண்டாம். உங்கள் மதமும் வேண்டாம், உங்கள் கடவுளும் வேண்டாம் என்று அவற்றை ஒதுக்கி தள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.அவர்கள் முன்னேறுவதற்கு எவையெல்லாம் தடைகள் என்று நினைத்தார்களோ அவைகளை ஒதுக்கி தள்ளினார்கள். சுதந்திரம் பெற்றதாக உணர்ந்தார்கள்.
-
இங்கே ஸ்மிருதிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு நாம் கேட்கும் கேள்விகள் இது தான்.
-
எல்லோரும் இறைவனை நோக்கி தான் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
-
இறைவன் தேவையில்லை என்று ஒருவன் ஏன் இந்த உலகத்தில் வாழக்கூடாது?
-
இந்த உலகத்தில் உள்ள இன்பங்களை முதலில் அனுபவிக்க விடுங்கள். பிறகு இறைவன்,மற்றவைகள் பற்றி யோசிக்கலாம் என்று ஒருவன் ஏன் சொல்லக்கூடாது?
-
இறைவனே வாழ்க்கையில் லட்சியம் என்று சொல்லும் நீங்கள் எந்த அளவுக்கு அதில் முன்னேறியிருக்கிறீர்கள்?
-
மனிதர்கள் அனைவருக்குள்ளும் ஒரே இறைவன் சமமாக உறைகிறார் என்று அறியும் மகான் அனைவரையும் சமமாக காண்கிறார் என்று தானே வேதம் சொல்கிறது. மனிதர்களுக்குள் வேறுபாட்டை காணும் நீங்கள் ஆன்மீகவாதியில்லை என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள்.
-
ஒரு ஜாதியினரின் நம்மைக்காக இன்னொரு ஜாதியை சேர்ந்தவர் என் உழைக்கவேண்டும்? உங்களுக்கு அடிமைவேலை செய்ய உங்கள் ஜாதியிலிருந்தே ஒருவரை தேர்ந்தெடுக்கலாமே?
-
பசுமாட்டை தெய்வம் என்று பூஜிக்கும் நீங்கள் ,சூத்திரர்களை பசுமாட்டைவிட கேவலமாக தானே நடத்தினீர்கள். இது தான் ஸ்மிருதிகள் உங்களுக்கு கற்றுத்தந்த பாடமா?
-
கடுமையாக வேலை செய்து,வாழும் மக்கள் மாமிசம் உண்கிறார்கள்.அதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு உயிரை கூட கொல்லாமல் யாராவது இந்த உலகத்தில் வாழமுடியுமா? ஒரு மனிதனுக்கு செய்யும் பாவத்தைவிட மாமிசம் உண்பது பெரியபாவமா?
-
தாழ்ந்த ஜாதியினர் வேதம் படிக்க கூடாது என்று வேதத்தில் எங்கே கூறப்பட்டுள்ளது?தாழ்ந்த ஜாதியினர் வேதம் படிக்க கூடாது என்ன சட்டம்போட நீங்கள் யார்?
-
ஸ்மிருதிகளில் உங்களுக்கென்று கூறப்பட்ட சட்டங்களை எந்த அளவு நீங்கள் பின்பற்றினீர்கள்?அடுத்தவனை அடக்குவதற்காக தானே ஸ்மிருதியை பயன்படுத்தினீர்கள்?
--
ஒரு காலத்தில் ஸ்மிருகள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகள் செய்திருக்கலாம், ஆனால் அதுவே பிற்காலத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கேடுவிளைவிப்பதாக மாறிவிட்டது.
-
இந்து மதத்திற்கும் ஸ்மிருதிகளுக்கும் என்ன தொடர்பு?
-
இந்துமதம் எப்போதுமே மாறாத வேதங்களை அடிப்படையாக கொண்டது.வேதம் என்பது இறைவனின் வார்த்தை. அது ஒரு போதும் மாறாது. ஆனால் ஸ்மிருதிகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஸ்மிருதிகளுக்கு தான் வேதம் தேவையே தவிர, வேதங்களுக்கு ஸ்மிருதிகள் தேவையில்லை.
-
இந்துமதம் என்பது ஸ்மிருதிகளை சார்ந்து இருக்கவில்லை. ஸ்மிருதிகளை பின்பற்றுபவர்கள் பொதுவாக இந்துமதத்தை தங்களின் துணையாக எடுத்துக்கொண்டதால் தான் இந்துமதம் தாழ்த்தப்பட்ட மக்களின் மனத்தில் கெட்டபெயரை சம்பாதித்துள்ளது.
-
நாம் முடிவாக சொல்வது இது தான். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சட்டம் இருக்கிறது. அது தான் தற்போதைய ஸ்மிருதிகள். அவைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். மக்கள் தான் ஸ்மிருதிகளை உருவாக்குபவர்கள். ஆனால் இந்துமதம் என்பது ஒரு போதும் மாறாது. இறைவன் எப்படி ஒருபோதும் மாறாதவரோ அதே போல் வேதங்கள் ஒருபோதும் மாறாதவை. இந்துமதம் ஸ்மிருதிகளை ஒருபோதும் சார்ந்து நிற்கவில்லை. இனிமேலும் சார்ந்திருக்காது.

