Monday, 24 October 2022

விவேகானந்தரின் மரணத்தில் ரகசியம் என்று ஏதாவது இருக்கிறதா

 

சுவாமி விவேகானந்தருக்கு நோய் வந்தது எதனால்?

யோகிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுமா?

விவேகானந்தரின் மரணத்தில் ரகசியம் என்று ஏதாவது இருக்கிறதா?

என்று பார்க்கப்போகிறோம்

..

-

ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் அனைவரையும் ஒரேமாதிரி அளவிட முடியாது. பொதுவாக ராஜயோகம் பயில்பவர்கள் தனிமையில்,அமைதியான வாழ்க்கையை நாடி சென்றுவிடுவார்கள்.ஆகவே அவர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.உடல் நலன் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்யவும் அவர்களால் முடியும்.

-

பக்தியோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலன் பாதிக்ப்பட்டால் அது இறைவன் தந்த பரிசு என்று நினைத்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள்.அதை நீக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டார்கள்

-

ஞான யோகத்தில் செல்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படால் அதைக்குறித்து கவலைப்பட மாட்டார்கள்.உடல் என்பது பொய்த்தோற்றம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று நினைப்பார்கள்.

-

கர்மயோகத்தில் செல்லும் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால். தன்னுடைய முன்வினை பயன்களால்தான் இவ்வாறு நடக்கிறது அவைகளை அனுபவிப்பதன் மூலம் பாவங்கள் போகும் என்று நினைப்பார்கள்.ஆகவே அதற்காக வருத்தப்பட மாட்டார்கள்.

-

மருத்துவரிடம் பார்க்க கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். நாம் இங்கு விவரிப்பது மருத்துவரிடம் காண்பித்த பிறகும்,நோய் தீராமல் தொடர்ந்து வரும் அதைப்பற்றி.அதாவது தீராத நோய்கள் பற்றி..

-

சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிச்சையேற்று வாழும் நாட்களில், சரியான உணவு கிடைக்கவில்லை. அந்த காலத்தில் பட்டினியால் பல லட்சம் பேர் உயிழப்பது சர்வ சாதாரணமாக இந்தியாவில் நிகழ்ந்தது. எனவே பிச்சைக்காரர்களுக்கு உணவு கிடைப்பது கடினம்.அவ்வாறு உணவு கிடைத்தாலும் கெட்டுப்போன,மற்றவர்கள் உண்ண முடியாத உணவுகளே கிடைத்தன.சுவாமி விவேகானந்தர் பல நாட்கள் உணவு இல்லாமல் பட்டினியில் வாடினார்.இதனால் பல முறை அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது.சில சமயங்களில் மரணத்தில் விழிம்புவரை சென்று வந்துள்ளார்.

-

பின்பு அவர் வெளிநாடுகளில் இந்துமதத்தை பிரச்சாரம் செய்யும்போது,தேவையான உணவு கிடைத்தது.ஆனால் பெரும்பாலும் மாமிச உணவுகளே கிடைத்தன.  சுவாமி விவேகானந்தர் போன்ற உயர்ந்த ஞானநிலையில் இருப்பவர்களுக்கு மாமிச உணவு என்பது விஷம்போன்றது.ஆனால் அமெரிக்காவில் தற்போது கிடைப்பதுபோல காய்கறி உணவு அந்த நாட்களில் கிடைக்கவில்லை.அந்த காலத்தில் அனைவருமே மாமிசம் உண்பவர்களாகவே இருந்தார்கள்.சுவாமிஜி பெரும்பாலும் அவர்களின் வீட்டில் விருந்தாளியாகவே இருந்தார்.அவர்கள் கொடுக்கும் உணவையே உண்டு வந்தார்.சில நாட்களில் அவராகவே காய்கறி உணவை சமைத்து உண்டிருக்கிறார்.ஆனாலும் அலைச்சல்மயமான அவரது வாழ்வில் சமைத்து உண்ணும் அளவு போதிய நேரம் இல்லை.

