Tuesday, 18 March 2014

கடவுள் என்பவர் யார்?

கடவுள் என்பவர் யார்? கடவுள் தத்துவம்


கடவுள் தத்துவம்
கடவுள் என்பவர் யார்? ஜன்மாத்யஸ்ய யத யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள், அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக ! ஈச்வர அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்

இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை. அப்படியானால் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்களா? தத்துவ ஞானியின் இதுவல்ல, இது வல்ல என்ற சச்சிதானந்தக் கடவுள் பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா? இல்லை சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்பு மூர்த்தியும், நிர்க்குணமும் சகுணமும் ஒருவரே, பக்தன் வழிபடும் சகுணக் கடவுள், பிரம்மத்திலிருந்து வேறானவரோ,. வேறுபாடு உள்ளவரோ அல்ல என்பதை நாம் உணர வேண்டும். எல்லாமே இரண்டற்ற ஒன்றேயான பிரம்மம்தான், ஒருமையாகவும் தனிமையாகவும் உள்ள பிரம்மம், மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரம்மத்தை குணங்களோடு கூடிய நிலையில் அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய இறைவனாகக் கொள்கிறான்.

இதை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம். களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு மூலப்பொளிலிருந்தோ எண்ணிலடங்காத விதவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன. களிமண்ணாகப் பார்க்கும்போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத்தோற்றத்தில் அவை பலவேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றாநிலையில் மண்ணில் இருக்கவே செய்தன. மூலப் பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரே தன்மை உடையவை. ஆனால் வடிவம் பெற்ற பின்னர், அந்த வடிவம் நிலைத்து வெவ்வேறானவை. களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது. காரணம், களிமண்ணோடு களிமண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றதான். அதுபோன்றே, அறுதி உண்மையான பிரம்மத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடு இறைவன், இன்னும் தெளிவாகச் சொல்வதானால், பிரம்மத்தைப்பற்றி மனித மனத்தினால் உணரமுடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன். படைப்பு அனாதி காலந்தொட்டு என்றும் இருந்து வருவது, இறைவனும் அப்படியே

மோட்சத்தை அடைந்த பிறகு, முக்த ஆன்மா பெறுகின்ற ஏறக்குறைய எல்லையற்ற ஆற்றலையும் அறிவையும் பிரம்ம சூத்திரம் நான்காம் அத்தியாயத்தில், நான்காம் பாதத்தில் வியாச பகவான் குறிப்பிடுகிறார். ஆனால் பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கான ஆற்றலை வேறு யாரும் பெற முடியாது. அது இறைவனுக்கே உரியது என்று தொடர்கின்ற மற்றொரு சூத்திரத்தில் கூறுகிறார். துவைத உரையாசிரியர்கள். சார்ந்தே விளங்கும் இயல்புடைய ஜீவன், தனித்தலைமையுடைய இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும், முழுச் சுதந்திரத்தையும் ஒருபோதும் பெற இயலாது. என்று பொருள் கூறி இந்தச் சூத்திரத்தை வெகு எளிதாக விளக்கி விடுகிறார்கள். தீவிர துவைத உரையாசிரியரான மத்வாச்சாரியர். தமக்கே உரிய தொகுத்துக்கூறும் பாணியில் வராஹ புராணத்தில் வரும் ஒரு பாடலை மேற்கோள் காட்டி இந்தச் சூத்திரத்தை விளக்கிச் சொல்கிறார்.

இந்தச் சூத்திரத்தின் உரையில் ராமானுஜர் எழுதுகிறார். இங்கு ஓர் ஐயம் எழுப்பப்படுகிறது. முக்தி நெற்ற ஜீவன்கள் பல்வேறு ஆற்றல்களைப் பெறுகின்றன. இறைவனுக்கே உரிய பிரபஞ்சப் படைப்பு முதலான சிறப்புச் சக்தியும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே அதிபதியாக இருப்பதும் இவற்றுள் அடங்குமா? அல்லது அவை எதுவுமின்றி, முக்தி பெற்றவர்களின் பெருமையெல்லாம் அந்தப் பரம்பொருளை நேராகக் காண்பதுடன் நின்றுவிடுமா?