சம்பூகன் கீழ் சாதியைச் சார்ந்தவன் அவன் தவம் இருந்ததற்காக ராமன் அவனது தலையை கொய்ததாகக் கதைவுள்ளது



கேள்வி..ஐயா சம்பூகன் கீழ் சாதியைச் சார்ந்தவன், அவன் தவம் இருந்ததற்காக ராமன் அவனது தலையை கொய்ததாகக் கதைவுள்ளது, இது தர்மத்திற்கு முரணாக உள்ளதே ஐயா?
-
தவம் புரிபவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரு பிரிவினர் உள்ளனர். கடின தவத்தின் மூலம் பல வரங்களை பெற்று மக்களை துன்புறுத்துபவர்கள் அசுரர்களாகிறார்கள்.
-
அரசர்கள் மட்டுமே தவம்புரிந்து பல அஸ்திரங்களை பெற்று நாட்டை காப்பாற்றுவார்கள் என்பதால்,மற்றவர்கள் தவம்புரிவது அந்த காலத்தில் தடைசெய்யப்பட்டிருக்கலாம்.
-
இதை தற்போதைய நிலையில் பார்ப்போம். இந்தியாவிடம் அணுஆயுதம் உள்ளது,பாகிஸ்தானிடமும் அணுஆயுதம் உள்ளது. நாம் அணுஆயுதத்தை மற்றவர்கள் மேல் வீணாக உபயோகப்படுத்தமாட்டோம் என்பது உலகிற்கே தெரியும். ஆனால் பாகிஸ்தான்? யாரிடம் சக்தி இருக்க வேண்டுமோ அவர்களிடம் சக்தி இருந்தால்தான் அது உலகிற்கு பாதுகாப்பாக இருக்கும்.பாகிஸ்தான்,வடகொரியா போன்ற நாடுகளிடம் அணுஆயுதம் இருப்பது உலகிற்கே ஆபத்து ஆகவே அதை தடுக்க வேண்டும் என்று மக்கள் இன்று நினைக்கிறார்கள்.
-
பழைய காலத்தில் தவம் மூலமாகத்தான் சக்தி வந்தது. இந்த காலத்து அணுஆயுதம் போன்றதே பழைய காலத்து தவம். தவத்தின் மூலம் பல அற்புத அஸ்திரங்களை பெறுவார்கள். புராணங்களை படித்தால் இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.ஒரு சாதாரண மனிதன் கடின தவம்புரிந்து அசுரனாகி, மக்களையும் மற்றவர்களையும் துன்புறுத்தும் கதை ஏராளம் உள்ளது.
-
அந்த காலத்து அஸ்திரங்கள் இன்றைய அணுகுண்டுபோல் பலரின் உயிரை குடித்துவிடும். ஆகவே சுயநலத்திற்காக தவம் செய்ய நினைப்பவர்களை முதலிலேயே அழித்துவிடுவது நல்லது என்று நினைத்து ராமன் சம்பூகன் என்பவனை கொன்றிருக்கலாம்(இது என் கருத்து). அவ்வாறு கொல்லாமல் விட்டால் சம்பூகன் ஒரு அசுரனாக மாறியிருக்லாம்.
-
பழைய காலத்து நிகழ்வுகளை புரிந்துகொள்ள வேண்டுமானால் பழைய காலத்தின் சூழ்நிலைக்கு செல்ல வேண்டும். இந்த காலத்தில் நின்று கொண்டு அவற்றை எடைபோட முடியாது. தற்காலத்தில் ஒருவர் வாழும் வாழ்க்கையும் முற்காலத்தில் ஒருவர் வாழும் வாழ்க்கையும் ஒரேபோலவா இருக்கிறது?
-
ராமனின் ஆட்சியில் மக்கள் அனைவரும் தங்க தட்டில் உணவு உண்டார்கள். ஏழைகளே இல்லை என்று படிக்கிறோம். இப்போது அப்படியா உள்ளது? ராமனின் ஆட்சியில் சூத்திரர்கள்கூட தங்க தட்டில்தான் உணவு உண்டிருக்கிறர்கள். அவர்களில் யாரும் ஏழைகளாக இருக்கவில்லை.
-
ஒரு வண்ணான்(சூத்திரன்) சொல்லை பெரிதென கருதி, அவனை தண்டிக்காமல், தன்உயிருக்கு உயிரான சீதையை காட்டிற்கு அனுப்பிய ராமன் , சூத்திரர்களிடம் எப்படி கொடூரமாக நடப்பான்? கொடூரமாக ஒருபோதும் நடந்ததில்லை.
-
மீனவ குலத்தை சேர்ந்த குகன் யார்? அவனை தன் தம்பிகளில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவில்லையா? ஆகவே சம்பூகன் ஒரு சூத்திரன் என்ற காரணத்தினால் ராமன் அவரை கொன்றிருக்கமாட்டார். சம்பூகனின் தவம் அன்றைய நடைமுறைக்கு எதிராக இருந்ததால் தான் அது நடந்துள்ளது.
-
‘ராமனை பழித்து பேசுவதன் மூலம் ராமனின் புகழை யாரும் அழித்துவிட முடியாது
--
சுவாமி வித்யானந்தர்
-
இந்துமதம் வாட்ஸ் அப்.9789 374 109

Friday, 1 September 2017