-

இவ்வாறு தொடர்ந்து உணவு கட்டுப்பாடு இல்லாததால் ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேர்ந்தது.அது மட்டுமல்ல ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தது.அந்த காலத்தில் சர்க்கரை வியாதி என்பது தீர்க்க முடியாத வியாதியாக கருதப்பட்டது. ரத்த அழுத்தம்,ஆஸ்துமா போன்ற நோய்களும்,சிறுநீர் கோளாறுகளும் தொடர்ந்து வந்தது.இவை அனைத்திற்கும் காரணம் உணவுதான் என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

-

இதைவிட இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தர்  சிறந்த கர்மயோகி. முற்பிறவியில் அவர் ஒரு ரிஷியாக இருந்தார். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக மனிதனாக பிறந்தார். ஒரு மனிதனை ஆன்மீகத்தை நோக்கி திருப்ப வேண்டுமானால் தன்னுடைய சக்தியை அவன்மீது செலுத்தவேண்டும்.அதாவது தன்னிடம் உள்ள புண்ணியத்தின் பலனை அவனுக்கு கொடுத்து, அவனிடம் உள்ள பாவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் குரு சீடனுக்கு இடையே உள்ள கொடுக்கல் வாங்கல். சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தும்போது அவரிடமிருந்து அளவுக்கு அதிகமான ஆன்மீக சக்தி வெள்ளம்போல் பாய்ந்தது.அவரது பேச்சை கேட்பவர்கள் மெய்மறந்து அதிலேயே ஒன்றி போனார்கள்.அவர்களது மனத்தை மிக உயர்ந்த நிலைக்கு சுவாமிஜி அழைத்து சென்றார். இதன் காரணமாக பலரது பாவம் அவருக்கு வந்தது. சாதாரண குருவால் இவ்வாறு செய்ய முடியாது.அவர்களால் ஒரு சிலரது மனத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்ல முடியும்,ஆயிரக்கணக்கானவர்களை ஒரே நேரத்தில் உயர்ந்த ஆன்மீக தளத்திற்கு  அழைத்து செல்ல முடியாது.

-

அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் சுவாமிஜி பெரும் சக்தியை அங்கு செலவிட்டார். அதன்பிறகு இந்தியாவில் அவர் சொற்பொழிவாற்றும் போதும் பெரும் சக்தியை செலவிட்டார்.இவ்வாறு 12 ஆண்டுகள்  கடினமான உழைப்பிற்கு  பிறகு அவரது உடல்பிநிலை சீர்செய்ய முடியாத அளவுக்கு கெட்டுவிட்டது.

 

சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் வாழ்ந்த நாட்களில் அன்னை காளியின் காட்சி அவ்வப்போது கிடைத்துவந்தது. வெளிநாடுகளில் பணிசெய்த பிறகு காளியின் காட்சி கிடைக்கவில்லை. தன்னுடைய உடல் மூலமாகஅன்னை காளி செய்ய வேண்டி பணிகளை செய்து முடித்துவிட்டாள் அதனால்தான் தற்போது அவள் வரவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.இனி இந்த உலகத்தில் தனக்கென்று எந்த பணியும் இல்லை. தேவைப்பட்டால் மீண்டும் பிறந்து வருவேன் முடிக்க வேண்டிய பணிகளை முடிப்பேன் அதன்பிறகு எங்கிருந்து வந்தேனோ அங்கேயே அதாவது சப்தரிஷி மண்டலத்திற்கே சென்றுவிடுவேன் என்று கூறினார்

-

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில்,அவருக்கு எதிராக சிலர் இவ்வாறு பிரச்சாரம் செய்தார்கள்.அதாவது யோகிக்கு  உடல்நலம் பாதிக்காது.அவர்களுக்கு நோயே வராது.அவர்களது நோயை அவர்களாலேயே நீக்க முடியும்.இவர் உண்மையான யோகி அல்ல என்று கூறினார்கள். சுவாமிஜி இவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் புற்றுநோயால் அவதிப்பட்டுகொண்டிருக்கும்போது பலர் அவரிடம் வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.இவரது நோயையே இவரால் நீக்க முடியவில்லையே இவர் என்ன பெரிய யோகியா? என்று மக்கள் அப்போது நினைத்தார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளியிடம் இதுபற்றி கேட்டார். பிறரது பாவங்களை நீ ஏற்றுக்கொண்டதால் உனக்கு நோய் வந்திருக்கிறது என்று காளி கூறினாள்.

-

சிலர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இவ்வாறு கூறினர்-சுவாமி யோகிகளால் நோயை நீக்க முடியும்.நீங்கள் இந்த நோய் குணமடையட்டும் என்று நினைத்து உங்கள் மனத்தை உடல்மீது செலுத்தினால் நோய் குணமடைந்துவிடும் என்று கூறினார்கள். பிறரது பாவத்தை ஏற்றுள்ளதால் நோய் வந்திருக்கிறது ,இப்போது அந்த நோயை குணப்படுத்தினால் ,மீண்டும்பாவங்கள் அந்த மக்களிடமே சென்றுவிடும் என்பதால் ஸ்ரீராமகிருஷ்ணர் அதை செய்ய மறுத்துவிட்டார். எனது மனம் இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது,இந்த உடல் இறைவனின் கருவி,அவர் விரும்பியதால் நோய் வந்திருக்கிறது, இறைவனிடம் கொடுக்கப்பட்ட இந்த கருவியை.அவரிடமிருந்து எடுத்துக்கொள்வதா? அது நடக்காது என்று கூறினார்.