இங்கு ஓர் ஐயம் எழுப்பப்படுகிறது: முக்தி பெற்ற ஜீவன்கள் பல்வேறு ஆற்றல்களைப் பெறுகின்றன. இறைவனுக்கே உரிய பிரபஞ்சப் படைப்பு முதலான சிறப்புச் சக்தியும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே அதிபதியாக இருப்பதும் இவற்றுள் அடங்குமா? அல்லது அவை எதுவுமின்றி, முக்தி பெற்றவர்களின் பெருமையெல்லாம் அந்தப் பரம்பொருளை நேராகக் காண்பதுடன் நின்றுவிடுமா?

இதைத் தொடர்ந்து பின்வரும் வாதத்தை நாம் காண்கிறோம். முக்தி பெற்றவன் அனைத்து உலகங்களையும் இயக்கியாளும் தலைமையை எய்துகிறான் என்பது அறிவுபூர்வமானதே. ஏனெனில் சாஸ்திரங்களும், பரம்பொருளின் மேலான அதே நிலையை அவனும் அடைகிறான். அவனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. இனி, மேலான அதே நிலையை அடைவதும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவதும் பரம்பொருளின் தனிப் பேராற்றல் அதாவது பிரபஞ்சத்தை ஆளும் ஆற்றல் இன்றி நடைபெற முடியாது. எனவே முக்தி பெற்றவனின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. அவன் மேலான நிலையில் இறைவனோடு ஒன்றியிருக்கிறான் என்னும்போது, உலகங்களை இயக்கியாளும் ஆற்றலையும் பெறுகிறான் என்பதை ஏற்றுக்கொண்டுதானே தீர வேண்டும்!

இதற்கு நாம் தரும் பதில் இதுதான் முக்தி பெற்றவன் பிரபஞ்சத்தை ஆளும் தனித்தலைமை தவிர பிற எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். உலகை ஆள்வது என்பது உயிருள்ளவை, உயிரற்றவை ஆகியவற்றின் உடல், வாழ்க்கை, விருப்பங்கள் அனைத்தையும் வழிநடத்துவதைக் குறிப்பதாகும். முக்தி பெற்றவர்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவர்களின் ஆன்ம சொரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகள் அகன்றுவிடுவதால், பிரம்மத்தின் தடையற்ற காட்சியில் எப்போதும் ஆழ்ந்து மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். பின்வரும் சாஸ்திர மேற்கோளால் இது நிரூபிக்கப்படுகிறது யாரிடமிருந்து இந்த அனைத்துப் பொருட்களும் தோன்றியுள்ளனவோ, பிறந்தவை அனைத்தும் யாரால் வாழ்கின்றனவோ, இறந்தபின் அனைத்தும் யாரிடம் ஒடுங்குகின்றனவோ அவரே பிரம்மம்

உலகை ஆளும் ஆற்றல் முக்தி அடைந்தவர்களுக்கும் பொதுவானது என்றால், மேலே குறிப்பிட்ட மேற்கோள் பிரம்மத்திற்கான விளக்கம் என்பது இங்கு பொருந்தாமல் போகிறது. ஏனெனில் இந்த விளக்கம், அவர்மூலமாக மட்டுமே இந்தப் பிரபஞ்சம் நடைபெறுகிறது என்று கூறுகிறது. பிற எதற்கும் இல்லாத சிறப்புப் பண்புகளைக் கொண்டுதான் ஒரு பொருளைச் சரியாக விவரிக்க முடியும். பின்வரும் சாஸ்திரப் பகுதிகளில் பிரம்மத்தைப் பற்றிய பகுதியையும் பார்ப்போம்.

என் அருமை மாணவனே! ஆரம்பத்தில் இரண்டற்ற ஒரே பொருள்தான் தன்னந்தனியாக இருந்தது. அது சிந்தித்தது. பின்னர் பலவற்றைத் தோற்றுவிப்பேன். என்றது அதிலிருந்து சூடு உண்டாயிற்று.

உண்மையில் பிரம்மம் ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. அது பரிணமித்தது. அது க்ஷத்திரம் என்ற புண்ணிய வடிவினைத் தோற்றுவித்தது. வருணன், சோமன், ருத்திரன், பர்ஜன்யன், எமன், மிருத்யு, ஈசானன் முதலான தேவர்கள் க்ஷத்திரங்களே.

உண்மையில் ஆன்மா ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. வேறு எதுவும் இயங்கவில்லை. ஆன்மா உலகைப் படைக்க எண்ணம் கொண்டது, பிறகு உலகைத் தோற்றுவித்தது.