-

ஆகவே சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்கள் மக்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டதால்தான் நோய்களுக்கு உள்ளாகவேண்டிய சூழல் ஏற்பட்டது. மற்றவர்களின் பாவத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் வெறும்உபதேசங்களை மட்டும் கொடுக்கும் யோகிகளுக்கு நோய்வருவதில்லை.

-

 சுவாமி விவேகானந்தரின் பணி முடிந்துவிட்டது என்று அவர் உணர்ந்ததால்  ஒரு நல்ல நாளை அவரே முடிவு செய்தார்

கிழக்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த விரஜேந்திரர் என்ற இளைஞர் அப்போது சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்து வந்தார்.
-
அவரிடம் சுவாமிஜி கூறினார்,” இன்று என் உடம்பு லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. நான் நன்றாக இருக்கிறேன்என்றார்.தமது அறையில் வடமேற்கு நோக்கி ஜெபமாலையுடன் ஜெபம் செய்ய தொடங்கினார்.அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு கூறினார்.
-
சுமார் 6.30 மணியளவில் சீடரை கூப்பிட்டு,உஷ்ணமாக இருக்கிறது,அதை ஜன்னல் கதவுகளை திறந்து வை என்றார். பிறகு தமது தலையில் விசிறிமூலம் சிறிது வீசுமாறு கூறினார், சிறிது நேரம் சென்ற பிறகு போதும் இனி என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்போது அவர் கையில் ஜெபமாலையுடன் ஜெபம் செய்துகொண்டிருந்தார்.
-
சுவாமிஜி இடது பக்கமாக லேசாக படுத்திருந்தார், சிறிது நேரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை லேசாக வலது பக்கமாக திரும்பி படுத்தார்.
-
திடீரென அவரது கைள் நடுங்கின. கனவு கண்ட குழந்தை அழுவதுபோல சுவாமிஜியிடமிருந்து ஒரு சத்தம் எழுந்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அதேபோல் ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்பதம்

-

.........

அப்போது சுவாமிஜிக்கு வயது 39வருடம் , 5மாதம் 24 நாள் ஆகியிருந்தது. அவர்40வது வயதை பார்க்கவில்லை

-

அப்போது அவர் ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்தியிருந்தார். அவரது கண்கள் மேல் நோக்கியவாறு இருந்தது.

-

சுவாமிஜி மகாசமாதி அடைந்த அந்த நேரத்தில் அவருக்கு பிரியமான சென்னையில் இருந்த சகோதர துறவி ராமகிருஷ்ணானந்தருக்கு(சசி) ஒரு குரல் தெளிவாக கேட்டது.-சசி!நான் உடம்பை உதறிவிட்டேன்!

-

கிழிந்த ஆடையை வீசி எறிவதுபோல் என் உடம்பை களைந்துவிடுவது நல்லதென்று ஒருநாள் தோன்றலாம்,ஆனாலும் நான் வேலை செய்வதை நிறுத்தமாட்டேன். உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை தூண்டிக்கொண்டே இருப்பேன்.அவர்கள் அத்தனை பேரும் தாங்கள் இறைவனுடன் ஒன்றுபட்டிப்பதை உணரும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்

என்று அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

 

சமாதி நிலையில் உடலைவிட்டு விடுதல் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

-

உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் சக்திகளை சமப்படுத்தி, ஆதி நிலையான இயக்கமற்ற நிலைக்கு கொண்டு வந்தால் அது சமாதி

-

உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பிராணனை நிறுத்த வேண்டும். அதற்கு உள் மூச்சை உள்யேயே நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தும்போது இதயம் இயங்குவது நின்றுவிடும். அதனால் ரத்தஓட்டம் நிற்கிறது. படிப்படியாக உடலின் இயக்கங்கள் நின்றுவிடும். மனத்தை ஒருநிலைப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம். மனதில் எண்ணங்கள் எழுந்தால் மூச்சு இயங்க ஆரம்பித்துவிடும். ஆகவே சமாதிநிலையில் மனம் ஒரே எண்ணத்தில் ஒருநிலைப்படும்.

-

இவ்வாறு மனம் ஒருநிலைப்பட்டு,மூச்சு நின்று,உடலின் இயக்கங்கள்  நிற்கும்போது உடலைவிட்டு சூட்சுமசரீரம் வெளியேறுகிறது.இவ்வாறு மனம் ஒடுங்கிய நிலையில் வெளியேறும் சூட்சு சரீரம் பூலோகத்தை கடந்து அனைத்து உலகங்களையும் கடந்து பிரம்மதரிசனம் பெறுகிறது. இந்த பிரம்மத்தில் ஒன்று கலந்தால் மீண்டும் உடலுக்குள் அந்த சூட்சுமசரீரம் வராது. உடல் அழிந்துவிடும். ஒருவேளை மீண்டும் உடலுக்குள் வந்தால் பிராணன் இயங்க ஆரம்பிக்கும். மூச்சு இயங்கும். இதயம் இயங்க ஆரம்பிக்கும். உடல் இயங்க ஆரம்பிக்கும்.

-

சிலரது உடலைவிட்டு சூட்சுசீரம் வெளியேறி பிரம்மதரிசனம் பெற்ற நிலையில் வாழும். பிரம்மத்துடன் ஒன்று கலக்காது.அதேவேளையில் மீண்டும் இந்த உடலுக்குள் வராது. அவ்வாறு பல ஆண்டுகள் சூட்சுமநிலையில் வாழ்பவர்கள் ரிஷிகள்.யாராவது இதேபோல் சமாதிநிலையில் உடலைவிட்டு வெளியேறினால் இப்படிப்பட்ட சூட்சுமநிலையில் வாழும் ரிஷிகளை காணலாம்.

-

மரணவேளையில் சுவாமி விவேகானந்தர் இதேபோல் சமாதிநிலையில் உடலைவிட்டு வெளியேறி சூட்சும உடலோடு வாழ்ந்துவருகிறார். அரவிந்தர் போன்ற மகான்களுக்கு சூட்சும உடலோடு காட்சி கொடுத்ததையும்.அவருக்கு யோகத்தை பற்றி பயிற்றுவித்ததையும் அரவிந்தரது வார்த்தைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்

-

சுதந்திரபோராட்ட காலத்தில் தாய்நாட்டின் சேவையில் அரசியல் களத்தில் இருந்த அரவிந்தருக்கு ஓராண்டு சிறைவாசம் கிடைத்தது. சிறையைத் தம் யோக மந்திரமாக அமைத்துக் கொண்ட அரவிந்தருக்கு நாராயண தரிசனம் கிட்டியது. வாசுதேவன் சிறையெங்கும் நிறைந்தான், போர்த்திக் கொள்ளும் கம்பளியிலும், காவல் அதிகாரியிடத்திலும் சிறைத்தோட்டத்தின் மரத்திலும் எங்கெங்கு காணினும் அவருக்கு வாசுதேவன் காட்சியளித்தான்.

சிறையில் தனியறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். யோகத்தில் அமிழ்ந்து மனிதகுலம் தெய்விகமாவது எப்போது என்று யோசித்திருந்த அவருக்கு சுவாமி விவேகானந்தர் காட்சியளித்தார்.

அதிமானஸம் எனும் நூலைப் பற்றி சுவாமிஜி தமக்கு விளக்கிக் காட்டியதாக அரவிந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

விவேகானந்தர் அதிமானஸம் என்ற சொல்லை உபயோகிக்கவில்லை அதிமானஸம் என்பது எனது சொல்லாக்கம். அவர் என்னிடம் இதுதான் அது அதுதான் இது என்றெல்லாம் சொன்னார். கையால் சுட்டிக்காட்டியபடி அவர் போதித்தார். அலிப்பூர் சிறையில் 15 நாட்கள் அவர் என்னிடம் வந்தார். அவர் கூறுவதை நான் நன்கு புரிந்து கொள்ளும்வரை எனக்குப் போதித்தார். மனம் கடந்த சைதன்யத்தை எனக்குப் புரிய வைத்தார். அதுவே அதிமானஸ சைதன்யத்திற்கு இட்டுச் செல்லும் சத்திய சைதன்யம். என் மூளையில் அனைத்தும் படியும்வரை என்னை அவர் விட்டாரில்லை.

-

இவ்வாறு  அரவிந்தருக்கு சூட்சு உருவில் வந்து ஆன்மீகத்தை போதித்துள்ளார்.

-

இன்னும் பலருக்கு சுவாமி விவேகானந்தர் காட்சி கொடுத்திருக்கிறார்.

அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

 

இந்த மனித குலம் இறைவனுடன் ஒன்றுபடும்வரை தான் வாழ்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.