நாராயணன் மட்டுமே இருந்தார். பிரம்மனோ, ஈசானனோ, தியாவா, பிருதிவியோ, நட்சத்திரங்களோ, நீரோ, நெருப்போ, சந்திரனோ, சூரியனோ யாருமே அப்போது இல்லை. தன்னந் தனியாக இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. எனவே தியானத்தில் ஆழ்ந்தார். அதற்குப் பிறகு ஒரு மகளையும் பத்து அங்கங்களையும் இன்னும் பலவற்றையும் உருவாக்கியனார்.

இன்னும் வேறு நூல்களில் பரம்பொருளைப் பற்றிப் பேசும்போது, பூமியில் வாழ்ந்து வந்தாலும் அது பூமியிலிருந்து வேறுபட்டது. அது ஆன்மாவில் வாழ்ந்து என்றெல்லாம் உலகை ஆளும் அதன் செயலைக் கூறுகின்றன. இந்த விளக்கங்களில் எல்லாம் பிரபஞ்சத்தின்மீது இறைவனின் தனித்தன்மை பேசப் படுகிறதே தவிர, முக்தி பெற்ற ஆன்மாவைப் பற்றிய குறிப்போ அல்லது உலகத் தலைமை அதற்குக் கொடுக்கப்பட்டதாகவோ எந்தச் செய்தியும் இல்லை.

அடுத்த சூத்திரத்தை விளக்கும்போது ராமானுஜர் கூறுகிறார். அப்படியல்ல இந்தக் கருத்தை நேரடியாக மறுக்கும் பல பகுதிகள் வேதங்களில் கணாப்படுகின்றனவே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்தப் பகுதிகள் தேவர்களின் உலகில் வாழ்பவர்களான முக்த புருஷர்களின் மகிமையைத்தான் சுட்டிக்காட்டுகின்றன இதுவும் பிரச்சினைக்கு எளிதான் தீர்வாகத்தான் உள்ளது.

ராமானுஜரின் கோட்பாடு, முழுமையின் ஒருமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த முழுமைக்குள் நிலையான வேறுபாடுகள் உள்ளன என்பது அவரது கருத்து. ஆகவே இந்த வேதாந்தம் நடைமுறையில் துவைதமாகவே இருப்பதால் முக்தியடைந்த ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ராமானுஜர் மிகத் தெளிவாக, எளிதாக விளக்கி விடுகிறார்.

இனி, அத்வைத நெறியின் மாபெரும் பிரதிநிதி இதுபற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். துவைதிகளின் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் அத்வைதம் அப்படியே முழுமையாக ஏற்கிறது. அதே வேளையில் மனித இனத்தின் மிகவுயர்ந்த தெய்வீக லட்சியத்தைக் கருத்திற்கொண்டு இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் தருகிறது.

முக்தி பெற்ற பிறகும் தங்கள் ஜீவாத்ம உணர்வை இழந்து விடாமல் தனித்து வேறாக இருக்க விரும்புபவர்கள், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள எல்லா வாய்ப்புகளையும் பெறுவதோடு, குணங்களோடு கூடிய பிரம்மத்தின் பேரருளையும், பேரானந்தத்தையும் அனுபவிக்கின்றனர். இத்தகையோரைப் பற்றித்தான் பாகவத புராணம் பேசுகிறது. மன்னா! தங்கள் பிணைப்புக்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, ஆத்மானந்தத்தில் மூழ்கியிருக்கின்ற ரிஷிகள்கூட எங்கும் நிறைந்திருக்கும் இறைவனிடம் அன்புக்காகவே அன்பு செலுத்துகிறார்கள். இறைவனின் பெருமை அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது.

சாங்கியர்கள் இத்தகையோரை இன்னொரு விதமாகப் போற்றுகிறார்கள். இவர்கள் ஒரு கல்பத்தில் பிரகிருதியோடு ஒன்றாகியிருக்கின்றனர். அடுத்த கல்பத்தில் இவர்கள் உலகத்தை ஆள்பவர்களாக வரக்கூடும். ஆயினும் இவர்கள் யாரும் இறைவனுக்கு நிகராக மாட்டார்கள்.

அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு பெருநிலையை அத்வைதம் கூறுகிறது. அந்த நிலையில் படைப்பு, படைக்கப்படும் பொருள், படைப்பவர் என்று எதுவும் இல்லை. காண்பவன், காணப்படும் பொருள், காட்சி என்றில்லை. நான், நீ, அவன் என்பவை இல்லை. செய்பவன், செய்யப்படும் பொருள் , தொடர்பு எதுவும் இல்லை. அங்கே யார் யாரைக் காண்பது? இத்தகைய பெருநிலையை அடைந்தவர்கள் எல்லாவற்றையும் கடந்துவிடுகின்றனர். வாக்கும் மனமும் போக முடியாத நிலையை அடைகின்றனர். இதுவல்ல, இதுவல்ல என்று வேதங்கள் கூறுகின்ற இடத்தை எட்டிவிடுகின்றனர். இந்தப் பெருநிலையை அடையாதவர்களுக்கும், அடைய இயலாதவர்களுக்கும், பிரகிருதி, ஆன்மா, இந்த இரண்டையும் காப்பவனும் அவையிரண்டினுள் ஊடுருவியிருப்பவனும் ஆகிய இறைவன் இந்த மூன்றின் பிரிக்கவொண்ணா பிணைப்பாகிய பிரம்மத்தின் காட்சி கட்டாயமாகக் கிடைக்கிறது.

எனவேதான் பிரகலாதன் தன்னை மறந்தபோது உலகையோ, அதன் மூலகாரணத்தையோ காணவில்லை. அவன் கண்டதெல்லாம் பெயரும் உருவமுமற்ற, பிரிக்க முடியாத, எல்லையற்றதான ஒன்றைத்தான், ஆனால், தான் பிரகலாதன் என்ற நினைவு எழுந்தபோது அவன் கண்முன் உலகம் விரிந்து, கூடவே உலகின் தலைவனான அனந்த கல்யாண குணங்களின் இருப்பிடமான இறைவனும் தோன்றினார்.

பேறு பெற்றவர்களான கோபியரின் நிலையும் இதுவே. தாங்கள் இன்னார் என்பதையும், தங்கள் தனித்தன்மையையும் இழந்த நிலையில் அவர்கள் அனைவரும் கிருஷ்ணர்களாகவே மாறிவிட்டார்கள். கிருஷ்ணன் தங்கள் வழிபடுதெய்வம் என்ற எண்ணம் எழுந்தவுடன் மீண்டும் கோபியர்களானார்கள். உடனே அவர்கள் முன்

தாஸாமாவிரபூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ
பீதாம்பரதர ஸ்ரக்வீ ஸாக்ஷõன் மன்மத மன்மத 


தாமரை போன்ற முகத்தில் புன்னகை அரும்ப, பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மலர் மாலைகள் சூடி, அழகில் காதற் கடவுளான மன்மதனுக்கும் ஒரு மன்மதனாக ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார். இப்போது நாம் ஆசாரிய சங்கரரிடம் திரும்புவோம் அவர் கூறுகிறார்- சகுண பிரம்மத்தை வழிபடுவதன் மூலம் தனிமுதல் தலைவனாகிய இறைவனுடன் இணைகின்றனர். அதேவேளையில் தங்கள் சொந்த மனத்தையும் தக்க வைத்துக் கொள்கின்றனர்,. இவர்களின் பெருமை எல்லைக்கு உட்பட்டதா, எல்லையற்றதா? இந்தச் சந்தேகத்திற்கு விடையாக ஒரு வாதம் வருகிறது. அவர்களுடைய பெருமை எல்லையற்றதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் சாஸ்திரங்கள் தங்களுக்குரிய அரசை அவர்கள் பெறுகிறார்கள். எல்லா தேவதைகளும் அவர்களை வழிபடுகின்றனர். எல்லா உலகங்களிலும் அவர்களின் ஆசைகள் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. இதற்கு, விடைபோல் வியாசர் உலகை ஆளும் ஆற்றலைத் தவிர என்று எழுதுகிறார்.

படைத்தல் முதலிய சக்திகளைத் தவிர பிற அணிமா முதலிய எல்லா ஆற்றல்களையும் முக்தர்கள் பெறுகிறார்கள். உலகை இயக்கியாளும் தனித்தலைமை, என்றும் பரிபூரணனான இறைவனுக்கே எப்போதும் உரியது ஏன்? ஏனெனில் படைப்பைப் பற்றி விளக்கும் இடங்களில் எல்லா சாஸ்திரங்களும் இறைவனையே பொருளாகக் கொண்டு பேசுகின்றன. முக்த புருஷர்களைப் பற்றிய பேச்சே இல்லை. உலகை ஆளும் தனித்தலைமை பரம்பொருள் ஒருவருக்கே உரியது. படைப்பைப்பற்றிக் கூறும் நூல்களும் பரம்பொருளையே சுட்டுகின்றன. என்றும் பரிபூரணன் என்னும் அடைமொழியும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறைவனை வழிபட்டதன் விளைவாகவே, பரம்பொருளைத் தேடியதவ் பலனாகவே அணிமா முதலான சக்திகள் முக்தர்களுக்குக் கிடைத்துள்ளன என்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே முக்த ஜீவர்களுக்கு உலகை ஆளும் தனித் தலைமையில் இடமில்லை என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமின்றி, முக்த ஜீவர்கள் மனத்தைத் தங்களிடமே நிறுத்திக் கொள்வதால் அவர்களது எண்ணங்கள் மாற வாய்ப்பு உள்ளது. ஒருவர் படைக்க விரும்பினால் இன்னொருவர் அழிவை விரும்பக்கூடும். ஆகவே இத்தகைய விபரீதங்கள் நிகழாமலிருக்க, எல்லா எண்ணங்களும் ஒரு மகா எண்ணத்திற்கு அடக்கம் என்று கொள்வதே பொருத்தமானது. எனவே முக்த ஜீவர்கள் பரம்பொருளுக்கு அடங்கியவர்களே என்பதை நாம் முடிந்த முடிவாகக் கொள்ளலாம்.

அதனால் பிரம்மத்தின் சகுண வடிவத்திடமே நாம் பக்திகொள்ள முடியும் க்லேசோ அதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம் நிர்க்குண பிரம்மத்திடம் மனத்தைப் பதிய வைக்கும் பாதையில் செல்வது மிகக் கடினமானது. ஆகையால் பக்தி நமது இயல்பிற்கு ஏற்ப இயைந்து இதமாகச் செல்ல வேண்டும். மனிதவுணர்வு கலவாத பிரம்மத்தைப் பற்றிய கருத்தை நாம் கொள்வது சாத்தியமில்லை என்பது உண்மைதான். சிந்தித்தப் பார்த்தால் நாம் அறிகின்ற அனைத்தைப் பொறுத்த வரையிலும்கூட இது உண்மையே அல்லவா! அகத்திலும் புறத்திலும் நாம் பெறுகின்ற அனுபவங்கள் மற்றும் நமது கருத்துக்கள் இவற்றை நமக்குத் தருகின்ற பொருட்கள் எல்லாம் மனிதவுணர்வு கலந்ததாகவே இருக்கும், என்ற கருத்தை, உலகம் இதுவரை கண்டவர்களுள் மகத்தான மனஇயல் ஞானியான கபிலர் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுவியிருக்கிறார். மனித உடல் முதல் இறைவன் வரையிலும் நாம் அனுபவிக்கின்ற ஒவ்வொரு பொருளும் மனிதவுணர்வும் இன்னொன்றும் சேர்ந்ததே அந்த இன்னொன்று எதுவாக இருந்தாலும் சரி, இந்தத் தவிர்க்க முடியாத கலவையைத்தான் நாம் உண்மைப் பொருள் என்று பொதுவாகக் கூறுகிறோம். அது உண்மைதான். மனிதன் தன் மணத்தினால் அறியக் கூடிய பொருட்களின் உண்மை என்பது இப்படித்தான் என்றென்றும் இருக்கவும் செய்யும். எனவே இறைவன் மனிதவுணர்வு கலந்தவன் என்பதால் அவன் இல்லை என்பது வடிகட்டின முட்டாள்தனம்.

உண்மை என்ற சொல்லிற்குப் பொருள் காண்பதில் எழுந்த கருத்து வேறுபாட்டினால், மேலை நாட்டில் லட்சியவாதிகளும் பிரத்தியட்ச வாதிகளும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்,. முட்டாள் தனமான இந்தக் கருத்தும் வாய்ச்சொல் வீரம் போன்றதே. உண்மை என்னும் சொல் இதுவரை எதையெல்லாம் குறிப்பிட்டு வந்துள்ளதோ, எதையெல்லாம் பொருளாகக் கொண்டதோ அவை அத்தனையையும் தழுவி நிற்பது இறைவன் பற்றிய கருத்தாகும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு இறைவனும் உண்மை. பார்க்கப் போனால் உண்மை என்ற சொல் இப்பொழுது கூறப்பட்ட கருத்தைத் தவிர அதிகமாக வேறு எதையும் குறிக்கவில்லை. இறைவன் என்பதற்கு நமது தத்துவ விளக்கம் இதுவே.

No comments:

Post a Comment